காற்றை சுத்திகரித்து, வீட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் சில செடிகள் பற்றிய தொகுப்பு.
Mint
காற்று மாசுபாடு என்பது தொழிற்சாலைகளில் மட்டும்தான், சாலைகளில் மட்டும்தான் என்ற நிலையெல்லாம் மாறி இன்று நகரங்களில் நம் வீட்டுக்குள்ளேயே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை வந்துவிட்டது. இதற்கு ஏர் பியூரிஃபயர்கள் மட்டுமே பலரது வீடுகளில் தீர்வாக இருக்கின்றன. ஆனால், அதைத் தவிர்த்து இயற்கையாகவே ஒரு தீர்வு இருக்கிறது. அது தோட்டம்!
வீட்டைச் சுற்றிச் செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்பது காற்றின் தரத்தை பலமடங்கு உயர்த்தும். இடம் குறைவாக இருப்பதாக நினைப்பவர்கள் தாராளமாகச் செடிகளை நாடலாம். அதுவும் இந்த 6 செடிகள் காற்றின் தரத்தை உயர்த்துவதோடு, ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.
மரூள் (snake plant)
நாசாவால் அடையாளம் காணப்பட்ட சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் ஒன்றான மருள், கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு, பென்சீன், சைலீன் மற்றும் ட்ரைக்ளோரெத்திலீன் உள்ளிட்ட குறைந்தது 107 அறியப்பட்ட காற்று மாசுபாடுகளை நீக்குகிறது. மருள், இரவு முழுவதும் ஏராளமான ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இது படுக்கையறையில் வைக்க ஒரு சிறந்த தாவரமாகும். இது தண்ணீரின்றி பல வாரங்கள் வாழக்கூடியது. குறைந்த வெளிச்சம் உள்ள எந்தவொரு காலநிலையிலும் செழித்து வளரும்.
மணிபிளான்ட் (Money plant)
இது அதிக செல்வத்தைக் கொண்டுவருகிறதோ இல்லையோ… நல்ல காற்றுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது ஒரு சக்திவாய்ந்த காற்று சுத்திகரிப்பு தாவரமாகும், இது உங்கள் வீட்டிலுள்ள காற்றை மிகவும் திறம்பட சுத்தம் செய்யும், அதிகளவில் வீட்டில் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று மணி பிளான்ட். நேரடி சூரிய வெளிச்சம் கிடைக்காத பகுதியிலும் வளரும் என்பதால் வீட்டினுள்ளும் வளர்ப்பதற்கு ஏற்றது. இந்தச் செடி வளர்ப்பில் முக்கியமான விஷயம், இதன் இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை. எனவே, செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கவேண்டும்.
பீஸ் லில்லி (Peace lily):
பீஸ் லில்லி என்பது காடுகளில் வாழும் பச்சை தாவரமாகும், இது அழகான வெள்ளை பூக்களைக் கொண்டது. இது ஒரு சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரம் ஆகும். இது ஃபர்னிச்சர், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றால் உருவாகும் தூசுகளையும் தன்னுடைய பெரிய இலைகளின் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளும். சிறந்த காற்று சுத்திகரிப்பிற்கான தாவரங்களாக நாசா குறிப்பிட்டுள்ளவற்றில் முக்கியமான தாவரம் இதுவாகும்.
கற்றாழை (Aloevera):
சருமம் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை தீர்வை தரவல்லது என்பது நம் மருத்துவத்தில் காலங்காலமாக இருக்கும் விஷயம். அதைத் தவிர்த்து காற்று சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இதை வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கைகொடுக்கும். காற்றில் எப்போதும் புத்துணர்ச்சி இருப்பதை உறுதிசெய்கிறது இது.
புதினா (Mint)
சமையலிலும், மருத்துவத்திலும் புதினாவின் பங்கு அனைவரும் அறிந்ததே. இதன் இலைகள் மிகவும் மணமுடையவை. இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் இதை வளர்ப்பதன் மூலம் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி நீடித்திருக்கும். மேலும், ஈ, எறும்புகள், எலிகள் போன்றவற்றின் தாக்கத்தையும் இது மட்டுப்படுத்தும்.
எலுமிச்சைப்புல் (Lemon grass)
இதில் சிட்ரல் (citral) என்னும் வேதிப்பொருள் உள்ளதால், மனச்சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும், காற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும், கிருமிநாசினியாகவும் ஓர் இயற்கை கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்