உறுதிமிக்க உழவு மாடு – காங்கேயம் காளை

காங்கேயம் காளைகள் உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதால் உம்பளச்சேரி என்ற தனி மாட்டினம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காங்கேயம் மாட்டின் தலை அமைப்பைத் தவிர மற்ற உடற்கூறுகளை உம்பளச்சேரி மாட்டிலும் காணலாம்.

காங்கேயத்தைவிட உயரம் குறைந்த இந்த மாட்டின் கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதியில் இந்த மாடுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் உம்பளச்சேரி என்ற ஊரின் பெயரால் இந்த மாடுகள் அழைக்கப்படுகின்றன. நாகை, திருவாரூர் மாவட்டங்களின் சதுப்பு நிலப் பகுதிகளில் உப்பன் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகளை மேய்ந்து வளர்ந்ததால், உப்பளச்சேரி என்ற பெயர் மருவி உம்பளச்சேரி என இம்மாடுகள் பெயர் பெற்றிருக்கலாம்.

உம்பளச்சேரி மாடு பிறக்கும்போது சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆறு மாதங்கள் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. முகம், கால், வால் பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். உம்பளச்சேரி இளம் காளைகளின் கொம்பைத் தீய்க்கும் அல்லது வெட்டும் பழக்கம் இருக்கிறது.

இந்த இனக் காளைகளுக்கு ஜதி மாடு, மொட்டை மாடு, மோழை மாடு, தெற்கத்தி மாடு, தஞ்சாவூர் மாடு என வேறு பெயர்கள் உண்டு. பசுக்கள் ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, சூரியங்காட்டு மாடு, கணபதியான் மாடு எனக் காரணப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

பொதுவாக, பாலுக்காக இந்த மாடு வளர்க்கப்படுவதில்லை என்ற போதிலும், இந்த இனப் பசுக்கள் ஒரு நாளைக்கு 2.5 லிட்டரும் ஆண்டுக்குச் சராசரியாக 300 லிட்டரும் பால் தரும். இதன் பால் கெட்டித்தன்மையும் நோய் எதிர்ப்பு ஆற்றலும் மிகுந்தது.

இந்த இனக் காளைகள் காவிரிப் பாசன வயல்களின் ஆழமான சேற்றில் உழைக்கக்கூடியவை. குறைந்த உணவுடன் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உழவு செய்யும் ஆற்றல் மிக்கவை. மேலும், 2,500 எடை கொண்ட பாரத்தை சுமார் 20 கி.மீ. தூரம்வரை இழுத்துச் செல்லும் ஆற்றலும் கொண்டவை.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *