‘நல்லா படிச்சு மார்க் வாங்கலேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்’ என்று குழந்தைகளைக் கண்டிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால் நன்றாகப் படித்து பிளஸ் டூ தேர்வில் 93 சதவீதம் மதிப்பெண்களை எடுத்த ராஜமார்த்தாண்டனிடம், அவருடைய பெற்றோர்கள் ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்கள்.
“எனக்கு மாடு வேண்டும்” என்றார் ராஜமார்த்தாண்டன். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது குடும்பம். தொடர்ந்து படித்துப் பொறியாளராகவும், ஜாம்ஷெட்பூரிலிருக்கும் புகழ்பெற்ற XLRI கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ.வும் படித்து முடித்தார்.
“மதுரை சட்டப்பேரவை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகியான என்னுடைய தாத்தா ஆர்.வி.சுவாமிநாதன். அவர்தான் எனக்கு முன்மாதிரி. ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் தாத்தாவின் பண்ணையில் இருந்தன. தாத்தாவை என்னுடைய ஆதர்சமாகக் கருதுவதால்தான் எம்.பி.ஏ. முடித்துவிட்டு மாட்டுக்கார வேலன் ஆனேன்” என்னும் ராஜமார்த்தாண்டன், தன் வாழ்க்கைக்கான அடித்தளமாகவே மாட்டுப் பண்ணையையும் விவசாயத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். சென்னை அருகே திருப்போரூரில் நாட்டு மாடுகள் பண்ணை மற்றும் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுவரும் அவர் பேசியதிலிருந்து…
எந்தப் புள்ளியில் பொறியாளர் வேலையை விட்டுவிட வேண்டும் என்று தோன்றியது?
படிப்பை முடித்ததும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு யுண்டாய் கார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்தேன். வாழ்க்கையில் என்னவோ ஒன்று குறைவது போலிருந்தது. என்னைப் போன்றே நண்பர்கள் சிலருக்கும் தோன்றியது. முதல் கட்டமாகத் திருப்போரூரில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கினேன். சோளம், பயறு வகைகள், கீரைகள் பயிரிட்டேன்.
அதற்குப் பிறகும், மாட்டின் மீதான என்னுடைய ஈர்ப்பு அப்படியேதான் இருந்தது. காலையில் குடிக்கும் காபியிலிருந்து சாப்பாடுவரை எனக்கு எதுவுமே சம்பந்தமில்லாததுபோல் தோன்றியது. சுத்திகரிக்கப்பட்ட பால், பாலில் கலப்படம் என்று தினம் தினம் எவ்வளவோ செய்திகள். என்னால் முடிந்த அளவுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தரமான பாலை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்காவது கொடுக்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவே, ‘சுத் மில்க்’ நிறுவனத்தின் அடிப்படை.
விவசாயம் செய்ய யாரெல்லாம் உங்களுக்கு உத்வேகம் தந்தார்கள்?
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் மூலம் விவசாயத்தின் நுணுக்கங்களை எளிமையாகத் தெரிந்துகொண்டேன். எல்லோருக்கும் வாழ்க்கை முறையை வகுத்துத் தந்திருக்கும் நம்மாழ்வார் வழியைப் பின்தொடர்கிறேன்.
உங்கள் பண்ணையில் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?
சோளம், உளுந்து, காராமணி, கீரை, வாழை, முருங்கை ஆகியவற்றைப் பயிர் செய்கிறோம். எங்களுடைய மாடுகளுக்குத் தீனி போடுவதற்காகவே, மூன்று ஏக்கர் பரப்பில் புல்லையும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான CO4 தீவனப் புல் ரகம், தீவனச் சோளம் ஆகியவற்றை வளர்க்கிறோம். இதுதவிர ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியில் உள்ள நண்பர்களின் பண்ணையிலிருந்து வைக்கோல், புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்றவற்றை வாங்கிக்கொள்கிறோம். ஜீவாம்ருதக் கரைசல் இயற்கைப் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை நாங்களே தயாரித்துக்கொள்கிறோம். பெரும்பாலும் வெளியிலிருந்து எந்த இடுபொருளையும் எங்கள் பண்ணையில் பயன்படுத்துவதில்லை.
நாட்டு மாடு வளர்ப்பதன் அவசியம், முக்கியத்துவம் என்ன? என்னென்ன ரக மாடுகளை வைத்திருக்கிறீர்கள்?
உயிர்ச்சூழல் சங்கிலி அறுந்துவிடாமல் பாதுகாப்பதில் மனிதர்களுக்கு உற்ற தோழமையுடன் இருப்பவை நாட்டு மாடுகள்தான். நாட்டு மாடுகளைப் பராமரிப்பது எளிது. பராமரிப்புச் செலவும் குறைவு. நம் நாட்டு சுற்றுச்சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் திறன் அயல் நாட்டு மாடுகளுக்கு இருக்காது.
நம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை நம் நாட்டு மாட்டு இனங்கள்தான். அயல் ரக மாடுகளிலும் கலப்பின மாடுகளிலும் நோய் மூலக்கூறு கொண்ட A1 புரதம் இருக்கும். நம் நாட்டு மாட்டு ரகங்களில் இந்த வகையான புரதம் இருப்பதில்லை. பால் அதிகம் தருகிறது என்னும் காரணத்துக்காகவே அயல்நாட்டு ரகங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன.
உண்மையில் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள், திமில்கள் இருப்பதில்லை. அவற்றின் வியர்வை, பால் மற்றும் கோமயத்தின் மூலமாகவே வெளியாகிறது. இந்த அடிப்படையில் தரத்தைக் கணக்கிட்டால், நம் நாட்டு மாட்டு இனத்தின் பால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. நம் நாட்டிலேயே 40 இன மாடுகள் உள்ளன. இவற்றில் அதிகம் பால் கொடுப்பவை ஆறு இனங்கள். இதில் குஜராத்தின் கிர், கான்கிரேஜ், ராஜஸ்தானின் தார்பார்க்கர் ஆகிய இனங்களில் 20 மாடுகளை என்னுடைய பண்ணையில் வளர்க்கிறேன்.
உங்கள் பண்ணையில் கிடைக்கும் விளைச்சல், பொருட்களை எப்படி விற்பனை செய்கிறீர்கள்?
ஒரு நாளைக்குச் சராசரியாக 120 லிட்டர் பாலை அவை தருகின்றன. என்னுடைய `சுத் ஃபார்ம்’ நிறுவனம் மூலமாக ஒரு லிட்டர் 85 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். பழைய மகாபலிபுரச் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நகர்ப் பகுதிகளில் அண்ணா நகர் வரையிலும்கூட எங்கள் பண்ணையின் பால் செல்கிறது. `நல்ல கீரை’ அமைப்பு, சில பசுமை அங்காடிகளில் எங்கள் பண்ணையின் பால் அன்றாடம் விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் விற்பனை செய்யும் பால், பனீர் போன்றவற்றின் சிறப்பம்சம் என்ன?
எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலில், தண்ணீரைச் சேர்த்துப் பயன்படுத்தினாலும், தரம் நன்றாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். பாலைப் பொறுத்தவரை அன்றாடம் 120 லிட்டருக்கு அதிகமாகவும்கூட எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், உடனடியாக உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் இல்லை. எங்களுடைய பால் பொருட்களான பனீர், இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்தப் பண்ணைக்குத் தேவைப்பட்ட முதலீடு, லாபம் பற்றி சொல்லுங்கள்?
இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் பண்ணையில் வேலை செய்கிறார்கள். ஒரு குதிரையும் வைத்திருக்கிறேன். புல்கட்டுகளையும் விவசாயத்துக்குத் தேவையான அன்றாட வேலைகளையும் செய்வதற்குக் குதிரை வண்டியைப் பயன்படுத்துகிறோம்.
ஏழு ஏக்கருக்கான பயிரிடும் செலவு, மாட்டுப் பண்ணை பராமரிப்பு, பண்ணையாட்களுக்கு ஊதியம் எல்லாம் சேர்த்தால் மாதம் சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். பாலின் மூலமாகவும், தானியங்கள் மூலமாகவும் சராசரியாக மூன்று லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. செலவு போக, மாதம் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
ஒரு விவசாயியாக மாறியதால் கிடைத்த தனித்தன்மையான விஷயங்கள்?
அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. என்ன படித்து, என்ன பெரிய வேலையில், எவ்வளவு அதிகமாகச் சம்பளம் வாங்கினாலும் நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும் சந்தோஷத்துக்கு ஈடு இணையே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சந்தோஷமான வாழ்க்கையை ஒரு விவசாயியாக, ஒரு மாட்டுப் பண்ணைக்காரனாக நான் வாழ்கிறேன். தலைகீழாக மாறிவரும் இந்த உலகில், இதைத் தனித்தன்மையான விஷயமாக நான் நினைக்கிறேன்.
உங்களைப் போலப் படித்துவிட்டு, விவசாயத்துக்கு வருபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
விவசாயம் என்பதும் ஒரு தொழில்தான் என்பதைப் புரிந்துகொண்டு வர வேண்டும். இதில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன் சில வருடங்கள் அல்லது சில மாதங்களாவது விவசாயப் பண்ணையில் நேரடியாகத் தங்கிப் பயிற்சி பெற வேண்டும். எந்த வேலையிலும் ஓய்வு இருக்கும். ஆனால் விவசாயம் செய்யும்போது, ஓய்வை எதிர்பார்க்க முடியாது. 24X7 உழைப்பதற்கு நேரத்தைச் செலவிடத் தயாராக இருக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாமல் பணத்தை மட்டும் முதலீடு செய்வதைவிட, பணத்துடன் உழைப்பதற்குத் தயாராக இளைஞர்கள் வர வேண்டும்.
ராஜ மார்த்தாண்டனைத் தொடர்புகொள்ள: 09841411170
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Wow
சரியான முன்மாதிரி…வாழ்த்துக்கள்
Migavum payanulla katturai , valarum vivasaya ilaignarkalukku RoMBA ookamulla thagaval.vaalthukkal
Great boss…congrats…v also planned the same project as ur’s…
Congratulations
நல்ல முயர்சி
I need nattumadu bro.sagiwall cow irundha kidaikuma
I wants like u doing
வாழ்த்துக்கள்.
I AM VERY HAPPY .THAT MANY INFORMATION DAIRY FORM WORK
I AM LIKE IT