கறவை மாட்டுக்கு மடி நோய்ப் பராமரிப்பு

 

கறவை மாடுகளைப் பொறுத்தமட்டில் மடி, பால் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை போல் செயல்படுகிறது. இந்த மடி, ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துப் பொருட்களையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு உள்ளே உள்ள சுரப்புச் செல்கள் உதவியால் பால் உற்பத்தி செய்கிறது. ஆகவே, மடி நோய், பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஒரு முக்கிய நோயாகப் பார்க்கப்படுகிறது.

நோய் அறிகுறிகள்

நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட மாடு, கீழ்க்கண்ட நோய்க் குறியீடுகளை வெளிப்படுத்தும். மடி சூடாக இருக்கலாம். நாம் தொடும்போது வலியுடன் இருப்பதை நம்மால் உணர முடியும். மேலும் சில நேரங்களில் ரப்பர் பந்து போல வீக்கமடைந்து காணப்படும். சில மாடுகளின் மடி சிவந்தும் காணப்படலாம். இவை அல்லாது பாலைக் கொண்டு இந்த நோயை அறிந்துகொள்ள முடியும்.

# பால் திரித்திரியாக வரலாம்
# தண்ணீராகக்கூட வரலாம்
# ரத்தம் கலந்து வரலாம்
# உப்புத் தன்மையுள்ள பாலாகக்கூட வரக் கூடும்

நோயின் தாக்கம்

இதனால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் பால் உற்பத்திச் செல்களும் பாதிப்படைந்து அந்த மாடு, பாதிக்கப்பட்ட காம்பில் உற்பத்தித் திறனை இழக்கிறது. எதிர்காலத்தில் அதன் பால் உற்பத்தியும் குறைய சாத்தியம் உள்ளது. அது மட்டுமல்லாமல் சில வகையான நோய்களில் மடி ஒரு மரக்கட்டை (Fibrosis) போன்ற அமைப்பில் வீங்கும். அவ்வாறு உள்ள கறவை மாட்டின் பால் உற்பத்தி ஏறக்குறைய 40-லிருந்து 50 சதவீதம் நிச்சயம் குறைந்துவிடும்.

சில பசுக்களில் மடி மோசமாகப் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் சீழ் பிடித்துத் திறந்த புண்போல் இருப்பதைக் காணமுடியும். ஆக, இந்த மடி நோயானது எவ்வாறு இருப்பினும் ஒரு பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றிய தடுப்பு முறைகளை நாம் அறிவது முக்கியம். இந்த மடி நோய் பெரும்பாலும் பாக்டீரியா நுண்கிருமிகளால் அதிகமாக ஏற்படும். மேலும் சில வகை நச்சு உயிரிகள், சில வகைப் பூஞ்சை, பராமரிப்புக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால், இந்த நோய் வருகிறது.

தடுப்பு முறைகள்: கொட்டகைத் தூய்மை

தடுப்பு முறைகளைப் பொறுத்தமட்டில் எப்போதும் சுற்றுச்சூழல் தூய்மை, அதாவது கொட்டகைத் தூய்மை முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே, கொட்டகைப் பராமரிப்பை முக்கியமாகக் கருத வேண்டும். பால் கறக்கும் முன் தண்ணீர் தெளித்துக் கட்டுத்தரையைச் சுத்தப்படுத்துவது அவசியம். கூடுமானவரை கழிவு நீர் தேங்காதவாறு செய்வது அவசியம்.

பால் கறப்பவர் தூய்மை

கறப்பவர் பால் கறப்பதற்கு முன்பு தன் கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தமாகப் பால் கறப்பதை உறுதிசெய்ய வேண்டும். மடிநோய் தடுக்கும் வழிவகையைக் கீழ்கண்ட வகையில் உறுதிசெய்ய வேண்டும்.
* பால் கறப்பவர் பால் மடியில் பால் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், பாலை ஒட்டக் கறக்க வேண்டும்.
* பால் கறப்பவர் முழுக் கையை பயன்படுத்திப் பால் கறப்பதை வலியுறுத்த வேண்டும்.
* நிறைய மாடுகள் இருக்கும் பட்சத்தில் வயது குறைந்த மாட்டிலிருந்து கறவையை ஆரம்பிக்கவேண்டும், இறுதியாக வயது முதிர்ந்த மாடுகளில் பால் கறக்கலாம்.
* மடிநோய் பாதிப்புக்குள்ளான மாடுகளைக் கடைசியில் கறக்க வேண்டும்.
* தூய்மையான ஆடைகளை உடுத்திப் பால் கறக்க வேண்டும்.
* பால் கறப்பவர் தொற்று வியாதிகள் (தொற்று) தாக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும்.
* பால் கறப்பவர் எந்தவிதக் காயங்களுடனும் பால் கறக்கக் கூடாது.
*நகங்களை ஒட்ட வெட்டி இருக்க வேண்டும்.

பால் கறப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை

பால் கறப்பதற்கு முன்பு பண்ணையாளர்கள், பால் கறப்பவர் கீழ்க்கண்டவற்றைக் கருத்தில்கொள்வதன் மூலம் மடி நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

* பால் மடியின் சுத்தத்தை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
* பால் மடியை கிருமி நாசினி கொண்டு தூய்மையாகக் கழுவ வேண்டும் ( பொட்டாசியம் பெர்மாங்கனேட்). பிறகு தூய்மையான துணி கொண்டு மடியைச் சுத்தமாகத் துடைக்க வேண்டும்.
* பால் கறக்கும் இயந்திரம் கொண்டு பால் கறக்கும்பட்சத்தில் இயந்திரத்தின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்.
* பால் கறக்கும் முன் வாலை ஒட்டக் கட்டுவதை உறுதிசெய்ய வேண்டும்
*இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பாலின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
*பால் கறவை வற்றும் தறுவாயில் காம்பினுள் நோய் எதிர்ப்பு மருந்துகளைச் செலுத்துவதே நல்ல பராமரிப்பு (Dry Cow Therapy).
*காம்பு, மடி ஆகிய பகுதிகளில் எந்தவிதக் காயங்களும் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். காயங்களுடன் இருக்கும் மாடுகளைத் தனியே பிரித்து முதலுதவி / மருத்துவ உதவிசெய்து முழுவதும் குணமானதை உறுதிசெய்த பிறகு மற்ற பாலுடன் கலக்கலாம்.
* கறவை மாடுகளுக்கு பூஞ்சைக் காளானால் பாதிக்கப்பட்ட தீவனத்தைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும், பூஞ்சை காளான்
மூலமும் மடி நோய் ஏற்படலாம்.

பால் கறந்து முடித்த பிறகு

பால் கறவை முடிந்த பிறகு மாடானது உடனே கீழே படுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் கறந்து முடித்த பிறகு அந்தப் பால் காம்பில் உள்ள துவாரம் 20-லிருந்து 30 நிமிடங்கள் திறந்திருக்கும்
அதன் வழியே தரையில் உள்ள கிருமிகள் உட்சென்று நோயை ஏற்படுத்த அதிக சாத்தியம் உள்ளது. இதைத் தடுக்க பசுந்தீவனம் (அ) உலர்தீவனத்தைப் பால் கறந்து முடித்தவுடன் கொடுக்கும் பட்சத்தில் மாடு உடனே கீழே படுக்காது.
அடிக்கடி நோய்ப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மாடுகளை மற்ற மாடுகளில் இருந்து நீக்குவது சிறந்த பராமரிப்பு.
சினை மாடுகளைக் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். கூடுமானவரையில் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவைச் சினை மாடுகளுக்கு அளிக்கும் பட்சத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மடிநோயைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
பால் கறந்த பிறகு பால் காம்புகளை அயோடின் திரவத்தில் முழுகச்செய்ய வேண்டும் (Post Milking Iodine Dipping). மேற்கூறியவாறு செய்வதன் மூலம் மடிநோய் வரும் சாத்தியத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

மடி நோய் மருந்து

250 கிராம் சோற்றுக்கற்றாழையை எடுத்து நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். அதைச் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். இத்துடன் 50 கிராம் விரலி மஞ்சள் , 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை 100 மி.லி. தண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மடியை ஒட்ட கறந்த பிறகு, பகலில் நாள் ஒன்றுக்கு 8-10 முறை வீதம் 3 நாட்களுக்கு மடியில் இதை அடித்துவிட வேண்டும். இரவு நேரத்தில் மேற்சொன்ன கலவையை ஒரு கை அளவில் எடுத்துக்கொண்டு 50 மி.லி. அளவு நல்லெண்ணெய்யுடன் கலந்து மடியின் மீது மேற்பூச்சாகப் பூச வேண்டும்.

கட்டுரையாளர்,
சிக்கல் கால்நடை பராமரிப்பு
வேளாண்மை அறிவியல் நிலையத் தொழில்நுட்ப வல்லுநர்
தொடர்புக்கு : 9976645554 .

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *