அதிகமாகும் சாகுபடிச் செலவு, விலையின்மை… போன்ற பல காரணங்களால் விவசாயத்தைக் கைவிடும் விவசாயிகள் வருமானத்துக்காகத் தேர்ந்தெடுப்பது, ஆடு, மாடு, கோழி, மீன் என கால்நடை வளர்ப்பைத்தான்.
குறிப்பாக, தண்ணீர் வளம் அதிகமுள்ள விவசாயிகளின் தேர்வாக இருப்பது, உள்நாட்டு மீன் வளர்ப்புதான். மீன் இறைச்சியானது கொழுப்பு குறைந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதால், அதற்கு நிலையான சந்தை வாய்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. அதனால், முறையாக மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம். இவர் கலப்பு மீன் வளர்ப்பில் (கூட்டுமீன் வளர்ப்பு-Composite Fish Farming என்று சொல்வார்கள்) ஈடுபட்டு வருகிறார்.
திருவண்ணாமலையில் இருந்து ஏழாவது கிலோமீட்டரில் இருக்கிறது, புது மல்லவாடி. இங்கிருக்கும் ஆறுமுகத்தின் பண்ணைக்கு ஒரு காலைப் பொழுதில் சென்றோம். தென்னை, வாழை மரங்களுக்கு இடையில் இருக்கும் குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ஒருபுறம் குளத்தில் மீன்களை சிலர் பிடித்துக் கொண்டிருந்தனர். மீன்கள் வாங்க பலர் காத்திருந்தனர். அவர்களுக்கு விலை பேசி எடைபோட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார், ஆறுமுகம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், சில வாடிக்கையாளர்களுக்கு மீனைக் கொடுத்து விட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
பயிற்சியில் கிடைத்த தொழில்நுட்பம்!
“நான் பனிரண்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க பகுதியில வழக்கமா எல்லாரும் மல்லாட்டை (நிலக்கடலை), வாழை, நெல்னு விவசாயம் செய்வாங்க. நாங்களும் அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஓரளவுக்கு வருமானம் இருந்தாலும், வேலையாட்கள் பிரச்னை அதிகம். அதனால என்னோட அப்பா ஒரு ஏக்கர் நிலத்துல குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பிச்சார். அதுல ஓரளவுக்கு மீன் வளர்ப்பு பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். மீன் வளர்ப்புல நல்ல வருமானம் இருந்தாலும், சில சொந்தப் பிரச்னையால அதைத் தொடர்ந்து செய்ய முடியல. அதனால குளத்தை மூடிட்டாங்க.
அப்பறம் நான், மரம் அறுக்குற பட்டறை வெச்சேன். அதுல 10 வருஷமா நல்ல வருமானம் கிடைச்சுது. இடையில மின்சாரத் தட்டுப்பாடு அதிகமானதும், அதுலயும் சிக்கல். அப்போதான் வருமானம் தடைபட்டுடக்கூடாதுனு திரும்பவும் மீன் வளர்ப்புல இறங்கிட்டேன். அப்பா வெச்சிருந்த மீன் குளத்துல வேலை செஞ்சதுல, புல் கெண்டை ரகம் நல்லா வளர்ந்ததை அனுபவப்பூர்வமா பாத்திருந்தேன். அதனால, அந்த ரகத்தைத்தான் அதிகமா வளர்க்கணும்னு முடிவெடுத்தேன். இதுல புது தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிறதுக்காக திருவண்ணாமலை, தஞ்சாவூர், சாத்தனூர் அணை, மோர்தானா அணைனு மீன் வளர்ப்பு பயிற்சி கொடுக்குற எல்லா இடங்களுக்கும் போய், பயிற்சி எடுத்துக்கிட்டேன். இதன் மூலமா நோய் தடுப்பு முறைகளைத் தெளிவா கத்துக்கிட்டேன்.
புல் கெண்டைக்கு கோ-4 தீவனம்!
எனக்கு ஒரு ஏக்கர் 20 சென்ட் அளவுல நிலம் இருக்கு. முதல்ல 40 சென்ட் அளவுல குளம் எடுத்து, 100 கிராம் எடை இருக்குற மீன் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து விட்டேன். அந்த மீன்களோட வளர்ச்சி நல்ல முறையில இருந்தது. அதுக்கப்பறம், 30 சென்ட், 20 சென்ட், 10 சென்ட் அளவுல மூணு குளங்களை வெட்டியிருக்கேன். இதுல 6 ஆயிரம் புல் கெண்டை, 2 ஆயிரம் கண்ணாடிக் கெண்டை, ஆயிரம் ரோகு, ஆயிரம் மிர்கால்னு மொத்தம் 10 ஆயிரம் மீன்கள் இருக்கு. சின்ன மீன் குஞ்சுகளை வாங்கி விடும்போது சேதம் அதிகமாக இருக்கும். அதேசமயத்துல 100 கிராம் எடை உள்ள மீன்களை வாங்கி விடுறப்போ, சேதாரம் கம்மியாதான் இருக்கு.
புல் கெண்டை மீன்கள் பசுந்தீவனங்களை அதிகமா சாப்பிடும். என் நிலத்துல குளம், வீடு, மில் எல்லாம் இருக்குறதால பசுந்தீவனம் சாகுபடி பண்ண இடம் இல்லை. அதனால, தம்பி நிலத்துல ஒரு ஏக்கர்ல கோ-4 தீவனப்புல்லை சாகுபடி பண்ணியிருக்கேன். இதை புல் கெண்டை மீன்கள் நல்லா சாப்பிடுது. மற்ற மீன்களுக்கு கம்பெனி தீவனங்கள் கொடுக்கிறேன். இப்போ குளத்துல ஒண்ணரை கிலோ அளவுல கிட்டத்தட்ட 4 ஆயிரம் மீன்கள் இருக்கும். அரை கிலோ அளவுல 4 ஆயிரம் மீன்கள் இருக்கும். மீதியெல்லாம் கால் கிலோ அளவுல இருக்கும். வழக்கமா ஒரு ஏக்கர் குளத்துல இவ்வளவு மீன்கள் வளர்க்க மாட்டாங்க. ஆனா, வெவ்வேற வயசுல இருக்குறதால பிரச்னை இல்லை” என்ற ஆறுமுகம், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஏக்கருக்கு 3 டன்!
“எட்டு மாசத்துல புல் கெண்டை ஒரு கிலோவுல இருந்து ஒண்ணரை கிலோ எடை வந்துடும். மத்த மீன்கள், முக்கா கிலோவுல இருந்து ஒரு கிலோ எடை வரும். சராசரியா ஒரு ஏக்கர் குளத்தில் இருந்து 3 டன் அளவுக்கு மீன்கள் கிடைக்கும். நான் நேரடியா விற்பனை செய்றதால ஒரு கிலோ 150 ரூபாய்ல இருந்து 180 ரூபாய் வரை விற்பனை செய்றேன். குறைஞ்ச விலையா ஒரு கிலோ 150 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே, 3 டன் மீன்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் ஒரு லட்ச ரூபாய் செலவு போக, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம். நேரடியா விற்பனை செய்யாம மார்கெட்டுக்கு அனுப்புனா, இவ்வளவு லாபம் கிடைக்காது. போக்குவரத்து, கமிஷன்னு போக ரெண்டரை லட்ச ரூபாய் அளவுக்குத்தான் லாபம் கிடைக்கும்”என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
ஆறுமுகம்,
செல்போன்: 09095141396
நன்றி:பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்