விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு ஏற்ற சத்தான தீவனமாகவும், கால்நடை வளர்ப்பில் உப தொழிலாகவும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-4 விளங்குகிறது.
தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது உழவுத்தொழிலின் உப தொழிலாக உள்ளது. பொதுவாக, கால்நடைகளுக்கு வைக்கோல், சோளம், கம்பு, மக்காச்சோளத்தின் தட்டை, வேர்க்கடலைக் கொடி ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகின்றன.
ஆனால், கால்நடைகளின் உற்பத்தித் திறனைப் பெருக்க வேண்டும் என்றால் சத்தான தீவனம் அளிக்க வேண்டும்.
அந்த வகையில், கால்நடைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கம்பு நேப்பியர் ஒட்டுப்புல். தீவனப்புல் வகையில் குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லுக்கு உண்டு.
இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2008-ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதன் சிறப்புகள்
அதிக தூர்கள் இருத்தல், மிக மிருதுவான இனிப்பான சாறு நிறைந்த தண்டுகள், அதிக இலை தண்டு விகிதம், பூச்சித் தாக்குதல் அற்றது. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம்.
இதுகுறித்து, திரூர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் அகிலா கூறியது:
- கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் என்பது கால்நடைகளுக்கு சிறந்த சத்தான தீவனமாகும். இந்த கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், குறைந்த செலவில் உபப் பயிராக இட்டு விவசாயிகள் பயனடையலாம்.
- நல்ல நீர்ப்பாசன வசதி இருந்தால் இந்தப் புல்லை ஆண்டு முழுவதும் நடவுச் செய்யலாம்.
- நன்கு உழுது தயார் செய்த நிலத்தில் 50 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து, பார்களின் சரிவில் 50 செ.மீ. இடைவெளியில் ஒரு கரணை என நடவுச் செய்ய வேண்டும்.
- இதுபோல், நடவு செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கரணைகள் தேவைப்படும்.
- வயலில் கரணைகளை நடவுச் செய்யும் முன் 1 ஹெக்டேருக்கு 110 கிலோ யூரியா, 310 கிலோ சூப்பர், 68 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடி உரமாக இடவேண்டும்.
- ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும், ஒரு ஹெக்டேருக்கு 165 கிலோ யூரியா இட வேண்டும்.
- இந்தத் தீவனப் புல்லை தரையில் இருந்து 15 முதல் 20 செ.மீ. உயரத்தில் வெட்டி, கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
- முதல் அறுவடை நடவு செய்து 70 முதல் 80 நாள்களுக்குள் அறுவடை செய்யலாம். மற்ற அறுவடைகளை தொடர்ச்சியாக 45 நாள்கள் இடைவெளியில் அறுவடைச் செய்யலாம்.
- மேற்கண்ட முறையில் நன்குப் பராமரிக்கப்பட்ட பயிரில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு வருடத்தில் 300 முதல் 350 டன் வரை பசுந்தீவனத்தை அறுவடைச் செய்ய முடியும்.
- மேலும் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கரணைகள் கிடைக்கும். விவசாயிகள், அதை வாங்கி நடவுச் செய்யலாம். தற்போது மழை பெய்து மண்பக்குவத்தில் இருப்பதால் எளிதில் நடவுச் செய்ய முடியும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்