சீசனில் அதிகமாக கிடைக்கும் பசுந்தீவனங்களை காற்றுபுகாத முறையில் ஊட்டமூக்கிகளை கலந்து பசுமை மாறாமல் ஊட்டமேற்றி சேமிக்கும் முறை பதனத்தாள் அல்லது ஊறுகாய் புல் எனப்படும்..
மக்காச்சோளம், சோளத்தில் மாவுச்சத்து நிறைந்திருப்பதால் பதனத்தாள் தயாரிப்பதற்கு ஏற்றது. கம்பு நேப்பியர், ஒட்டுப் புற்கள், காராமணி, குதிரை மசால், பெர்சீம் மற்றும் வேலிமசால் போன்ற பயறு வகை தீவனப்பயிர்களை கொண்டும் பதனத்தாள் தயாரிக்கலாம்.
பயறுவகை தீவனங்கள் 25 முதல் 30 சதவீதம் பூக்கும் தருணத்திலும் சோளம், கம்பு, தானியங்கள் பால்பிடிக்கும் தருணத்திலும் மக்காச்சோளம், தானியங்கள் பால்பிடித்த பிறகு அறுவடை செய்து பயன்படுத்த வேண்டும். 2 முதல் 3 மணி நேரம் வெயிலில் உலர்த்தி ஈரப்பதத்தை 80லிருந்து 60 – 70 சதவீதமாக குறைக்க வேண்டும். 1000 கிலோ பசுந்தீவனத்திற்கு 10 கிலோ யூரியாவை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 20 கிலோ சர்க்கரைப்பாகு மற்றும் 10 கிலோ சமையல் உப்பு சேர்த்து கரைத்து தயாராக வைக்க வேண்டும். தீவனப்பயிர்களை 23 அங்குலம் கொண்ட சிறு துண்டுகளாக வெட்டி பதனக்குழியில் இட்டு அடுக்கடுக்காக அடுக்க வேண்டும்.
30 செ.மீ அடுக்கிய பிறகு தீவனத்தை நன்கு அழுத்தி காற்றை வெளியேற்றிவிட்டு ஒரு பகுதி ஊட்டமூக்கி கரைசலை தெளிக்கவேண்டும். மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்கவேண்டும்.
பதனக்குழியின் மேல்மட்டத்தைவிட ஒன்று அல்லது ஒன்றரை மீட்டர் உயரம் வரை நிரப்பி மேற்பகுதியில் வைக்கோலால் மூட வேண்டும். அதன் மேல் ஈர மண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் செய்யவேண்டும். பதனக்குழியை மூட பாலித்தீன் தாள்களையம் பயன்படுத்தலாம்.
30 – 45 நாட்களில் தரம்மிக்க பதனத்தாள் உருவாகும். மேற்பகுதியில் உள்ள பதம் குறைந்த தீவனத்தை அகற்றிவிடவேண்டும். தரமான பதனத்தாள் பழவாசனையுடன் நறுமணமாக பசுமை நிறத்துடன் சாறு கலந்தும் இருக்கும். அமிலத்தன்மை 3.5 முதல் 4.2 வரை இருக்கும்.
காற்றும் மழைநீரும் புகாமல் பாதுகாக்கப்படும் நிலையில் பதனத்தாள் பல ஆண்டுகள் கெடாது.
பதனக்குழி தயாரிக்க அதிக செலவாகும். ஒன்றிரண்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் கான்கிரிட் வளையங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கோபுர பதனக்குதிர்களை உருவாக்கலாம். கீழ் மட்டத்தில் உள்ள வளையங்களில் ஒருசில துளைகள் அமைத்து நீர் மற்றும் அமிலக்கரைசல் வெளியேற வழி செய்ய வேண்டும். தானியங்களை சேமிக்க பயன்படுத்தும் மண்குதிர்களின் நுண்ணிய துவாரங்களை வெளிப்புறத்தில் சாணம் அல்லது களிமண்ணால் மெழுகிய பிறகு பதனத்தாள் தயாரிக்கலாம். அல்லது 90 செ.மீ அகலம் ஒரு மீட்டர் உயரம் மற்றும் 600 காஜ் தடிமன் கொண்ட பாலித்தீன் பையில் 12.5 கிலோ வரை பதனத்தாள் தயாரிக்கலாம்.
தரமான உலர் புல்லுடன் பதனத்தாள் அளிப்பதால், பால் உற்பத்தி அதிகமாகும். காற்றோட்டத்தில் வைக்கப்படும் பதனத்தாள் விரைவில் கெட்டுவிடும் என்பதால் தேவைக்கேற்ப வெளியே எடுக்க வேண்டும். நார்த்தீவனத்தில் 20 – 30 சதவீதம் வரை பதனத்தாளை அளிக்கலாம்.
பூஞ்சை பாதித்த, அதிக புளிப்பு சுவையுடன் உள்ள பதனத்தாளை மாடுகளுக்கு கொடுக்கக்கூடாது. கறவை மாடு ஒன்றுக்கு 15 – 20 கிலோ, கிடேரிக்கு 5 – 8 கிலோ, வளர்ந்த கன்றுக்கு 45 கிலோ, வளர்ந்த ஆட்டிற்கு 200 – 300 கிராம் கொடுக்கலாம். தமிழகத்தில் பிப். முதல் ஆக. வரை பசுந்தீவன தட்டுப்பாடு நிலவும். மழைக்காலங்களில் பதனத்தாள் தயாரித்தால் கோடையில் சமாளிக்கலாம்.
இளங்கோவன், இணை இயக்குனர்
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்
துவாக்குடி, திருச்சி – 15
9842007125
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்