உயிர்களிடத்தில் அன்பு கொண்டு உயரிய வாழ்வினை வாழ்பவர்கள் தமிழர்கள். பொங்கல் திருவிழா இதற்கு ஒரு உதாரணம். கழனிகளில் தமக்காக உழைத்த கால்நடைகளை நினைத்து, அதற்கென ஒரு நாளை ஒதுக்கி விழா எடுக்கும் பண்பு தமிழர்களை தவிர வேறு யாரிடமும் காண்பது அரிது.
‘வரப்பே தலகாணி, வைக்கோலே பஞ்சு மெத்தை’ என உழவுத் தொழிலை உயிர் மூச்சாக கருதுபவர்கள் உழவர்கள். அவர் களுக்கு வியர்வையில் தான் குளியல், வெற்றுடம்பு தான் பட்டாடை. இப்படிப்பட்ட விவசாயிகளுக்கு நன்றி பாராட்டும் நாள் தான் பொங்கல் விழா.
எதிரியை ஏமாற்றி நேருக்கு நேர் நின்று போர் செய்யாமல் வீழ்த்தும் இக்காலத்தில் பண்பாடு போல் அல்லாமல் தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற உண்மையான வீர விளையாட்டுகள் பொங்கல் விழாவோடு தொடர்பு உடையவை. சேவற்கட்டு, கிடாய்ச்சண்டை போன்ற வீர விளை யாட்டுகளும் தமிழரின் வீரத்தின் அடையாளங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
பொங்கல் நாளில் மகிழ்ச்சிப் பெருக்கோடு விவசாயிகள் கால்நடைகளுக்கு கொடுக்கும் பொங்கல் அளவானதாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பொங்கல் உணவை கொடுக்கும்போது கால்நடைகளுக்கு ‘அமில நோய்’ ஆபத்து ஏற்படும்.
அளவுக்கு அதிகமான பொங்கலை கால்நடைகளுக்கு கொடுத்தால் ‘ரூமன்’ எனப்படும் முதல் வயிற்றறையில் இந்த உணவு புளித்துப்போய், ஏராளமாக ‘லேக்டிக் அமிலம்’ ரத்தத்தில் கலக்கும். இதனால் கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.
நெல், அரிசி, சாதம், கோதுமை, ஓட்டல்களின் கழிவு பதார்த்தங்கள், விருந்துகளில் மீதமாகும் சாப்பாடு போன்றவைகளை கால்நடைகளுக்கு அளவில்லாமல் சாப்பிட கொடுக்கும்போது அமில நோய் ஏற்படுகிறது. மாவுப்பொருள் அதிகம் உடைய இவ்வகை உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டால் கால்நடைகளுக்கு கடுமையான வயிறு உப்புசம் ஏற்படும். பின் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கால்நடைகள் இறக்க நேரிடும்.
கால்நடைகள் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் தீவனங்களுக்கே தங்களை பழக்கப்படுத்திக் கொள்பவை. தீவனத்தில் திடீர் மாறுதல் ஏற்படும்போது வயிறு உப்புசம், அலர்ஜி போன்ற திடீர் ஆபத்துகள் கடுமையாகத் தாக்கி உடல் ஆரோக்கிய கேடுகளை உருவாக்கி உயிர் இழப்பையும் ஏற்படுத்துகின்றன. தீவனத்தில் திடீர் மாறுதல் செய்யும் போது ஆரம்பத்தில் குறைந்த அளவே கொடுத்து பின்னர் படிப்படியாக கூடுதலாக தந்தால் சம்பந்தப்பட்ட உணவு வகைகளுக்கு கால்நடைகள் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளும்.
எனவே விவசாயிகள் பொங்கல் பண்டிகையின் போது தங்கள் கால்நடைகளுக்கு பொங்கல் போன்ற சிறப்பு உணவுகளை 200 கிராம் வரை கொடுக்கலாம்.
நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சோடா உப்பு கரைசலை தண்ணீரில் கலந்து தரலாம்.’குளோர்டெட்ரா சைக்கிளின்’ மாத்திரைகளை கொடுக்கலாம்.நிலைமை மோசமாக இருந்தால் தாமதம் செய்யாமல் உடனே மருத்துவருக்கு தகவல் தந்து சிறப்பு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொங்கல் விழாவில் கால்நடைகளுக்கு பொங்கலை விருந்து போல் தராமல் மருந்து போல் கொடுத்து கவனமாக செயல்படுவது நமது கடமை.
தொடர்புக்கு 09486469044
– டாக்டர் வி.ராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குனர்,
கால்நடை பராமரிப்புத்துறை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்