கால்நடைகளுக்கு பிடித்த கருவேலம் நெற்றுகள்

கிராமங்களில் ஆடுகளுக்கு மட்டுமே தீவனமாக தரக்கூடிய கருவேல நெற்றுகளை மாடுகளுக்கும் கொடுக்கலாம். கால்நடைகளுக்கு முறையான தீவனம் கொடுத்தால் தான் அவை ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும். பல்வேறு மரங்கள் கால்நடைகளுக்கு தீவனமாக இலைகளை தருகின்றன. கருவேல மரமும் கால்நடைகளுக்கு தீவனம் தரும் மரங்களில் ஒன்று. அவற்றின் இலை வழியாக நேர

டிப்பயன் இல்லை. எனினும் கருவேலம் நெற்றுகள் மிகச்சிறந்த செலவில்லாத தீவனமாகும்.

சத்து மிக்கது

கறவை மாடுகளுக்கும் கொடுக்கக்கூடிய தீவனம் கருவேல நெற்றுகள். அவை சிக்கனமாக பால் உற்பத்திக்கு பெரிதும் பயன்படுகின்றன. தானியங்களை சேமித்து சிறிது சிறிதாக பயன்படுத்துவது போல் கருவேல நெற்றுகள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

முறையாக சேமித்தால் கருவேல மரங்கள் ஆண்டுக்கு சராசரியாக 30 கிலோவில் இருந்து 50 கிலோ நெற்றுக்கள் வரை கொடுக்கின்றன. இந்நெற்றுகளில் 13 சதவீதம் புரதச்சத்து, 20 சதவீதம் சர்க்கரை சத்து கிடைக்கிறது. கருவேல நெற்றுகளின் விதையில் தான் கூடுதலான புரதச்சத்து உள்ளது.

தீவன மாற்றம்

முழு நெற்றுகளாக கொடுக்கும் போது விதைகள் கால்நடைகளின் வயிற்றில் எவ்வித செரிமானமும் இன்றி சாணத்தின் வழியே வெளியேறும். விரும்பத்தகாத இடங்களில் இவ்விதைகள் விழுந்தால் களைகளாக முளைத்து இடைஞ்சல்களை உண்டுபண்ணும். இதைத் தவிர்க்க சுத்தியலால் நசுக்கி கொடுக்க வேண்டும்.

இதனால் விதைகள் முழுவதும் செரிமானம் ஆகி புரதச்சத்து வீணாகாமல் கால்நடைகளுக்கு கிடைக்கும். இவ்வகை தீவனங்களை கால்நடைகளுக்கு புதிதாக கொடுக்கும்போது திடீரென அதிகளவில் கொடுக்கக்கூடாது. ஏனெனில் திடீர் தீவன மாற்றங்களை கால்நடைகளின் வயிறு ஏற்காது. சிறிது சிறிதாக கொடுத்து பழக்கப்படுத்தி பின்னர் அளவை அதிகரிக்க வேண்டும்.

தொடர்புக்கு 9486469044

– டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *