மண் இல்லாமல் தயாரிக்கப்படும் பசுந்தீவன உற்பத்தி விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் உதவியாக இருக்கும். இந்த முறையில் 7 முதல் 10 நாட்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம்.
குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள், குறைந்த நீரில் தடையின்றி தொடர்ந்து உற்பத்தி செய்யலாம். ஆண்டு முழுவதும் தரம் மாறாமல், சுவை சத்துகள் நிறைந்த கலப்படம் இல்லாத பசுந்தீவனம் கிடைக்கும். 300 சதுர அடி பரப்பளவில் 600 முதல் 1500 கிலோ பசுந்தீவனம் தயாரிக்கலாம்.
விதைகளை தேர்வு செய்யும் முறை
நன்கு காய்ந்த மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, காராமணி, கோதுமை, ஓட்ஸ் விதைகளை தேர்வு செய்ய வேண்டும். 20க்கு 15 அடி அளவுள்ள பசுமையான நிழல் வலை குடில் அமைக்க வேண்டும். இதில் இரும்பு அல்லது மரத்தாலான ‘ரேக்’ அமைத்து 24 முதல் 27 டிகிரி வெப்பநிலை இருக்குமாறு வைக்க வேண்டும். 80 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
முளைகட்டிய விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரப்பில் ரேக்கில் வரிசையாக அடுக்க வேண்டும். பூவாளி கொண்டு தினமும் 5 முதல் 6 முறை நீர் தெளிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீர் போதும். 8 நாட்களில் 20 செ.மீ., வரை பசுந்தீவனம் வளரும்.
வேரோடு பறித்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். எளிதாக செரிமானம் ஆகும். ஒரு கிலோ விதைக்கு 8 கிலோ பசுந்தீவனம் கிடைக்கும். கோடை மற்றும் வறட்சி காலங்களிலும் இம்முறையில் உற்பத்தி செய்யலாம். இதில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன.
–சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Good