கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள்

கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோடை வெயிலானது கலப்பினப் பசுக்களில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தைப் பாதிக்கக்கூடும். அனைத்து கால்நடைகளிலும் ஒவ்வாமையை ஏற்படுத்தி, அவற்றின் நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

பாலின் அளவு, பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற இதர திடப்பொருட்களின் அளவு ஆகியவை கோடைகாலங்களில் குறைந்துவிடுவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையக்கூடும். கால்நடைகளுக்குச் சரியான கொட்டகை மற்றும் சுற்றுச்சுழலை ஏற்படுத்துவது, அறிவியல் ரீதியான தீவன மேலாண்மை ஆகியவற்றைக் கையாள்வதன் மூலம் கால்நடைகள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்ககலாம்.

கோடையில் கால்நடைகளுக்குச் சரியான அளவு இட வசதியுடன் கொட்டகை அமைத்து, அதைச் சுற்றி நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதன் மூலம் கொட்டகைக்குள் நிலவும் வெப்பத்தைத் தணிக்கலாம்.

கொட்டகைக் கூரை அலுமினிய தகடுகளால் அமைத்திருந்தால் உட்புறம் கருப்பு மற்றும் வெளிப்புறத்தில் வெள்ளை வர்ணம் மூலம் உட்புற வெட்பத்தைக் குறைக்கலாம்.

ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக இருந்தால், தென்னை, பனை ஓலைகள், தென்னை நார்க் கழிவு அல்லது உலர்ந்த புற்கள் பரப்பி அதன் மீது நீரைத் தெளித்து பராமரிக்கலாம். கால்நடைகளை பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.

பசுந்தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர் மற்றும் நார் தீவனம் அளவைக் குறைக்க வேண்டும். நார் தீவனங்களை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.

உலர் தீவனங்களை வைக்கோல் மற்றும் தட்டை மீது உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்த நீரைத் தெளித்து பதப்படுத்தி பின் வழங்க வேண்டும்.

பசுந்தீவனத்தில் அதிக புரதச்சத்து கொண்ட குதிரை மசால், முயல் மசால், வேலி மசால் போன்ற பயறு வகை தீவனங்கள் அளிக்க வேண்டும்.

போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்கவில்லையெனில், மர இலைகள், மரவள்ளிக் கிழங்கு திப்பி போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள தீவனத்தை அளிக்க வேண்டும்.

பகலில் பசுந்தீவனத்தையும், இரவு நேரங்களில் வைக்கோல் போன்ற உலர்ந்த தீவனத்தையும் ஒரே நேரத்தில் அதிக அளவு அளிப்பதை தவிர்த்து அளவைக் குறைத்து பலமுறை அளிக்க வேண்டும்.

தாது உப்புகளின் இழப்பைச் சரிகட்ட தாது உப்புக் கலவை 50 சதவீதம் அதிகரித்துக் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கான குடிநீர் தொட்டிகளின்மேல் சூரிய வெப்பம் தாக்காவண்ணம் கூரை அமைத்து, கால்நடைகளுக்கு எப்போதும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.

கோடை ஒவ்வாமையைத் தணிக்கக்கூடிய மூலிகை மருந்துகள் அல்லது நெல்லிக்காய், துளசி அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம். தவிர 100-200 கிராம் அசோலாவை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.

கோடையில் கால்நடைகளில் வெப்ப அயர்ச்சி நோய், வெப்ப மடிவீக்கம், இளஞ்சிவப்பு கண்நோய் மற்றும் கல்லீரல் தட்டை புழுக்கள் தாக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நேரடி சூரிய ஒளி தாக்கத்திலிருந்து கால்நடைகளைக் காத்து, தினமும் இரு வேளை குளிப்பாட்ட வேண்டும். அதிகாலை மற்றும் மாலையில் தீவனத்தை அதிகரித்து, பிற நேரங்களில் குறைத்துக்கொண்டு அதிக அளவு குளிர்ந்த குடிநீர் அளிக்க வேண்டும்.

கால்நடைகளைக் குளங்கள், நீர்நிலைகளுக்கு அருகில் வளரும் புற்களை மேயாமலும், தண்ணீர் வற்றிய நீர் நிலைகளில் நத்தைகள் காணப்பட்டால், அத்தண்ணீரை அளிக்காமலும் பாதுகாக்க வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *