கோமாரி நோயும் அதனை தடுக்கும் முறைகளும்

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் வருவதற்கு முன்பு கால்நடைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை பராமரிப்பது அவசியம் அகும்.  கால்நடைகளை பாதிக்கும் கோமாரி நோயை தடுக்கும் முறைகளை குறித்து கூறுகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் எஸ்.ராஜேந்திரன்.

  • கோமாரி நோய் கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது.
  • கால்கானை வாய்க்கானை என்றும் கால் சப்பை என்றும் இந்நோயிக்கு வேறு பெயர்களும் உண்டு. ஒருவகை நச்சுயிரியால் இந்த நோய் உண்டாகுகிறது.
  • இரட்டை குழம்புகளைக் கொண்ட பசு, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி போன்ற கால்நடைகள் இந்த நோயால் பாதிக்கப்படும்.
  • குறிப்பாக எச்.எப். மற்றும் ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள் அதிக அளவில் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றன.
  • நோயால் பாதிக்கப்பட்ட கறவை மாடுகளிலிருந்து பால் சுரப்பது குறைவது மட்டுமல்லாமல் சினை பிடிப்பதும் பாதிக்கப்படும்.
  • இளங்கன்றுகள் உயிரிழக்க நேரிடும். இத்தகைய சம்பவங்களால் கிராமப் பொருளாதாரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.  குளிர் மற்றும் பனிக்காலங்களில் இந்த நோய் விரைவில் பரவக் கூடியது.
  • இந்த நோயானது 7 வகைகளான கிருமிகளால் உண்டாகின்றன.  அவற்றுள் ஓ, ஏ, சி, ஆசியா ஆகிய 4 கிருமிகள் இந்தியாவில் இந்த நோயை ஏற்படுத்துகின்றன.

நோய் பரவும் விதம்:

  • நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக காற்றின் மூலம் பரவுகிறது.
  • மேலும், நோய் பாதிக்ப்பட்ட மாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தீவனம், தீவனத்தொட்டி, தண்ணீர் மற்றும் மாட்டின் உமிழ்நீர், பால், சாணம் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது.
  • சில நேரங்களில் கால்நடைகளை பராமரிக்கும் மனிதர்கள் மூலமும் இந்த நோய் பரவுகிறது.
  • காற்று வீசும் திசையில் காற்றுத்துகள்கள் மூலம் சுமார் 300 கி.மீ வரையிலும் இந்த நோய் பரவும் தன்மை கொண்டது.

நோயின் அறிகுறிகள்:

  • காய்ச்சல், தீவனம் உள்கொள்ளாமல் இருப்பது, வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் ஒழுகுதல், வாயின் உட்பகுதி, நாக்கு, கால் குளம்புகளின் நடுப்பகுதியி, மடி மற்றும் மூக்கின் உட்பகுதிகளில் கொப்பளங்கள் தோன்றி, பின்னர் அவை புண்ணாக மாறும். மாடுகள் நொண்டும்.
  • நோய் கண்ட மாட்டின் பாலை அருந்தும் கன்றுகள் உயிரிழக்கும்.
  • அசைபோடும்போது சப்பு கொட்டுவது போல சப்தம் உண்டாகுதல், உரிய காலத்தில் சிகிச்சை எடுக்காத கால்நடைகள் உயிரிழப்பது போன்றவைகள் இந்த நோயிக்கான அறிகுறிகள் ஆகும்.

நோய் தடுப்பும், பாதுகாப்பும்:

  • கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவனை அணுகி உரிய சிகிச்சை பெறவேண்டும்.
  • நோயுற்ற மாடுகளை ஒதுக்குப்புறமாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • பாதிக்காத மாடுகளோடு தொடர்பு இருக்கக் கூடாது.
  • நோய் பரவும் காலங்களில் கால்நடைகளை வாங்குவதோ, விற்பனை செய்வதுக் கூடாது.
  • வாயில் புண்கள் இருந்தால் தீவனம் உட்கொள்ள முடியாது.
  • ஆகையால் காய்ச்சிய கஞ்சி மற்றும் அகத்தி போன்ற பசுந் தீவனங்களை அளிக்க வேண்டும்.
  • வாயில் ஏற்பட்ட புண்களுக்கு போரோகிளிசரின் கலவையை பூ வேண்டும்.
  • காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்கு போரிக் பவுடர் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

தடுப்பு முறைகள்:

  • நோய் அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • நோயற்ற கால்நடைகளை தனியாக பிரித்து வேறு இடத்தில் வைத்து தீவனம் மற்றும் தண்ணீரை தனியாக அளிக்க வேண்டும்.
  • நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிப்பவர், கால்நடைகளை கையாளும் முன்பும், பின்பும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.
  • சுண்ணாம்புத் துகள்களை மாட்டுத் தொழுவத்தை சுற்றியும் தூவ வேண்டும்.
  • நோயுள்ள பகுதிகளில் புதிய கால்நடைகளை வளர்க்கக் கூடாது. ஆண்டுக்கு இரு முறை தடுப்பூசி போடலாம்.
  • இத்தகைய முறையில் கால்நடைகளை பராமரிப்பதால் பால் உற்பத்தியை பெருக்கி கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
  • மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையோ அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல இணை இயக்குநரை நேரிலோ அல்லது தபால் மூலம் அணுகலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கோமாரி நோயும் அதனை தடுக்கும் முறைகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *