வனப்பயிர்களில் புதிய வெளியீடுகள்:
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ (பிஎன்)5 – ஏழு அறுவடைகளில் அதிக பசுந்தீவன விளைச்சலாக எக்டருக்கு 360 டன் கொடுக்கிறது. குளிரை தாங்கி வளர்வதாலும் ஆண்டு முழுவதும் சீரான விளைச்சல் தரும். அதிக உலர்எடை தீவனம் 79.2 டன் / எக்டர் / ஆண்டு தரவல்லது. விரைவில் தழைத்து வளரக் கூடியது. முதல் அறுவடை 75-80 நாட்களிலும் அடுத்தடுத்த அறுவடை 40 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.
எல்லா மண் வகைக்கும் ஏற்றது. நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 25 டன், தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 75 கிலோ, 50 கிலோ மற்றும் 40 கிலோ இட்டு எக்டருக்கு 30,000 தண்டு கரணைகளை 60 X 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்ட 3வது நாள் உயிர் நீர் பின்பு 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட வேண்டும்.
தீவனச்சோளம் கோ.31 :
இது 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிக பசுந்தீவன விளைச்சல் 192 டன்கள் / எக்டர் தரவல்லது. விரைவாக தழைக்கும் திறனால் ஆண்டுக்கு ஆறு அறுவடைகள் செய்யலாம். கறவை மாடுகள், ஆடுகள் விரும்பி உண்ணக்கூடிய இரகம் இது.
குதிரை மசால் கோ.2 :
இந்த இரகம் கோ.1ஐக் காட்டிலும் சீரிய பண்புகளைக் கொண்டது. பசுந்தீவன விளைச்சல் 130 டன்கள். புரதசத்து 23.5 சதம். இதன் அடர்த்தியான கொத்துக்கொத்தாக பூக்கும் திறன் கூடுதல் விதை உற்பத்திக்கு (240 கிலோ / எக்டர்) வழி வகுத்துள்ளது.
மேலும் புரட்சி ஏற்படுத்திய பல தீவனப்பயிர்கள் பற்றிய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : பேராசிரியர் மற்றும் தலைவர், தீவனப்பயிர் துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. போன் : 0422 – 661 1228.
சீமைத்தினை (quinoa) ஒப்பந்த சாகுபடி:
ஈக்வேடார், பெரு, பொலிவியா மற்றும் அர்ஜென்டினா ஆசிய நாடுகளில் உள்ள ஆண்டில் மலைப்பகுதிகளில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விளைவித்தனர். சீமைத்தினை “இன்காஸ்’ என்ற இனமக்களின் அடிப்படை ஆதாரமாகவும், புனித உணவாகவும் கடவுளின் பரிசாகவும் கருதப்பட்டது. தமிழ்நாட்டில் “சீமைத்தினை’ செம்மண் பூமியில் நன்றாக வளரும். இவ்வகை தினைக்கு நீர் அவசியம். ஆனால் அதிக நீர் தேவையில்லை. சொட்டுநீர்ப்பாசனம் மிகவும் ஏற்றது.
நாற்று உற்பத்தி :
“டிரே’ எனப்படும் ஓரம் மடிக்கப்பட்டுள்ள தட்டுகளில் ஈரச் செம்மண்ணுடன் சாதாரண ஈரமண்களையும் நிரப்பி அதன் மீது விதைகளைத் தூவி தண்ணீர் விட வேண்டும். “டிரே’க்கள் திறந்தவெளி அல்லது வலையால் மூடப்பட்ட ஷெட்களில் வளர்க்கப்பட வேண்டும். நாற்றுகள் வளர்ந்த பின் அவற்றை எடுத்து ஒவ்வொரு நாற்றுக்கும் 2 X 2 அடி தூர இடைவெளி விட்டு நட வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பே தினை சாகுபடி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதமே சிறந்தது. சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நாள் ஒன்றுக்கு 2-3 மணி நேர இடைவெளியில் தண்ணீர் அளித்தால் போதும்.
ஒப்பந்தமுறை சாகுபடி :
பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான மாட்டுச்சாணம், மண்புழு உரம், வேப்பெண்ணெய், ஜீவாமிர்த கரைசல் மற்றும் பயோ இடுபொருட்கள், பயோ பூச்சிக்கொல்லிகள் தொழில்நுட்ப உதவிகள், கருவிகள் போன்றவைகளை “ஆஷ்ட்ரால் பயோடெக் (பி) லிட் நிறுவனமே ஒப்பந்த முறையில் வழங்குகிறது.
அறுவடை :
110 நாட்களில் இலைகள் மஞ்சளாக மாறி மண்ணில் விழுந்து விடும். 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம். கதிர்களிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுத்து காயவைத்து சாக்கு பைகளில் அடைத்து மூடைகளாக சேமிக்கலாம். இதன் சாகுபடி செலவு 1 ஏக்கருக்கு ரூ.36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆகும். ஏக்கருக்கு 10 முதல் 15 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ஆஷ்ட்ரால் பயோடெக் நிறுவனம் 1 குவிண்டாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை தருகிறது. சீமைத்தினையை சாகுபடி செய்ததில் 3 மாதத்தில் 1 ஏக்கருக்கு 1 லட்சத்திலிருந்து 1.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள: அழகர்குமார் – 91591 55285, ரமேஷ்குமார் -88073 58790, ராஜ்குமார் – 88833 33967, சத்யமூர்த்தி – 98425 93862.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்