நாட்டு மாடுகள் இருக்க ஜெர்சி பசுக்கள் நமக்கெதற்கு?

இப்போது வேளாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சிக்கலான வேலைக்குத் தேவையான ஆட்களின் பற்றாக்குறை பற்றி, கால்நடை களஞ்சியம் சி. கணேசன் பெரிதும் கவலைப்படுகிறார்.

இப்படியே சென்றால் வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும் என்பது இவருடைய ஆதங்கம். இன்றைய இளைஞர்களிடம் உடல் உழைப்பு குறித்து இழிவான எண்ணம் உள்ளதாகக் கூறும் இவர், மிக அதிகச் சம்பளம் கொடுத்தாலும் புதிய தலைமுறையினர் வேளாண்மை துறைக்குள் வருவது பெரிதும் குறைந்துவிட்டது. அரசின் அக்கறையற்ற போக்குதான் இதற்கான முதன்மைக் காரணம் என்று இவர் குற்றஞ்சாட்டுகிறார்.

எப்படித் தப்பிப்பது?

வேளாண் பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பதால், இயற்கைவழியில் விளைவிக்கிறார்கள். அதற்கும் விலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது இவருடைய கேள்வி. தொடர்ந்து மற்ற துறைகளுக்கு அரசு தந்துவரும் ஊக்கம் வேளாண்மைக்கு இல்லை, ஆண்டுக்கு ஆண்டு சாகுபடி செய்யும் பரப்பு குறைந்துகொண்டு வருகிறது. உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்குப் பதில், பணப் பயிர்களுக்கு ஊக்கம் கொடுப்பதும், அதற்கு உழவர்கள் மாறிவருவதும் கவலை தருவதாகக் கூறுகிறார்.

ஏற்கெனவே சிறு, குறு உழவர்கள் நிலத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் சற்று வசதி படைத்த உழவர்களும் வேளாண்மையில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்கிறார். எனவே, உழவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டால், வேளாண்மை பறிபோவதிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம் என்பது இவருடைய வலியுறுத்தல்.

காங்கேயம் காளை Courtesy: Hindu
காங்கேயம் காளை Courtesy: Hindu

சோதா மாடுகள்

‘அறிவியல் அறிஞர்’களும் அரசும் பசுமைப் புரட்சியைப் போன்றே வெண்மைப் புரட்சியையும் அறிமுகம் செய்தனர். பசுமைப் புரட்சியின் பின்னணியில் இது நடந்தேறியது. பாலை மட்டும் குறி வைத்து, வெளிநாட்டு மாடுகள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் மூலம் கலப்பின மாடுகள் உருவாக்கப்பட்டன. நமது நாட்டு மாடுகள் பாலுக்காக மட்டுமல்லாமல், உழவுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. அது அதற்குத் தனித்த மாட்டினங்கள் இருந்தன. பால் தருவதற்கென்று தனித்த சில வகை இருந்தன.

எப்படி நெல்லில் அதிக விளைச்சல், குறைந்த விளைச்சல் என்று நாட்டு இனங்கள் விதவிதமாக இருந்தனவோ, அதேபோலக் கால்நடைகளிலும் இருந்தன. ஆனால், அந்தப் பாரம்பரிய அறிவை முறியடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பாலை மட்டுமே குறியாகக் கொண்ட மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. சூழலுக்கு அவை பொருத்தமற்று இருந்ததால், நோய் போன்ற பல்வேறு சிக்கல்களும் வந்தன.

காங்கேயம் மாடு

இப்படியாக உள்நாட்டு மாடுகள் மறைந்துவந்தன. அதில் ஒன்று காங்கேயம் மாட்டினம். இது திப்பு சுல்தானால் பெருமைப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த இழுவை மாடு. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் வள்ளுவர் கூறும் ‘பகடு’ என்ற சொல்லால், இம்மாட்டைக் குறிக்கலாம். அவ்வளவு சிறப்பு மிகுந்த மாடு. போர்க்களங்களில் பண்டைய பீரங்கிகளை இழுத்துச் செல்லத் திப்பு இதைப் பயன்படுத்தியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ‘இந்த மாடுகள் எங்களிடம் இருந்திருந்தால், நெப்போலியனை நாங்கள் எப்போதோ வீழ்த்தியிருப்போம்’ என்று ஆங்கிலேயர்கள் கூறியதாகக் கதை உண்டு.

காங்கேயம் காளைகளை அவற்றின் தனித்தன்மை குறையாமல் கணேசன் பாதுகாத்துவருகிறார்; கேட்பவர்களுக்கும் கொடுத்து வருகிறார். அத்துடன் பல்வேறு வகையான ஆடுகளையும் அவர் பெருக்கி வருகிறார். தலைச்சேரி ஆடுகளை வளர்த்து பல்வேறு உழவர்களுக்குக் கொடுத்துவருகிறார். நல்ல ஆர்வமான உழவராக இருந்தால் பணத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் மலிவான விலைக்கே கொடுத்துவிடுவார். யார் சென்றாலும் கால்நடை குறித்த செய்திகளைச் சலிக்காமல் விளக்கிக் கூறுகிறார்.

15 லிட்டர் பால்

காங்கேயம் தவிரத் தர்பார்கர், கிர், சாகிவால் போன்ற மாட்டினங்களையும் பராமரித்துவரும் இவர், நாட்டு மாட்டிலிருந்து 15 லிட்டர் பால் கிடைக்கும் வகையில் அண்மையில் ஓர் இனத்தைப் பெருக்கியுள்ளார். எனவே, நமது நாட்டு மாடுகளை உழவுக்காகவும் உருவாக்க முடியும், பாலுக்காகவும் தனியாக உருவாக்க முடியும். பிறகு ஏன் வெளிநாடுகளிடம் கை ஏந்த வேண்டும் என்பது இவருடைய கருத்து.

கால்நடை வளர்ச்சிக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதையும் விலாவாரியாக விளக்குகிறார். தமிழகத்தின் கால்நடைக் களஞ்சியம் கரூர் கணேசன் என்று சொன்னால், அது மிகையான கூற்றல்ல.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com  கணேசனைத் தொடர்புகொள்ள: 09865209217

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நாட்டு மாடுகள் இருக்க ஜெர்சி பசுக்கள் நமக்கெதற்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *