நாட்டு மாடு வளர்த்து விருதை வென்ற இன்ஜினீயர்

மாட்டுப் பண்ணை தொடங்கி 2 ஆண்டுகளிலேயே மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது பெற்று அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த 24 வயது இன்ஜினீயர்.

பண்ணை மாடுகளுடன் தீரஜ்

 

 

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் தீரஜ் ராம்கிருஷ்ணா தான் அந்த இளைஞர். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பிஇ புரொடக்சன் இன்ஜினீயரிங் படித்து முடித்தார். எல்லோரையும் போல வெளிநாட்டு வேலை, கார்ப்பரேட் கம்பெனிகளைத் தேடிச் செல்லாமல் பால் வியாபாரத்தில் இறங்கினார். இதற்கு இன்ஜினீயரிங் எதற்கு என அவரிடமே கேட்டோம்.

“2015-ல் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதேசமயம், மக்களுக்குப் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் எனக் கருதினேன். இதையடுத்து, கோயில்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால் வாங்கி, மக்களுக்கு விற்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் 6 லிட்டர் பால் மட்டுமே வாங்கி விற்ற நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது. எனினும், உரிய நேரத்தில் சரியான தரத்தில் பால் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன.

மாடுகளுக்கான ‘அசோலா’ தீவன வளர்ப்பு மையம்

நாமே ஏன் மாடுகளை வாங்கி பண்ணை ஆரம்பிக்கக் கூடாது எனக் கருதினேன். 2016-ம் ஆண்டு இறுதியில் 10 மாடுகளுடன் பண்ணையை ஆரம்பித்தேன். தற்போது 60-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, மாடுகளை வாங்கி வருவேன். எனது பண்ணைப் பால் மற்றும் வெளியில் வாங்கி விற்பது என தினமும் சுமார் 450 லிட்டர் வரை பால் விநியோகம் செய்கிறோம். சுமார் 20 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

மாட்டுப் பண்ணையைப் பொறுத்தவரை அதிக லாபம் இல்லை. எனினும், பாலை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது உள்ளிட்டவை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வருவாயை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். சாணியை அப்படியே விற்றால் பெரிய அளவுக்கு வருவாய் இருக்காது. அதுவே மண்புழு உரமாக மாற்றி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தீரஜ் ராம்கிருஷ்ணாவின் பண்ணை மாடுகள்.

மாடுகளைப் பொருத்தவரை பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். எனினும், 6 மாதங்களுக்குத்தான் நாட்டு மாட்டுப் பால் கிடைக்கும். இதனால் கலப்பின மாடுகளையும் வளர்க்க வேண்டியுள்ளது. பால் பாக்கெட், நெய், தயிர், பண்ணை உற்பத்தியிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் தரத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. நாட்டு மாடு வளர்ப்பை மக்களிடம் பரவலாக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

மத்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் முதல்முறையாக தேசிய விருது அறிவித்தது. தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பரிந்துரையால், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் நடுவர்கள் எனது பண்ணைக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இறுதியில் நாட்டு மாடு வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கான மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் விருது’ எனக்கு கிடைத்தது.

மத்திய அரசின் பரிசோடு தீரஜ்

டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதா மோகன்சிங், இந்த விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசு வழங்கினார்” என்று பெருமையுடன் கூறினார் தீரஜ் ராம்கிருஷ்ணா.

எம்எல்ஏ மகன்

தீரஜ் ராம்கிருஷ்ணாவின் தந்தை பிஆர்ஜி.அருண்குமார். எம்எல்ஏ. அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர்.அரசியலில் ஆர்வம் இல்லாத தீரஜ், தந்தை எம்எல்ஏ என்ற அடையாளத்தை தவிர்த்து, பெரிய பண்ணையாளர், பால் உற்பத்தியாளர் என்ற அடையாளம் பெற வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார்.

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நாட்டு மாடு வளர்த்து விருதை வென்ற இன்ஜினீயர்

Leave a Reply to Mayil raj Jayaraman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *