பசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் மூலம்
கூடுதல் பால் உற்பத்தி கிடைப்பதாக காவனூர் விவசாயி தெரிவித்தார்.
சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ளது காவனூர் கிராமம். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரமான எரு கிடைக்கவும், பால் விற்பனை செய்யவும் மக்கள் பசுக்களை வளர்க்கின்றனர்.
பசுக்களுக்கு புண்ணாக்கு, மற்றும் தவிடு, பொட்டு ஆகியவற்றை வைக்கின்றனர். பசுக்களுக்கு வைக்கப்படும் புண்ணாக்கு அதிக விலைக்கு விற்பதால் புண்ணாக்கிற்கு பதிலாக கொழுப்பு சத்து மிகுந்த அசோலா தாவரத்தை தவிட்டுடன் கலந்து கொடுக்கின்றனர்.
இதனால் பாலில் கொழுப்பு சத்து கூடுவதுடன் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயி வரதப்பிள்ளை தெரிவித்தார்.
இது குறித்து, வரதப்பிள்ளை கூறியதாவது:
- விவசாத்திற்கு அடுத்த படியாக மிகுந்த அளவில் எங்கள் கிராமத்தில் பசுக்களை வளர்த்து வருகிறோம். இங்கு கிடைக்கும் பாலை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கிறோம்.
- பாலில் உள்ள கொழுப்பு சத்திற்கு ஏற்றாற்போல் பாலுக்கு விலை கொடுக்கிறார்கள். எங்களிடம் கிடைக்கும் பாலில் கொழுப்பு சத்து குறைந்து காணப்பட்டது. இதனால், விலை குறைவாக மதிப்பிடப்பட்டது.
- இதுகுறித்து, எங்கள் உழவர் மன்றத்தின் சார்பில் இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தில் தெரிவித்தோம். அதையடுத்து அசோலா உற்பத்தி செய்யவும்,
- அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். அதன்படி எங்கள் கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் அசோலா தாவரம் பயிர் செய்கிறோம்.
- இதற்காக 10 அடி நீளம் 2 அடி அகலத்தில் ஒரு தொட்டி கட்டி, அதன் அடித்தளத்தில் பாலிதீன் காகிதம் போடவேண்டும்.
- காகிதத்தின் மேல் 30 கிலோ மண் பரப்ப வேண்டும். அதன் மேல் 2 கிலோ சாணம், 10 கிராம் டி. ஏ.பி, 100 கிராம் ப்பர் பாஸ்பேட் கலந்து இரண்டு அடி தண்ணீர் விடவேண்டும்.
- இதன் மேல் ஒரு கிலோ அசோலா தாவரத்தை இடவேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் மண்ணை நன்றாக கலக்கவேண்டும்.
- ஒரு வாரத்தில் அசோலா தாவரம் 3 மடங்கு வரும். அப்போது இரண்டு பங்கை மட்டும் எடுத்து நல்ல நீரில் கழுவி மாடுகளுக்கு தவிட்டில் கலந்து வைத்து வருகிறோம்.
- இதன் மூலம் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. அசோலா தீவனம் வைத்த 10 நாட்களில் கொழுப்பு சத்து கூடுதலாகியது.
- இதற்கு முன் எங்களுக்கு 1 லிட்டர் பாலுக்கு 17 ரூபாய் கொடுத்தனர். தற்போது 20 ரூபாய் கொடுக்கின்றனர்.
- மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால்கறக்கிறோம். அப்போது ஏற்கெனவே கிடைத்ததை விட கூடுதலாக அரை லிட்டர் கிடைக்கிறது.
- பசுக்களும் இத்தாவரத்தை விரும்பி சாப்பிடுகின்றன. மாடுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
- வீட்டில் உள்ள தொட்டிகளிலேயே இதை பயிர் செய்வதால் செலவு ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் வேல்முருகன் கூறியதாவது:
- அசோலா தாவரம் தண்ணீரில் மிதக்கக்கூடிய தாவரமாகும்.இது வேகமாக வளரும் தன்மை கொண்டது.
- ஒரு கிலோ விதையை தண்ணீரில் இடுவதன் மூலம் , நன்றாக பராமரித்து வந்தால் ஒரு ஆண்டுவரை இத்தாவரம் வளர்ந்து, பயன் அளிக்கும்.
- சாதாரணமாக இங்கு 3.5 முதல் 4 சதம் மட்டுமே கொழுப்பு சத்து கிடைக்கும். அசோலாவை பயன்படுத்தி வந்தால் 4.5 முதல் 4.09 சதவீதம் வரை கொழுப்பு சத்து கூடும்.
- இதன் மூலம் விவசாயிகள் பலனடையலாம். இவர்களுக்கு இத்தாவர விதையை நாங்கள் இலவசமாக வழங்கி பயிற்சி அளித்தோம்.
- இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்