மழைக்காலத்தில் கால்நடை பராமரிப்பு

‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்’ என்று மழையின் வருகையை நம் முன்னோர்கள் வரவேற்றார்கள். இவ்வரிகள் சிலப்பதிகாரத்தில் மழையின் சிறப்பை பற்றி காணப்படுபவை. இருப்பினும் மழைக்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் சில நேரங்களில் போதாத காலம் தான்.


மழைக்காலத்திற்கு முன்னரே விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தக்க நோய் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டால் மழைக்காலம் அவர்களுக்கு பொன்மாரி பொழியும் காலம் தான் என்பதில் சந்தேகமில்லை.

வைட்டமின் ‘ஏ’

இன்று கன்றுகளாய் இருக்கும் கால்நடைகள் எதிர்காலத்தில் காளைகளாய், கறவை மாடுகளாய் விவசாயிகளுக்கு பலன் கொடுக்கக்கூடியவை.

மழைக்காலத்திலும் அதனை தொடர்ந்து வரும் குளிர்காலத்திலும் கன்றுகள் இறப்பு விகிதம் சற்று கூடுதலாக இருக்கும்.

மழை அதிகமாக பொழியும் அடைமழை காலங்களில் மாட்டுத் தொழுவங்களால் ஏற்படும் ஈரக்கசிவு மற்றும் சுத்தமற்ற காரணங்களால் கன்றுகள் எளிதில் நோய்க்கு இலக்காகின்றன.

மேலும் மழைக்காலங்களில் சாதாரணமாகவே கன்றுகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் சற்று குறைவாகவே இருக்கும். வைட்டமின் ‘ஏ’ சத்து கன்றுகளுக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு ஆதாரமாகத் திகழ்கிறது.

சுகாதாரம் தேவை

குளிர்காலங்களில் கன்றுகளுக்கு தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தின் அளவு வெயில் காலங்களில் தேவைப்படும் அளவை போல் இரு மடங்காகும். ஆனால் மழைக்காலங்களில் கன்று ஈனும் கறவை மாடுகள் சுரக்கும் சீம்பாலின் வைட்டமின் ‘ஏ’ சத்து குறைவாகவே இருக்கும்.

இதனால் தான் கன்றுகள் நோய்களுக்கு எளிதில் இலக்காகின்றன. இதை தவிர்க்க மாட்டுத்தொழுவங்களை சுற்றி மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காதபடி சற்று உயரமான இடத்தில் அமைக்க வேண்டும்.

சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி ஊசி மூலம் கன்றுகளுக்கு வைட்டமின் ஏ சத்து செலுத்தலாம்.

குளிர்காலத்தில் கன்று ஈனும் கறவை மாடுகள் சுரக்கும் சீம்பாலில் வைட்டமின் ‘ஏ’ சத்து சற்று குறைவாக இருக்கும். எனினும் பிறந்த கன்றுகளுக்கு சீம்பால் கொடுப்பதை தவிர்க்க கூடாது. சீம்பாலில் பாலை விட சத்து பொருட்கள் அதிகமாக இருக்கின்றன.

சீம்பால் கொடுக்காமல் வளர்க்கப்படும் கன்றுகள் எளிதில் நோய் வாய்ப்படுகின்றன. கன்றுகள் பிறந்த மூன்று மணி நேரத்துக்குள் தாயிடம் சீம்பால் குடிக்க செய்ய வேண்டும்.

சீம்பாலை கறந்து பாத்திரத்தில் வைத்து குடிக்க செய்வதும், அதனை காய்ச்சி கன்றுகளுக்கு தருவதையும் தவிர்ப்பது கட்டாயம். சீம்பால் அளிப்பது மழைக்காலத்தில் பெருமளவு கன்றுகள் இறப்புகளை குறைக்கும்.

தடுப்பூசி அவசியம்

மழைக்காலங்களில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி குடற்புழு நீக்க மருந்துகளை அவற்றின் எடைக்கு ஏற்ப உரிய அளவில் கொடுக்க வேண்டும். பல்வேறு குடற்புழுக்கள் சாணத்தில் காணப்படும்.

சாணத்தை கால்நடை மருத்துவர் மூலம் சோதனை செய்து, என்ன வகையான குடற் புழுக்கள் உள்ளன என்பதற்கு ஏற்ப தக்க மருந்துகளை தர வேண்டும்.

குடற்புழு நீக்கம் செய்வதும் ஒரு வகையில் கன்று இறப்பை கட்டுப்படுத்தும். எருமை கன்று பராமரிப்பில் இக்கருத்தினை முக்கியமாக செயல்படுத்த வேண்டும். சுகாதாரமான தொழுவங்களை அமைக்க வேண்டும். தொற்று நோய் வரும் முன் தடுப்பூசி போட வேண்டும்.

தொடர்புக்கு 9486469044 .


– டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *