கர்ப்பப் பை வெளித் தள்ளுதல் மாடுகள் சினையாக உள்ளபோது அல்லது கன்றுகள் ஈன்ற உடன் கருப்பையின் பின்பகுதியும், புணர் உறுப்பின் ஒருபகுதியும் சேர்ந்து சில சமயங்களில் வெளியே வந்துவிடுகின்றன. இதையே உறுப்பு தள்ளுதல் அல்லது அடித் தள்ளுதல் என்றும் கூறுவர்.
வெளித் தள்ளிய கர்ப்பப் பையில் மண், தூசி, சாணம் முதலியவை ஒட்டிக் கொள்ளும். இதனால், கிருமிகள் உள்சென்று இனப்பெருக்க உறுப்புகளைப் பாதித்து, குறைப் பிரசவத்தையோ அல்லது கருச் சிதைவையோ ஏற்படுத்திவிடும்.
ஈன்ற மாடுகளில் வெளித் தள்ளிய கர்ப்பப் பையில் நோய் தொற்று ஏற்பட்டால், கர்ப்பப் பையில் சீழ் பிடித்து, சினைப் பிடிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டு, தாற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படும்.
அதனால், கர்ப்பப் பை வெளித் தள்ளுதல் ஏற்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சை அளிக்கா விட்டால், மாடுகளின் கர்ப்பப் பையில் பாதிப்பு ஏற்பட்டு, தாற்காலிக அல்லது நிரந்தர மலட்டுத் தன்மையும், சில சமயங்களில் மாடுகளின் உயிருக்கே ஆபத்தும் ஏற்பட்டுவிடும்.
இதுகுறித்து, தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர்கள் இரா. உமாராணி, நா.ஸ்ரீ. பாலாஜி, அ. செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
- மாடுகள் வளர்ப்போர் கர்ப்பப் பை வெளியே தள்ளுதலைப் பற்றி நன்கு அறிந்து, தகுந்த தடுப்பு முறைகளையும் பராமரிப்பு முறைகளையும் கடைப்பிடிக்கும்போது, கர்ப்பப் பையை நன்கு பாதுகாப்பதன் மூலம், ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதற்கு வாய்ப்புள்ளது.
கர்ப்பப் பை வெளியே தள்ளுவதற்கான காரணங்கள்:
- ஒன்று அல்லது இரண்டு மாத கர்ப்ப காலத்தில் கர்ப்பப் பை வெளியே தள்ளுவதற்கு முக்கியக் காரணம், ஈஸ்ட்ரோஜன் என்ற கணநீர் சில மாடுகளில் அதிக அளவு சுரப்பதாகும்.
- இதன் காரணமாக, இடுப்புச் சதைப் பகுதிகள் மற்றும் கர்ப்பப் பையின் பாகங்கள் தளரச் செய்கின்றன. இந்த தளர்ச்சியின் காரணமாக, முதலில் கர்ப்பப்பை வெளியே தெரிகிறது.
- இவ்வாறு வெளியே தள்ளப்பட்ட கர்ப்பப் பையின் வாயை நுண்ணுயிரிகள் தாக்குவதால், இந்த மென்மையான உறுப்புக்கு ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது.
- இந்த எரிச்சலின் காரணமாக, மேலும் அதிகமாக கர்ப்பப் பை வெளியே தள்ளப்படுகிறது. கன்று ஈன்ற மாடுகளில் முதல் 2 அல்லது 3 நாள்களுக்குள் கர்ப்பப் பை வெளியே தள்ளுதல் ஏற்படும்.
- கன்று ஈன்ற மாடுகளில் கர்ப்பப் பை வெளியே தள்ளும்போது, புணர் உறுப்போ அல்லது கர்ப்பப் பை முழுவதும் வெளித் தள்ளப்படும்.
- கன்று ஈனுவதில் சிக்கல் ஏற்படும்போது, தாமாகவோ அல்லது பிறர் உதவி கொண்டு கன்றை வெளியே எடுக்க முயற்சி செய்தாலோ அல்லது கன்றை கயிறு கட்டி இழுத்தாலோ கர்ப்பப் பை வெளியே தள்ளுதல் ஏற்படும்.
- நஞ்சுக் கொடியானது, கன்று ஈன்ற 4 மணி முதல் 8 மணி நேரத்துக்குள் வெளியே வந்துவிட வேண்டும்.
- நீண்ட நேரம் நஞ்சுக்கொடி தங்குவதாலோ, கால்நடை மருத்துவர் இல்லாமல் தகுதியற்றவர் கொண்டு தவறான முறையில் நஞ்சுக் கொடியை வெளியே எடுப்பதாலோ, கர்ப்பப் பை வெளித் தள்ளுதல் உண்டாகும்.
அறிகுறிகள்:
- சினைப் பைகளில் கர்ப்பப் பையானது சிறிதளவோ அல்லது முழுமையாகவோ வெளி வருவதுண்டு.
- கன்று ஈன்ற மாடுகளில் கர்ப்பப் பை முழுவதுமே வெளித் தள்ளப்பட்டுவிடும். இவ்வாறு கர்ப்பப் பை வெளித் தள்ளுவதால் கர்ப்பப் பைக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
- கர்ப்பப் பையில் காயம் உண்டாகி இருந்தால், காயத்தால் ஏற்படும் எரிச்சலால், மாடுகள் முக்கிக் கொண்டே இருக்கும்.
பராமரிப்பு முறைகள்:
- மாட்டின் பின்புறமானது முன்புறத்தைவிட அரை அடி உயரமாக இருக்கும்படியான இடத்தில் கட்டிவைக்க வேண்டும்.
- சிறிது சிறிதாக தீவனம் கொடுக்க வேண்டும்.
- கர்ப்பப் பை சேதம் ஏற்படாதவாறு, பாதுகாக்க வேண்டும்.
- ஒரு சுத்தமான ஈரத் துணி கொண்டு மூட வேண்டும். சுத்தமான தண்ணீரில் சிறிது உப்பு கலந்து, மூடிய துணி மீது ஈரம் குறையாதவாறு ஊற்ற வேண்டும்.
- கன்று ஈன்ற நஞ்சுக் கொடி 8 மணி நேரத்துக்குள் விழாவிட்டால், உடனே கால்நடை மருத்துவரை நாட வேண்டும்.
மேலும் இதுகுறித்து விவரம் தெரிந்து கொள்வதற்கு, தேனி உழவர் பயிற்சி மையத்தில் 04546260047 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்