கால்நடைகளை பராமரித்திட மனம் இருந்தால் போதும். அதற்கு அதிக நீர் வசதி உடைய இடம் தான் தேவை என்பது கற்பனை. மானாவாரி பகுதிகளில் தான் அதிக பால் தரும் மாடுகள், ஆடுகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்கள் பெருக வசதி வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக நிறைய தீவன வகை பயிர்கள் வளர உகந்த சூழல் (சூரிய ஒளி, நில வளம், மழை) பல பகுதிகளில் இருந்தாலும், மானாவாரி பகுதியில் சற்று அதிகம் உள்ளது.
மானாவாரி பகுதியில் வறட்சி தாங்கி வளரும் புல் வகைகளில் கொழுக்கட்டைப்புல், நீலக் கொழுக்கட்டைப்புல், மார்வில்புல், ரோட்ஸ்புல் மற்றும் ஆஸ்திரேலியா புல் குறிப்பிடத்தக்கவை.
இவை 3 முதல் 5 அறுவடைகளின் ஒரு எக்டருக்கு 25 முதல் 40 டன் வரை மகசூல் தரும் வாய்ப்பு உள்ளது.
மானாவாரி பகுதியில் பலவகை பயறு வகை தீவனப் பயிர்கள் வளர்க்கலாம். கால்நடைகளுக்குப் புல் எப்படி அவசியமோ, அதேபோல் பயிறு வகை தீவனங்களும் தேவை. இவை ஓராண்டு பயிர்கள். குறிப்பாக குதிரைமசால், வேலி மசால், காராமணி, அவரை, சிராப்ரோ, சென்ரோ, டெஸ்மோடியம் மற்றும் கலப்போ முதலியன முக்கியமானவை.
இவற்றை தனித்தனியாக சாகுபடி செய்வதை விட தீவன மரங்கள் வளர்ந்துள்ள பகுதியில் கலந்தும் (மர ஊடு பயிர் உதவியுடன்) சாகுபடி செய்யலாம்.
சூடாடில், அகத்தி, முருங்கை, ஆச்சா, வாகை, துாங்குமூஞ்சி மரம், வேம்பு, மலை வேம்பு, வெள்வேல், கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பாலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, இலுப்பை, முசுக்கொட்டை, வேங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி முதலியவை நமது பகுதிக்கேற்ற தீவன மரங்கள் ஆகும்.
ஆண்டு முழுவதும் தீவன மரங்களின் இலைகளை கழித்து தழை தீவனத்தில் மர இலைகளை 30 சதவீதம் தரலாம்.
இப்படி எத்தனையோ தாவரங்கள் இருந்தும் இன்னும் திட்டமிடாமல் சில வகை பயிர்களையும் மேய்ச்சல் நிலத்தில் எப்போதோ பெய்த மழைக்கு வளர்ந்து சத்துக்குறைவாக நிற்கும் புற்களையும், நம்பி கால்நடை வளர்ப்பதால் லாபம் குறையும். வாய்ப்புள்ள இடம் எங்கும் மரக்கன்றுகள் தீவன பெற நட்டு வைத்திட திட்டமிட வேண்டும்.
தொடர்புக்கு 9842007125 .
டாக்டர் பா.இளங்கோவன் துணை இயக்குனர்
வேளாண்மைத்துறை, தேனி.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்