லாபம் தரும் இயற்கை விவசாயமும், கறவைமாடு வளர்ப்பும்!

கால்நடைகளை வளர்த்தா, விவசாயத்துல வருமானம் குறையுற சமயத்துல கைகொடுக்கும்கிறதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். இப்போ தண்ணியில்லாத சமயத்துலயும் பால் மூலமா தினசரி வருமானம் கிடைச்சுட்டுருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்.

பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள சதீஷ், இயற்கை மேல் ஏற்பட்ட காதலால் வேலைதேடிச் செல்லாமல், இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார். இவருடைய நிலம், சேத்துபட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டைப் பூண்டி கிராமத்தில் உள்ளது. ஒரு காலை வேளையில் சதீஷைச் சந்தித்தோம்.

“நான் பிறந்து வளர்ந்தது இந்தக் கிராமம்தான். பக்கத்து டவுன்ல இருக்குற இன்ஜீனியரிங் காலேஜ்ல சீட் கிடைச்சதால, அங்கேயே தங்கிப் படிக்க வேண்டியதா இருந்துச்சு. படிக்கிற சமயத்துல ஹோட்டல் சாப்பாடு எனக்கு ஒத்துக்கலை. பல பிரச்னைகள் வந்துச்சு. அதில்லாம நகர வாழ்க்கை எனக்கு ஒத்துக்கலை. அதனால, படிப்பு முடிஞ்சதும் கிராமத்துலயேதான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். குடும்பத் தொழிலான விவசாயத்தையே செய்யலாம், அதுவும் இயற்கை விவசாயம்தான்னு முடிவு பண்ணிட்டேன். படிக்கிறப்பவே சில முன்னோடி இயற்கை விவசாயிகளைச் சந்திச்சு விவரங்களைத் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். இதோடு தொடர்ந்து ‘பசுமை விகடன்’ புத்தகத்தையும் படிச்சுட்டுருந்தேன். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் ஐயா பேசிய வீடியோக்களைத் தேடித்தேடிப் பார்த்துப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். படிக்கிற சமயத்துலேயே ஓரளவுக்குத் தயாராகி, படிப்பை முடிச்ச கையோடு கிராமத்துக்குத் திரும்பி இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன சதீஷ் தொடர்ந்தார்…

“எனக்குக் கிணத்துப்பாசனத்தோடு கூடிய மூன்றரை ஏக்கர் நிலமிருக்கு. நிலத்துல சணப்பையும் தக்கைப்பூண்டையும் விதைச்சு மடக்கி உழவு பண்ணி, செழிம்பா எரு போட்டு அறுபதாம் குறுவை ரக நெல்லைச் சாகுபடி பண்ணினேன். ஜீவாமிர்தத்தை மட்டும்தான் இடுபொருளாகக் கொடுத்தேன். பூச்சித்தாக்குதல் இல்லாம நல்ல விளைஞ்சு வந்தது. முதல் முறையா சாகுபடி பண்ணுனதுலேயே நல்ல மகசூல் கிடைச்சது. அதை அரிசியா அரைச்சு கிலோ அறுபது ரூபாய்னு விற்பனை பண்ணினேன். தொடர்ந்து பாரம்பர்ய நெல் ரகங்கள், நிலக்கடலை, எள், காய்கறிகள்னு பயிர் செய்துகிட்டிருந்தேன். இப்போ வெயில் காலம்கிறதால, சாகுபடியை நிறுத்தி வெச்சிருக்கேன். நிலத்துல பயிர் இல்லாத இந்தச் சமயத்துலயும் எனக்கு வருமானம் கொடுத்துட்டுருக்கறது, பால் மாடுகள்தான்” என்ற சதீஷ் மாடு வளர்ப்புக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“தாத்தா வளர்த்துட்டுருந்த ரெண்டு கலப்பின மாடுகள் இருந்துச்சு. இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுகள் தேவைங்கிறதால, திருத்துறைப் பூண்டியிலிருந்து ரெண்டு உம்பளச்சேரி மாடுகளை வாங்கிட்டு வந்தேன். அடுத்து பாலுக்காக ஒரு கலப்பின மாடு வாங்கினேன். இப்போ மொத்தம் 5 மாடுகளும் 3 கன்னுகளும் இருக்கு. மாடுகளுக்காக ஒரு கொட்டகை போட்டிருக்கோம். வெயில் அதிகமா இருக்குற சமயத்துலயும், மழைக் காலங்கள்லயும் கொட்டகையில கட்டுவோம். மத்த சமயங்கள்ல திறந்த வெளியில் நிழல்லதான் கட்டுவோம். அதனால, நல்ல காற்றோட்டம் கிடைக்குது. மாடுகளுக்குக் காலை நேரத்துலயும், சாயங்காலத்திலயும் பசும்புல் கொடுப்பேன். தொடர்ந்து வைக்கோலும் கொடுப்பேன். நெல் சாகுபடி பண்ணுனப்போ கிடைச்ச வைக்கோலைப் போர் போட்டு வெச்சிருக்கேன். அதனால, வைக்கோலுக்குப் பஞ்சமில்லை. காலையில மேய்ச்சலுக்குப் போறதுக்கு முன்னாடி பிண்ணாக்குத் தண்ணி கொடுப்பேன். மேய்ச்சல் முடிஞ்சு வந்ததும் தவிடு, கடலைப்பொட்டு, உளுந்தம் பொட்டு, பயத்தம் பொட்டு எல்லாத்தையும் தண்ணீர்ல கரைச்சுக் கொடுப்பேன். நாட்டு மாடுகளைவிடக் கலப்பின மாடுகளுக்குத் தவிட்டையும் பொட்டையும் அதிகமாகக் கொடுக்கணும். காலையில 6.30 மணிக்கு மேய்ச்சலுக்குக் கிளம்பி, 11 மணிக்குத் திரும்பிடும். திரும்பவும் சாயங்காலம் 4 மணிக்கு மேய்ச்சலுக்குக் கிளம்பி 6 மணிக்குத் திரும்பும்” என்ற சதீஷ், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“ரெண்டு நாட்டு மாடுகள்ல இருந்து தினமும் 6 லிட்டர் அளவுதான் பால் கிடைக்கும். கலப்பின மாடுகள் ஒவ்வொண்ணும் தினமும் 10 லிட்டர் அளவுக்கு மேல பால் கொடுக்கும். ஒவ்வொரு மாடும் வெவ்வேறு சமயங்கள்ல கன்னு ஈனுறதால, எப்பவும் பால் கிடைச்சுட்டே இருக்குது. குறைஞ்சபட்சம் 15 லிட்டர் பால் கிடைச்சுடும். அதிகபட்சமா 40 லிட்டர் அளவுக்குப் பால் கிடைக்கும். இப்போ தினமும் 35 லிட்டர் அளவுக்குப் பால் கிடைச்சுட்டுருக்கு. சராசரியா தினமும் 30 லிட்டர் கணக்குல வருமானம் கிடைச்சுட்டுருக்கு. நான், பக்கத்துல இருக்குற சொசைட்டிக்குதான் பாலைக் கொடுக்குறேன். நாட்டு மாட்டுப் பாலையும் கலந்து கொடுக்குறதால பால்ல கொழுப்பு அளவு அதிகமா இருக்குது. ஒரு லிட்டருக்கு 24 ரூபாய் விலை கொடுக்குறாங்க. தினமும் சராசரியா 720 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல மருத்துவம், தீவனம், பராமரிப்புனு எல்லாச் செலவும் சேர்த்து 220 ரூபாய் போக, தினமும் 500 ரூபாய் அளவுக்கு லாபமாகக் கிடைக்குது” என்ற சதீஷ் நிறைவாக,

“மருதம் இயற்கை வேளாண் கூட்டுறவுப் பண்ணைனு உருவாக்கி விவசாயிகளை உறுப்பினராச் சேர்த்துட்டுருக்கேன். அது மூலமா நிலக்கடலை, அரிசினு கொள்முதல் பண்ணி விற்பனை செய்றேன்.

இயற்கையில் விளைஞ்ச நிலக்கடலையை மரச்செக்குல கொடுத்து ஆட்டி எண்ணெய் விற்பனையும் செய்றேன். இது மூலமாவும் கணிசமான வருமானம் கிடைச்சுட்டுருக்கு. யார்கிட்டயும் கைகட்டி வேலை செய்யாம சுதந்திரமா இருக்கேன். அதனால, மன நிறைவா இருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

மாடுகளுக்குக் கை வைத்தியம்!

மாடுகளுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்குக் கைவைத்தியம் செய்து கொள்கிறார், சதீஷ். அதுகுறித்துப் பேசியவர், “மாடுகளுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வந்தால் கற்றாழையையும், வேப்பிலையையும் இடிச்சு வெல்லம் கலந்து கொடுப்பேன். இதனால, குடல் புழுக்களும் அழிஞ்சுடும். மூங்கில் இலையைச் சாப்பிடக்கொடுத்தா வயிறு சுத்தமாகிடும். மிளகு, சீரகம், வெந்தயம் மூணுலயும் தலா 2 ஸ்பூன் எடுத்து பொடிச்சுக் கொடுத்தா வயிற்று உப்புசம் சரியாகிடும்.

தீவனம் எடுக்காம இருந்தா… கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ரெண்டையும் இடிச்சு வெல்லம் கலந்து கொடுத்துடுவேன். புண் வந்தால், வேப்பெண்ணெயில மஞ்சளைக்குழைச்சுத் தடவிவிடுவேன். கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நாலு லிட்டர் தண்ணீர்ல போட்டுக் கஷாயம் காய்ச்சி கொடுத்தால், கழிச்சல் குணமாகிடும்” என்றார்.

தொடர்புக்கு, சதீஷ், செல்போன்: 8940462759 .

நன்றி: விகடன்


 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *