வாழ்க்கைக்குப் பணம் முக்கியம்தான். அதைவிட மனமகிழ்ச்சி மிகவும் முக்கியமல்லவா? நமக்குப் பிடிச்ச வேலையைத் தொழிலாக பண்ணும்போது, மனமகிழ்ச்சி, பணம் இரண்டுமே கிடைச்சிடும். அதைத்தான் செய்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புத்தளத்தைச் சேர்ந்த எஸ்.பி.சுதீந்திரன்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஆட்டு இனங்களை வாங்கிப் பண்ணையை உருவாக்கி வைத்திருக்கிறார். வீட்டின் பின்புறம் பரண் அமைத்து, ஒவ்வொரு வகை ஆடுகளுக்கும் தனித்தனியாகக் கொட்டகை அமைத்திருக்கிறார். ஒரு காலைப்பொழுதில் ஆடுகளுக்குக் கடலைக்கொடியைக் கொடுத்துக் கொண்டிருந்த சுதீந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.
“நான் கட்டுமானத்தொழில்ல இருக்கேன். ஆடுகளை வளர்க்க ஆரம்பிச்சதுக்கு ஒரு காரணம் இருக்குது. ஒருமுறை ‘காது நீண்ட ஆடு ஒரு லட்சம் ரூபாய்’னு நண்பர்கள் பலரும் ஆச்சர்யமாப் பேச ஆரம்பிச்சாங்க. ஆடுன்னாலே இறைச்சிக்காகத்தானே. ஒரு ஆடு 100 கிலோ இருக்குன்னு வெச்சுக்குவோம். கிலோ 300 ரூபாய்னாலும் 30,000 ரூபாய்தானே வரும். ஆனா, எதுக்கு இவ்ளோ ரேட் சொல்றாங்கனு யோசிச்சேன். இதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் வந்திடுச்சு. புதிய ரக ஆடுகளைத் தேட ஆரம்பிச்சேன். அதுக்காக 6 மாசமா இந்தியா முழுக்கச் சுத்தினேன். யூடியூப்ல ஆடுகளைப் பத்தியும் ஆட்டுப் பண்ணைகளைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்னு பல மாநிலங்களுக்குப் போனேன்.
பீட்டெல், சிரோகி, கரோலி, தோத்தாபாரி, ஜமுனாபாரி, பார்பாரி, பன்னூர், காஷ்மீர் கம்பளி ஆடான ஆஸ்திரேலியன் மெலான், ஜாலாவாடினு பல ரகங்கள் பற்றித் தெரிஞ்சுகிட்டேன். தமிழ்நாட்டுல அதிகமா வளர்க்கிற வெளிமாநில இனங்களான போயர், தலைச்சேரி வகைகளை வளர்க்காம புதிய ரகங்களை வாங்கி வளர்க்கலாம்னு முடிவு செஞ்சேன். ஒவ்வொரு மாநிலமா போய் ஆடுகளைச் சேகரிச்சு ஊருக்குக் கொண்டு வர்றது கடுமையான வேலையா இருந்துச்சு. ராஜஸ்தான்ல இருந்து சிரோகி இன ஆடுகள், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர்ல மானும் ஆடும் கிராஸ் பண்ணின பார்பாரி ஆடுகள், பஞ்சாப்ல பீட்டெல் இன ஆடு, கர்நாடகாவுல இருந்து பன்னூர், ஆக்ரா பக்கத்துல இருந்து கரோலி இன ஆடுகளை வாங்கினேன்.
ஒவ்வொரு மாநிலங்களாப் போய் ஆடுகளை வாங்கிக்கொண்டு வர்றதுக்கே ஒரு வருஷம் ஆயிருச்சு. ஆடுகளைக் கொண்டு வர்றதுக்குச் சுமார் 40 லட்சம் ரூபாய் ஆச்சு. அதுல போக்குவரத்துச் செலவு மட்டுமே 10 லட்சம் ரூபாய். ஆடுகள் ஒண்ணுக்கொண்ணு கலப்பு ஆகிறக் கூடாதுனு தனித்தனியா கொட்டகை அமைச்சு வளர்க்கிறேன். இந்தக் கொட்டகைக்காக மட்டுமே 30 லட்சம் ரூபாய் ஆயிடுச்சு. எல்லாம் சேர்த்துக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் முதலீடு பண்ணியிருக்கேன்.
இது, நான் லாபத்துக்காகவோ, சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டோ பண்ணுன விஷயம் கிடையாது. என்னுடைய மகிழ்ச்சிக்காக ஆடு வளர்ப்பை செய்றேன். வருமானத்தை முன் நிறுத்தாம, வித விதமான ஆடு வளர்ப்புல ஆர்வம் காட்டுறதால, என் அனுபவத்தைக் கேட்க, தஞ்சாவூர், கேரளாவுல இருந்தும் என்னைக் கூப்பிடுறாங்க” என்று படபட வெனப் பேசியவர், ஒவ்வொரு கொட்ட கைக்கும் அழைத்துச் சென்று ஆடுகளைக் காட்டினார்.
“நான் வெச்சிருக்குறதுல பீட்டெல், கரோலி, ஜமுனாபாரி, சிரோகி, தோத்தாபாரி, ஆஸ்திரேலியன் மெலான், ஜாலாவாடி, பன்னூர்னு 8 வகை ஆடுகள்தான் இந்தியாவின் முக்கியமான ஆட்டு இனங்கள். துருக்கி நாட்டுல இருந்து இந்தியாவுக்கு வந்த ‘தும்பா’ங்கிற ஆடு இனம் மேற்குவங்கத்தில இருக்கு. அந்த இனத்து ஆட்டுக்கு வால் தட்டையா இருக்கும். அதை அதிகமா இறைச்சிக்குப் பயன்படுத்துவாங்க. ரெண்டு வருஷத்துல நூறு கிலோ வரைக்கும் எடை வரும். அந்த ரகத்தை மட்டும் நான் இன்னும் வாங்கல. தேடிகிட்டிருக்கேன். சீக்கிரம் வாங்கிருவேன்.
வெளிமாநிலத்துல இருந்து ஆடுகளைக் கொண்டு வர்றதுக்காகவே ‘டபுள் டிராக்’ போட்ட ஒரு வண்டி வெச்சிருந்தேன். அந்த வண்டிக்கு பெர்மிட் போட்டு, ரெண்டு டிரைவரும் வெச்சிருந்தேன். ஒரு இனத்தில 40 ஆடுக வரைக்கும் ஒரே தடவையில கொண்டு வந்திருவேன். 2013-14 வாக்குல மாசத்துக்கு ரெண்டு வாட்டி கர்நாடகாவுக்கு எங்க வண்டி போகும்” என்றவர் தன்னிடம் இருக்கும் ஆடுகளின் பூர்வீகம், அதன் தன்மைகள் பற்றி விவரித்தார்.
“ஆரம்பத்துல நான் தலைச்சேரி வெச்சிருந்தேன். அது தமிழ்நாட்டுல நிறையபேரு வெச்சிருக்கிறதுனால, அதை வளர்க்கிறத விட்டுட்டேன். ஜமுனாபாரியில உ.பி ஜமுனாபாரி என்கிட்ட இருக்கு. ஹைதராபாத் ஜமுனாபாரியில கிடா வெச்சிருக்கேன். பெட்டை ஆடு மத்தவங்க அதிகமா வெச்சிருக் கிறதுனால நான் வெச்சுக்கல. மற்ற பிரதேசங் கள்ல இருந்து வேறவேற காலநிலையில இருந்து கொண்டு வந்த ஆடுகளை நம்ம சூழலுக்குக் கொண்டு வர்றதுக்கு ஆரம்பத்துல நான் கடுமையா போராடியிருக்கேன். தொழிலையும் பாத்துட்டு இரவு பகலா பண்ணையிலயே இருந்த நாள்களும் உண்டு” என்றவர் ஆடுகளைப் பராமரிக்கும் விதம் குறித்துப் பேசினார்.
“ஆடுகளுக்கு என்ன நோய் வந்தாலும் நானே நேரடியா கவனிப்பேன். பராமரிப்பு அவ்வளவு கஷ்டமா எனக்குத் தெரியல. ஆட்டுப் புழுக்கைகளைக் கூட்டி, பண்ணை யைச் சுத்தமா வைக்கணும். பரண் மேல வளர்க்கிறதுனால குட்டி ஆடுகளுக்குக் கால் இடுக்கிலச் சேற்றுப்புண் வராம பாதுகாக் கணும். ஆடுகளுக்கு 3 வேளையும் தேவையான உணவு கொடுக்கணும். இதைச் சரியா செஞ்சா போதும், ஆட்டுக்குப் பெரிய அளவுல செலவு கிடையாது. கிடா ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 30 ரூபாய், பெட்டை ஆட்டுக்கு 15 ரூபாய் செலவு ஆகும். தீவனப்புல்லுக்காக நான் ரொம்ப மெனக்கெடுறது இல்ல. புல்லு இருந்தா மட்டும்தான் ஆடு வளர்க்க முடியும்ங்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை.
என்னோட வேலைக்காக வண்டிகள் சேரன்மாதேவி உள்ளிட்ட பல இடங்களுக்குப் போகும். அங்கயிருந்து கடலைக் கொடி வாங்கிட்டு வந்து இருப்பு வெப்போம். எங்கையாவது பலா மர இலை இருந்தாலும், டிரைவர்கள் வாங்கிட்டு வருவாங்க. கடையில இருந்து புண்ணாக்கு, பொட்டுக்கடலைத் தோடு வாங்கி வெச்சிருக்கோம். கடலைப் புண்ணாக்கு, மக்காச்சோள மாவு, கம்பு மாவு, நரிப்பயறு தூசி, கோதுமைத் தவிடுன்னு எல்லாம் கடையில இருந்து வாங்கி வெச்சிருக்கிறோம். இதைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கலந்துக்குவோம். அதுல இருந்து தினமும் 250 கிராம்ல இருந்து 300 கிராம் வரைக்கும் ஒரு ஆட்டுக்குக் கொடுப்போம். அதிகமா காஞ்ச கடலைக்கொடியை வெச்சே எங்க பண்ணையை நடத்திட்டு இருக்கோம்.
ஆட்டுக்குச் சின்னப் பிரச்னை வந்தாலே உடனே சரி பண்ணிடுவேன். தீவனம், மருந்து இருப்பு வைக்கத் தனித்தனியா ஒரு அறை ஒதுக்கியிருக்கோம். பண்ணையில குட்டி மருந்துக்கடையே வெச்சிருக்கேன். ஆரம்பத்துல குட்டிபோட்டதும் தாயும் குட்டியும் இறந்துபோறதுன்னு நிறைய பிரச்னை இருந்துச்சு. சில இழப்புகளுக்குப் பிறகு, என்ன பிரச்னைக்கு என்ன மருந்துனு எழுதி வெச்சிருக்கிறேன். 7 வருஷ அனுபவத்துல ஆடுகளோட உரையாடியாச்சு. அதனால ஆடு என்ன செய்யும், குட்டி போட்டா என்ன செய்யணும்னு தெரிஞ்சு கிட்டேன்” என்றவர் நிறைவாக,
“கொரோனா ஊரடங்குக்கு முன்னாடி என்கிட்ட 300 ஆடுகளுக்கு மேல இருந்துச்சு. அந்தச் சமயத்தில நல்ல விற்பனை இருந்தது. அதனால நான் நிறைய ஆடுகளை வித்துட்டேன். இப்ப 150 ஆடுகள் வெச்சிருக்கிறேன். என் ஆடுகளுக்கு நான்தான் விலை நிர்ணயம் பண்ணுறேன். வளர்க்குறதுக்கு மட்டும்தான் கொடுக்குறேன். ஒரு கிலோ 400 முதல் 450 ரூபாய்னு கொடுப்பேன். 3 மாச குட்டிகளைச் சுமார் 8,000 ரூபாய் வரைக்கும் விக்கிறேன்’’ என்றார்.
தொடர்புக்கு, சுதீந்திரன், செல்போன்: 9442078340
(இரவு 8 மணிக்கு மேல் பேசவும்)
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்