30 வருட சிங்கப்பூர் வாழ்க்கைக்கும், சர்வதேச நிறுவன வேலைக்கும் பை சொல்லி புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி 20 ஏக்கரில் நவீன ஹைடெக் பால்பண்ணையை அமைத்து அசத்திவருகிறார் தீபக் குப்தா.
பஞ்சாப்பைச் சேர்ந்த தீபக் குப்தா, பட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூரில் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகள் தொடர்ந்து உணவு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர், இந்தியாவில் சொந்த மாநிலமான பஞ்சாப் வந்த அவர், `ஹிமாலயன் கீரிமரி’ என்ற பெயரில் பால் பண்ணை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் இந்தியாவுக்கு விடுமுறைகளில் வருவது வழக்கம். அப்போது பால் கலப்படம் மற்றும் மாசுபாடு குறித்து அதிகம் கேள்விப்பட்டிருக்கிறார். இவரது குடும்பத்தினரும்கூட சுத்தமான பாலை வாங்குவதற்காக அதிகம் சிரமப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்துதான் இவரது தொழிலுக்கான யோசனை உதிக்க ஆரம்பித்திருக்கிறது.
உணவுத்துறை பணி காரணமாக வேளாண் நிலங்களுக்கு அவ்வப்போது சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், குப்தா. அப்போது பால் தொழில் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்.
சண்டிகருக்கு அருகே உள்ள நபா என்ற பகுதியில், 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கிறது, குப்தாவின் பண்ணை. பண்ணை முழுவதும் மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்களால் சூழப்பட்டு நடுவில் பால் பண்ணை அமைந்துள்ளது. பால் பண்ணையில் மொத்தம் 350 பசுக்கள் உள்ளன. பண்ணையில் இருந்து இயந்திரங்களில் சேகரிக்கப்படும் பாலானது, குளிர்விக்கப்பட்டு, பின்னர் பதப்படுத்தப்பட்டு, ‘ஹிமாலயன் கீரிமரி’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார். இந்தப் பாலை கொதி நிலைக்கு உட்படுத்தாமல் நேரடியாகப் பருகலாம். 24 மணிநேரமும் மாடுகள் நவீன தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதற்காகவே தளர்வான கொட்டகைகள், பண்ணை முழுவதும் குளுகுளு சூழல், மின் விசிறிகள் மற்றும் சுழலும் தூரிகைகளால் மாடுகளை எப்போதும் சுத்தம் செய்தல் என மாடுகளின் நலன்களில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நிலத்தில் விளையும் மக்காச்சோளம், கோதுமை தவிடு, சோயா மற்றும் தாதுக்கள் நிறைந்த பசுந்தீவனங்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இந்த பயிர்களை விளைவிக்க மாட்டு எருவையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை உண்ணும் மாடுகள் கொடுக்கும் பால் அதிக சுவையாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது.
இங்கிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்குப் பால் விநியோகம் செய்து வருகிறார், குப்தா. இன்னும் சில நாள்களில் அதிகமான இடங்களில் ஹிமாலயன் கீரிமரி பால் நிறுவனத்தின் கிளைகளை திறக்க இருக்கிறார்கள்.
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்