ராமநாதபுரத்தில் புதிய நுட்பத்தை பயன்படுத்தி, இயற்கை வேளாண்மை முறையில் காளான் சாகுபடி துவக்கப்பட்டுள்ளது. தொண்டி அருகே உசிலனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு,65. கடந்த ஏழு ஆண்டுகளாக ராமநாதபுரம் மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில், காளான் வளர்ப்பு குடில்கள் அமைத்து காளான் உற்பத்தி செய்து வருகிறார்.
மாவட்ட நிர்வாகம் வழங்கிய இடத்தில், தொழில் செய்வதால், மகளிர் திட்டம் சார்பில், காளான் வளர்ப்பது குறித்து பயிற்சியும் அளிக்கிறார். பொதுவாக, காளான் வளர்ப்பதற்கு வைக்கோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலதன பொருள் சமீப காலமாக கிடைக்கவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியதால், வைக்கோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், காளான் உற்பத்தியை தொடர முடியவில்லை. வைக்கோல் வாங்குவதற்கு அதிக தொகை செலவிடும் நிலை ஏற்பட்டது. இதனால், மாற்று மூலப்பொருள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், தென்னை நார் கழிவுகளை பயன்படுத்தி சோதனை முறையில், காளான் விதை போட்டு பரிசோதனை செய்தார். இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. தென்னை நார் கழிவில் காளான் அமோகமாக வளர்ந்தது. வைக்கோலை பயன்படுத்துவதை விட இதில் கூடுதல் மகசூல் கிடைத்தது.
ராமு கூறியது:
பால் காளான் வளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன். தென்னை நார் கழிவை பயன்படுத்தி யாரும் இதுவரை செய்யாத நிலையில், காளான் உற்பத்தி செய்துள்ளேன். முதற்கட்டமாக 80 பிளாஸ்டிக் பைகளில் தென்னை நார் கழிவை பயன்படுத்தி காளான் வளர்த்தேன்.
தற்போது, முதல் அறுவடை முடிந்த நிலையில், இரண்டாவது அறுவடைக்கு தயாராக உள்ளது. இதற்கு 2000 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்துள்ளேன்.
40 கிலோ வரை 2 மாதங்களில் கிடைக்கும். வெளி சந்தையில் கிலோ 150 ரூபாய்க்கு விற்பதால் 6000 ரூபாய் கிடைக்கும். இதனால், 4000 ரூபாய் லாபம் உறுதி. இப்படி அதிகமாக காளான் உற்பத்தி செய்தால், குறைந்தது மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம், என்றார். தொடர்புக்கு 7373900901 .
– எஸ்.பழனிச்சாமி, ராமநாதபுரம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்