இன்று மழை கிடைத்த அனைத்து தோட்டங்களிலும் கட்டாயம் வளர்க்க வேண்டியது அகத்திச் செடி
முருங்கை, கறிவேப்பிலை, புதினா முதலிய கீரைகள் நமக்கும், கால்நடைகளுக்கும் அற்புத உணவாகி உடல் நலம் பேணுகிறது.
குறிப்பாக பயறு குடும்பத்தை சேர்ந்த அகத்திக்கீரை விதைகள் வரப்பிலும், வேலிப்பகுதியிலும் இணை பயிராக மரங்கள் நட்ட பகுதிகளில் சேர்த்தும் நட உகந்தவை.
பொதுவாக கீரைகள் செரிமானத்தை கூட்டும் அற்புத திறன் கொண்டவை. அகத்திக்கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து அதிகம் உள்ளது.
உடலில் உண்டாகும் அரிப்புகள் நீங்கவும், வயிற்றில் உண்டாகும் புழுக்களை அழிக்கவும் சக்தி கொண்டது. இது தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும். வாய்ப்புண்ணை நீக்கும் அருங்குணம் கொண்டது.
அகத்திக்கீரையை ஒரு அடி இடைவெளியில் வரிசையாக விதைத்து மூன்று அடி வரை வளர்ந்ததும் பிறகு நுனியை ஒடித்து விடலாம்.
சிறு புதர் போல வளர்த்து, அவ்வப்போது ஒடித்து பயன்படுத்தலாம். மரமாக விட்டால் எட்டாத உயரம் செல்ல வாய்ப்புள்ளது.
அகத்திப்பூ சத்துள்ள உணவாகும். அனைத்து மண்ணிலும் வளரும். மாடித்தோட்டம் அமைத்தும் வளர்க்கலாம். கால்நடைகள், கோழி, முயல், வாத்து, பன்றி போன்றவற்றிற்கு தினமும் உண்ண தரலாம்.
அளவோடு அகத்தியை சேர்ப்பதும், செரிமானத்துக்கு உரிய பொருட்களுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
முதிர்ந்த கீரைகளை கால்நடைகளுக்கு கொடுத்து, இளம் கீரைகளை மட்டுமே சமைக்க வேண்டும்.
தொடர்புக்கு 9842007125
– டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்