முழு நேரமும் நிலத்துடன் சேர்ந்து உழைத்து, மண்ணை நேசித்தால் உரிய பலன் கிடைக்கும் என்கிறார் கீரை சாகுபடியில் சாதிக்கும் உடுமலை முன்னாள் ஆசிரியர் விவசாயி த. பிரபாகரன் (29).
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலையில் உள்ள கிளுவன்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் பிரபாகரனும், அவரது மனைவியும் இன்றைக்கு முழு நேர விவசாயிகள். தங்களுக்கு இருக்கும் சிறிய நிலத்துடன், கூடுதல் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கீரை விளைவித்து வருகின்றனர்.
விவசாயம் நம்பகமானது
விவசாயி த.பிரபாகரன் கூறுகையில், “நான் எம்.எஸ்.சி., பி.எட். முடித்துவிட்டு மாதம் ரூ. 4 ஆயிரம் சம்பளத்தில் தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். சம்பளம் முழுவதும் போக்குவரத்து செலவுக்கே போய்விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
எங்களுக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. விவரம் தெரிந்த நாள் முதல் பெற்றோருடன் விவசாயத்துக்குப் பாடுபட்ட நிலம் என்பதால், அந்த மண்ணை நன்கு அறிந்திருந்தேன்.
எங்களது நிலத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, கீரை நல்ல பலன் கொடுக்கும் என்று தெரியவந்தது. எனது மனைவி சிவகாமி (27) எம்.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். அவரும் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு விவசாயத்தில் அக்கறை காட்டினார். இருவரும் முழு நேரமாகக் கீரை சாகுபடியில் ஈடுபட்டுவருகிறோம்” என்கிறார்.
நேரடி விற்பனை
ஆழ்குழாய் பாசனத்தை அதிகமும் நம்பியுள்ள இவர்கள் சிறு கீரை, மணத் தக்காளி, வெந்தயக் கீரை, பாலக் கீரை, அரைக் கீரை எனப் பல வகை கீரைகளைச் சாகுபடி செய்துவருகின்றனர். உடுமலையில் உள்ள உழவர் சந்தைக்குத் தினமும் நேரடியாகக் கொண்டு சென்று விற்பதால், நல்ல விலை கிடைக்கிறது.
இவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மூலம் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்கள் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குக் கீரை விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது.
ரூ. 2 லட்சம்
வருடத்தில் 6 மாதங்களுக்குப் பலன் தருகிற கீரை ரகங்களில் 6 முறை அறுவடை நடக்கும். ஒரு முறைக்கு 12,000 கட்டு கீரை கிடைக்கும். 6 முறைக்கு 72,000 கட்டுகளுக்குத் தலா ரூ.5 கிடைக்கும்.
அதனால் ஆண்டு வருவாய் சுமார் ரூ. 3 லட்சம் கிடைக்கும். இதில் ஆள்கூலி, அடியுரம், பராமரிப்புச் செலவுகளுக்காகச் சுமார் ரூ. 1 லட்சம்வரை செலவு பிடிக்கும். எஞ்சியது லாபம்தான் என்கிறார் பிரபாகரன்.
அடுத்ததாகக் கீரையுடன் பசுங்குடில் விவசாயம் மூலம் மலைக் காய்கறிகளைச் சாகுபடி செய்யத் திட்டமிட்டிருக்கிறார் பிரபாகரன்.
இவரைப் போலவே பலரும் இப்பகுதியில் கீரை சாகுபடி செய்துவருவதால், ‘கிளுவன்காட்டூர் கீரை’ சுற்றுவட்டாரத்தில் பிரபலமாகிவருகிறது.
விவசாயி பிரபாகரனைத் தொடர்புகொள்ள: 09965351536
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
அருமை தோழரே.மக்களுக்கு இன்னும் கீரைகளின் மகத்துவத்தை நன்கு அறியப்படுத்தவேண்டும்
தரமான கீரை விதை கள்ள எங்கு கிடைக்கும்?
டிவி