கொத்தமல்லி சாகுபடி

இரகங்கள் : கொத்தமல்லி  கோ 1, கோ 2 மற்றும் கோ 3, கோ (சி.ஆர்) 4

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6-8 வரை இருக்கவேண்டும். மானாவாரியாகப் பயிரிட ஈரமான கரிசல் மண் ஏற்றது, வெப்பநிலை சராசரியாக 20-25 செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

பருவம் : கீரைக்காக பாத்திகளில் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிராக இரந்தால் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.

விதையும் விதைப்பும்

ஜுன் – ஜுலை மற்றும் அக்டோபர் மற்றும் – நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றது.

விதையளவு : 10-12 கிலோ / எக்டர் (இறவைக்கு) 20-25 கிலோ / எக்டர் (மானாவாரிக்கு) கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்கவேண்டும். உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதை முளைக்காது.

விதை நேர்த்தி : மானாவாரிப் பயிராக இருந்தால் விதைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் பொட்டாசியம் – டை – ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்த கரைசலில் 16 மணி நேரம் விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கொண்டு நேர்த்தி செய்து விதைத்தால்  வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

விதை விதைப்பான் மூலம் 20 x 15 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். விதைகள் 8-15 நாட்களுக்குள் முளைத்துவிடும். மானாவாரி சாகுபடியில் விதைகளைத் தூவும் முறையில் விதைத்து விட்டு நாட்டுக் கலப்பைக் கொண்டு மூடிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : எக்டருக்கு 10 கிலோ தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். விதைப்பதற்கு முன் இறவை மற்றம் மானாவாரிப் பயிர்களுக்கு 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

மேலுரம் : இறவைப் பயிருக்கு மட்டும் விதைத்த 30வது நாள் எக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அளிக்கவேண்டும்

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் மற்றும் மூன்றாம் நாள் அதன் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்குள் ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களைகள் முளைக்கும் முன்னர் புளுக்குளோரலின் எக்டருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து பயிர் களைதல் வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். மானாவாரிப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் கழித்து 250 பிபிஎம்  சிசிசி என்ற பயிர் ஊக்கி தெளித்தால் பயிர் வறட்சியைத் தாங்கி வளரும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

அசுவினிப்பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 20 இசி மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

நோய்கள்

சாம்பல் நோய் : எக்டருக்கு 1 கிலோ கந்தகப்பொடி தூவவேண்டும்.

வாடல் நோய் : இந்நோய் வேர்களைத் தாக்குவதன் மூலம் செடி பச்சையாக இருக்கும் போதே வாடிவிடும். இதைக்கட்டுப்படுத்த வாடல் நோய் தாக்காத நல்ல விதைகளைப் பயன்படுத்தவேண்டும். ட்ரைக்கோடெர்மா விரிடி மற்றும் பூஞ்சாணக் கொல்லியினால் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழவேண்டும். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரே வயலில் கொத்தமல்லி சாகுபடி செய்தலைத் தவிர்க்கவேண்டும்.

அறுவடை

விதைத்த 30வது நாளில் செடிகளைக் கலைத்து விடுவதன் மூலம் கீரைகளாக அறுவடை செய்யலாம். சாதாரணமாக விதைத்த 90 முதல் 110 நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம். காய்கள் நன்கு பழுத்தவுடன், காயின் நிறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.

மகசூல் (எக்டருக்கு) : மானாவாரி சாகுபடியில் 300-400 கிலோ விதைகள், இறவையில் 500-600 கிலோ விதைகள் கீரையாக 6-7 டன்கள்.

 நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *