ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரத்த்தில் குறைந்தளவு நீரை பயன்படுத்தி பலவகை கீரை சாகுபடி செய்து விவசாயி விற்பனை செய்து வருகிறார். ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் வறட்சியான பகுதி. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் உள்ள இப்பகுதியில் கிணற்று பாசனம் மூலம் குறைந்த அளவு நிலத்தில் பல ஆண்டுகளாக பல வகை கீரைகளை விளைவித்து வருவாய் ஈட்டுகிறார் விவசாயி ராம்தாஸ்.
மார்கெட்டில் மவுசு
கிணற்றில் சுரக்கும் குறைந்தளவு நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, மிளகுதக்காளி கீரை, அகத்திக்கீரை விளைவிக்கப்படுகிறது. இதற்கு அதிக முதலீடும் தேவை இல்லை. கூலியாட்கள் பிரச்னையும் இல்லை. ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் பல வகை கீரைகளை தனது மனைவியுடன் சேர்ந்து வளர்த்து, பராமரித்து தினமும் மார்க்கெட் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் என்பதால் இவரது கீரைக்கு மார்க்கெட்டில் எப்போதும் மவுசுதான்.
இயற்கை உரத்தால் அமோகம்
விவசாயி ராம்தாஸ், “கீரை விதைகளை விளைவித்து எடுப்பது சிரமமான வேலை என்பதால், கிலோ ரூபாய் ஆயிரம் வரையில் விற்கப்படும் விதைகளை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு முறை நடவு செய்யப்படும் கீரை 15 நாளில் வளர்ந்து விடும். 15 நாளுக்கு ஒரு முறை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தலாம். கீரை விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில வகை பூச்சி தாக்குதலை சமாளிக்க அதற்கான பொடிகளை பயன்படுத்துகிறோம். மழை, பனி காலங்கள் கீரை சாகுபடி ஏற்றதல்ல.
இதனால் அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் கீரை விளைச்சல் தடைபட்டு விடும். வேலையாட்கள் தேவை இல்லை என்பதால் குடும்பத்தினருக்கான வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஏக்கருக்கு ஒரு முறை 600 கிலோ வரை கிடைக்கும். தற்போது கீரைகள் கிலோ ரூபாய் 5 முதல் ரூ.10 வரை விலைபோகிறது. கீரைகளை மார்க்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சென்றால் மட்டுமே விற்பனை சாத்தியமாகும். இல்லையேல் வாடிப்போகும். ஆரோக்கியம் தரும் கீரைக்கு என்றைக்கும் மவுசுதான். இந்த விவசாயத்தில் திருப்தி கிடைப்பதால் பல ஆண்டுகளாக இதனை தொடர்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்