காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.25 டன் குப்பை சேகரமாகிறது. இதில் மட்ககூடிய கழிவு 400 கிலோ. எளிதில் மட்கக்கூடிய காய்கறி கழிவு, இலை கழிவுகளை தனியாக சேகரித்து அவற்றை இயற்கை உரமாக மாற்றி சந்தை மட்டுமன்றி விவசாயிகளுக்கும் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.
செயல் அலுவலர் கண்ணன் கூறும்போது:
பள்ளத்தூர் வாரச்சந்தை, தினசரி ஓட்டல் மற்றும் கடைகளில் கிடைக்கும் ஓட்டல் கழிவு தனி லாரி மூலம், காலை 6 முதல் 9 மணிக்குள் சேகரிக்கப்படுகிறது. அவற்றை கானாடு காத்தான் உரப்பூங்காவுக்கு கொண்டு சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 தொட்டிகள் மூலம் மண்புழு, கலவை உரமாக மாற்றி வருகிறோம்.
எளிதில் மட்க கூடிய ஈரம் நிறைந்த கழிவுகளை முதல் நான்கு நாட்கள் அழுக வைத்து, அவற்றை கிண்டி விட்டு, அதில் தொட்டிக்கு மூன்று முதல் நான்கு கிலோ மண்புழுவுடன் சாணத்தை சேர்த்து கலக்குகிறோம். 21 நாள் மட்கிய பின் அவை மண்புழு உரமாக மாறிவிடும்.
இதில் மட்க நாளாகும் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து அதில் “இ.எம்.சொலூஷன்’ (E.M Solution) எனப்படும் பூஞ்சை காளானை சேர்த்து அடுக்குகளாக வைக்கின்றோம். எட்டு அடி உயர குப்பை 2 மாதத்தில் 2 அடியாக குறைந்து விடும். இது கலவை உரமாக பயன்படுகிறது. மண்புழு உரம் கிலோ ரூ.10க்கும், கலவை உரம் ரூ.5-க்கும் விற்பனை செய்கிறோம். ஒரு டன் மண்புழு உரம் இருப்பு உள்ளது.
எந்த சந்தையில் காய்கறி கழிவுகளை சேகரித்தோமோ அதே சந்தையில் அவற்றை உரமாக்கி விற்பனையும் செய்து வருகிறோம். தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மொத்தமாகவும் வழங்க தீர்மானித்துள்ளோம், என்றார். கானாடுகாத்தான் பேரூராட்சியும் இதே முறையில் உர தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதே போல் எல்லா காய்கறி சந்தைகளிலும் கழிவு காய்கறிகளை எருவாக மாற்றினால் குப்பையும் நாற்றமும் குறையுமே?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்