கோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்!

கோயம்பேடு மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் அடுத்த மாதம் (மார்ச்) முதல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவிலேயே 2–வது பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் 1,900 காய்கறி கடைகளும், 700 பழக்கடைகளும், 450 பூக்கடைகளும் உள்ளன.

கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி சராசரியாக 120 முதல் 150 டன் வரை காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் கழிவுகள் சேருகின்றன. இதை அகற்ற கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகம் சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் டெண்டர் கோரப்பட்டது.

கடந்த 2010–ம் ஆண்டு தனியார் நிறுவனத்துக்கு ஒரு டன் குப்பையை மார்க்கெட்டில் இருந்து அகற்ற ரூ.871.50 என கட்டணம் நிர்ணயித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும் வீணாகும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்து தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்சார உற்பத்தி

அதன்படி ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் கோயம்பேடு மார்க்கெட்டில் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் (ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை பணி) அமைக்கப்பட்டது. கடந்த 2011–ம் ஆண்டு மின்சார உற்பத்தி எந்திரம் பழுதாகியது.

இதனையடுத்து 3 வருடங்களாக மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் செக் குடியரசு நாட்டில் இருந்து நவீன எந்திரம் வாங்கப்பட்டு கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி நடைபெற்றது.

இந்த நிலையில் மீண்டும் அந்த எந்திரத்தில் பழுது ஏற்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கிறது. தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த எந்திரத்தை சரிசெய்யும் பணியை தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) முதல் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அதிகாரிகள் கூறியதாவது:–

Courtesy: Dinathanthi
Courtesy: Dinathanthi

காய்கறி கழிவுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 யூனிட் மின்சாரம் தயாரிக்கவேண்டும் என்பது இலக்கு. ஆனால் 1,000 முதல் 1,200 யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த 8 மாதங்களுக்கு மேல் அந்த மின்சாரமும் எந்திரக்கோளாறு காரணமாக உற்பத்தி செய்யப்படவில்லை

எந்திரத்தை சரிபார்க்கும் பணிகளை ஒப்பந்தம் போட்ட அதே நிறுவனம் செய்து வந்தது. தற்போது எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 2016  முதல் வாரத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி தொடங்கும்.

நன்றி: தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *