காவிரி டெல்டாவில் கேழ்வரகு சாகுபடி செய்து சாதனை

காவிரி டெல்டா விவசாயிகள், அதிகளவு தண்ணீர் தேவைப்படக்கூடிய பயிர்களான நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களைத்தான் தொடர்ந்துச் சாகுபடி செய்து வருகிறார்கள். இதுபோன்ற பயிர்களை மட்டுமே நம்பியிருப்பதால், வறட்சிக் காலங்களில் கடும் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள், இப்பகுதி விவசாயிகள்.

சிறுதானியங்கள், பயறு வகைகள் போன்றவற்றை மாற்றுப்பயிராகப் பரிந்துரைத்தாலும்… ‘அவை நம் பகுதியில் விளையாது’ என்றே பெரும்பாலான டெல்டா விவசாயிகள் நினைக்கிறார்கள். இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, 2 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகைச் சாகுபடி செய்திருக்கிறார், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ‘புலியூர்’ நாகராஜன். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணிச் செயலாளராக இருக்கிறார்.

திருச்சி மாவட்டம், வயலூர் அருகேயுள்ள இனாம்புலியூரில் 2 ஏக்கர் பரப்பில் ஒற்றை நாற்று நடவு முறையில் கேழ்வரகு நடவு செய்திருக்கிறார், புலியூர் நாகராஜன். இப்பகுதியில் கேழ்வரகு செழித்து வளர்ந்திருப்பதைத் தொடர்ந்து, சுற்று வட்டார கிராம மக்களுக்கு இவரது வயலில் களப்பயிற்சியை அளித்துள்ளது, தமிழக வேளாண்மைத்துறை.

ஒரு பகல்பொழுதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த புலியூர் நாகராஜனைச் சந்தித்தோம். “எட்டாம் வகுப்பு வரை படிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். எனக்கு மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் களியும் கலந்த இருமண் பூமி. 2 ஏக்கர் நிலத்துல மல்லிகை இருக்கு. 1 ஏக்கர் நிலத்துல வாழை இருக்கு. எப்பவும் 2 ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்வோம். வறட்சியால போன ஆறு வருஷமா குறுவைச் சாகுபடி செய்ய முடியாமப் போயிடுச்சு. சம்பாப் பட்டத்துல மட்டும்தான் சாகுபடி செய்ய முடிஞ்சது. எனக்கு போர்வெல் இருக்கு. இருந்தாலும், குறுவையில நெல் சாகுபடி செய்ற அளவுக்குத் தண்ணி இல்லை. இந்த வருஷமும் குறுவைப்பட்டத்துல நிலத்தைச் சும்மா போடக்கூடாதுனு முடிவு பண்ணிதான்… கேழ்வரகுச் சாகுபடி பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.

ஆனா, அக்ரி ஆபீசர்ல இருந்து பக்கத்துத் தோட்ட விவசாயிகள் வரை எல்லோருமே, ‘இந்தப்பகுதியில சிறுதானியங்களைச் சாகுபடி செய்ய வேணாம்’னுதான் சொன்னாங்க. குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துல வேலை செய்ற பேராசிரியர் தண்டபாணிகிட்ட ஆலோசனை கேட்டேன். அவர் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துல சிறுதானியச் சாகுபடியில ரொம்ப அனுபவம் பெற்றவர். அவர்தான் நிறைய அறிவுரைகளைச் சொல்லி ‘பையூர்- 2’ங்கிற ரகத்தைப் பரிந்துரை பண்ணிணார். அப்புறம், வேளாண்மைத்துறையில 2 கிலோ  பையூர்-2 கேழ்வரகு விதையை வாங்கி, நாற்று உற்பத்தி செஞ்சு ஒற்றை நாற்று முறையில் நடவு செஞ்சேன்.

நல்ல இடைவெளிவிட்டு, நடவு செஞ்சதால ஒவ்வொரு பயிர்லயும் 6-7 தூர்கள் வெடிச்சு வந்தது. இந்தப் பகுதியில வெப்பம் அதிகம்கிறதால வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுக்கணும்னு வேளாண்மைத்துறை அதிகாரிகள் சொன்னாங்க. ஆனா, இங்க தண்ணீர்ப் பற்றாக்குறை. மல்லிகைக்கும் வாழைக்கும் பாய்ச்சினது போக மிச்சத்தைத்தான் கேழ்வரகுக்குப் பாய்ச்ச முடிஞ்சது. பத்து, பதினஞ்சு நாளுக்கொரு தடவைதான் தண்ணி பாய்ச்சினோம். அதனால, பருவத்துல பூக்கலை. இனி தேறாதுனு முடிவு எடுத்த சமயத்துல திரட்சியாகப் பூக்கள் பூக்க ஆரம்பிச்சது” என்ற புலியூர் நாகராஜன், வயலுக்குள் நம்மை அழைத்துச் சென்று காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“பூத்த அடுத்த மாசத்துலயே அதிக எண்ணிக்கையில மணிகள் உருவாயிடுச்சு. சில பயிர்கள்ல மட்டும் குலைநோய்க்கான அறிகுறிகள் தெரிஞ்சது. பஞ்சகவ்யாவுல வேப்பெண்ணெய், சூடோமோனஸ் ரெண்டையும் கலந்து தெளிச்சதுல நோய் சரியாகிடுச்சு. எரு, உயிர் உரங்கள், பஞ்சகவ்யா, நெல் உமி சாம்பல்னுதான் இடுபொருள்களாப் பயன்படுத்தினேன். ரசாயனமே பயன்படுத்த கூடாதுனுதான் நினைச்சிருந்தேன். ஆனா, பருவத்துல பூ பூக்காததால இலைவழி ஊட்டமா ரசாயன திரவ உரத்தைப் பயன்படுத்தினேன். அதைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதுனு தாமதமாத்தான் தெரிஞ்சது. இது வெப்ப மண்டலப் பகுதிங்கிறதாலதான் பூக்க தாமதமாகியிருக்கு.

பூ பூக்க தாமதமானதால கதிர் முத்துறத்துக்கும் தாமதமாச்சு. பையூர்-2 ரகக் கேழ்வரகின் மொத்த வயசு, 100-105 நாள்கள். ஆனால் எனக்கு 115 நாள்களுக்கு மேல்தான் முதிர்ச்சி அடைஞ்சது. கதிர்கள் நல்லா வாளிப்பாகவும் நீளமாகவும் இருந்தது. தானியங்கள் திரட்சியா அதிக எண்ணிக்கையில இருக்கு. இப்போ அறுவடையும் பண்ணி காய வெச்சிருக்கேன். கேழ்வரகு முழுசையும் விதைக்காக வேளாண்மைத்துறை மூலமாவே கொள்முதல் பண்ணிக்கிறோம்னு சொல்லியிருக்காங்க” என்ற புலியூர் நாகராஜன் நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இப்போ அறுவடை பண்ணி களத்துல வெச்சிருக்கிறதால, இன்னும் தானியங்கள பிரிக்கல. கதிர்கள்ல இருக்கிற தானியங்கள பாக்கும்போது எப்படியும் ஏக்கருக்கு ஆயிரம் கிலோவுக்கு மேல் மகசூல் கிடைக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு ஏக்கர்ல 2 ஆயிரம் கிலோ கேழ்வரகு கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிறதா  வேளாண்மைத் துறை அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. வெளியே நுகர்வோருக்கு நேரடியா விற்பனை செஞ்சா கிலோவுக்கு 50 ரூபாய் கிடைக்கும். எப்படிப்பார்த்தாலும் ஏக்கருக்கு 50,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதுல செலவு போக 35,000 ரூபாய் லாபமா நிக்கும்”

ஏக்கருக்கு ஒரு கிலோ விதை!

ஒரு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகுச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் ‘புலியூர்’ நாகராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

ஒரு ஏக்கர் நடவுக்கு 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 5 சென்ட் நிலத்தில் 250 கிலோ எருபோட்டு, 4 சால் உழவு ஓட்டி நாற்றங்கால் அமைத்து மண்ணை ஈரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஒற்றை நாற்று நடவு முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகுச் சாகுபடி செய்ய, ஒரு கிலோ விதை தேவை. ஒரு கிலோ பையூர்-2 ரக விதையுடன் 100 கிராம் சூடோமோனஸ், 50 கிராம் ரைஸோசோபியம், 50 கிராம் அசோஸ்பைரில்லம், 50 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு விதையை நாற்றங்காலில் தூவி விதைக்க வேண்டும். 3-ம் நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சினால், 15-ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.

ஒரு ஏக்கர் நடவு வயலில் 2 சால் உழவு ஓட்டி, இரண்டரை டன் எரு, 1 டன் நெல் உமிச் சாம்பல் ஆகியவற்றை இட்டு மீண்டும் 2 சால் உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு ஒற்றை நாற்று நடவு முறையில் 24 சென்டிமீட்டர் இடைவெளியில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 30-ம் நாள் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்சி, நோய் ஆகியவை தாக்கிய அறிகுறிகள் தென்பட்டால் 200 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் வேப்பெண்ணெய், 1 கிலோ சூடோமோனஸ், 50 கிராம் காதி சோப் ஆகியவற்றைக் கலந்து செடிகள் முழுவதும் படுமாறு தெளிக்க வேண்டும். தட்பவெப்பநிலையைப் பொறுத்து 105-ம் நாளுக்கு மேல் அறுவடைக்கு வரும். கேழ்வரகை அறுவடை செய்த பிறகு, நிலத்தில் உள்ள தாள்களைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கால்நடை இல்லாதவர்கள் அப்படியே மடக்கி உழுதால், சிறந்த பசுந்தாள் உரமாக இருக்கும்.’ என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு ‘புலியூர்’ நாகராஜன், செல்போன்: 944210659

நாற்று நடவில் கூடுதல் மகசூல்!

திருச்சி மாவட்டம், குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் பயிர் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் தண்டபாணியிடம் கேழ்வரகுச் சாகுபடி குறித்துப் பேசினோம்.

“மானாவாரி விவசாயிகள், தண்ணீர் வசதி இல்லாததால் நேரடி விதைப்பு முறையில் கேழ்வரகுச் சாகுபடி செய்கிறார்கள். இறவைப்பாசன விவசாயிகள், நாற்று உற்பத்தி செய்து வரிசை முறையில் நடவு செய்தால்… நேரடி விதைப்பைக் காட்டிலும் அதிகமாக மகசூல் எடுக்கலாம். புலியூர் நாகராஜன் சாகுபடி செய்துள்ள கேழ்வரகில் கதிர்கள் நன்கு வாளிப்பாகவும் நீளமாகவும் இருந்தன. ஏக்கருக்கு ஆயிரம் கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

காவிரி டெல்டா போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளுக்குப் பையூர்-2 ரகக் கேழ்வரகு மிகவும் ஏற்றது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. வடிகால் வசதியுடைய அனைத்து மண்ணிலும் இது விளையும். ஆண்டு முழுவதும் இதைச் சாகுபடி செய்யலாம். ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இதை முழுமையாக இயற்கை முறையிலேயே சாகுபடி செய்யலாம். சிறுதானியங்களைப் பொறுத்தவரை பாரம்பர்ய ரகங்கள்தான் சிறப்பானவை என்ற கருத்து விவசாயிகளிடம் அதிகரித்து வருகிறது. பையூர்-2 ரகக் கேழ்வரகானது, இரண்டு பாரம்பர்ய ரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது என்பதால்… இதையும் பாரம்பர்ய ரகம் என்றே சொல்லலாம்” என்று உறுதியாக சொன்னார் தண்டபாணி.

தொடர்புக்கு, செல்போன் 9600513216

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *