கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்த கேழ்வரகு பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதியில் மானாவாரி நிலத்தில் அதிக அளவில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது பணிப்பொழிவுடன் கூடிய கடும் வெப்ப சீதோஷ்ணநிலை நிலவுகிறது. இதனால், கேழ்வரகு பயிரில் குலைநோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
- காற்றின் மூலம் பரவக்கூடிய இந்த நோய் கேழ்வரகை மட்டுமல்லாது கம்பு, கோதுமை, மக்காச்சோளம் போன்ற பயிர்களையும் தாக்கி மகசூல் குறையும் வாய்ப்புள்ளது.
- நாற்றங்கால் முதல் நடவு செய்த வயலிலுள்ள அனைத்து வளர்ச்சி பருவத்திலும் இந்நோய் தாக்கும். நாற்றங்காலில் தாக்கப்பட்டால் இலைகள் சரிந்து நாற்றுகள் மடிந்து காய்ந்து விடும்.
- இலைகளில் நீண்ட, கண் வடிவ புள்ளிகள் தோன்றி புள்ளிகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாகவும், புள்ளிகளில் நடுப்பகுதி சாம்பல் நிறமாகவும் காணப்படும்.
- இவ்வாறு பயிரின் கணுக்கள் தாக்கப்பட்டு கணுப்பகுதியின் மேலும், கீழுமாக, 10 மீட்டர் நீளத்துக்கு கருப்பு நிறமாக காணப்படும். இதனால், கணுக்கள் வலுவிழந்து எளிதில் முறிந்து விடும்.
- கதிரிலுள்ள எல்லா மணிகளும் பாதிக்கப்பட்டு சில சமயங்களில் மகசூல் இழப்பு 90 சதவீததை தாண்டும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியது:
- கேழ்வரகில், 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 90 சதவீதத்திற்கும் அதிகமாகன ஈரப்பதமும் மற்றும் தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதால், இந்நோயின் தாக்குதல் அதிகரிக்கும்.
- இந்நோயை கட்டுப்படுத்த விதைப்பதற்கு உரிய விதைகளை நோய் தாக்காத வயலிலில் இருந்து எடுக்க வேண்டும்.
- இந்நோய் காரணி தாக்கக்கூடிய புல் பூண்டுகள் இல்லாதவாறு கேழ்வரகு வயலை பராமரிக்க வேண்டும்.
- முக்கியமாக தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.
- விதை நேர்த்தி செய்வதின் மூலமாகவும் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
- ஒரு கிலோ விதைக்கு கார்பன்டாசிம் 2 கிராம் வீதம் விதைப்பதற்கு குறைந்தது, 24 மணி நேரத்துக்கு முன்னரே கலந்து வைத்திருந்து பின், விதைக்க வேண்டும்.
- மேலும்,ஹெக்டேருக்கு எடிபன்பாஸ் 500 மில்லி அல்லது டிரைசைக்லோசோல் 300 கிராம் இவற்றின் ஏதாவது ஒன்றை நோய் அறிகுறி தென்பட்டவுடன் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகம் தென்பட்டால் 15 நாட்கள் இடைவெளியில் மருந்தை தெளிக்க வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Need more