நெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்?

நெல் பயிருக்கு இணையாக கேள்வரகு பயிரிட்டு கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியம் என அழைக்கப்படுவது திருவாடானை தாலுகாவாகும். இங்கு நெல் பயிர் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சில சமயங்களில் சரியான மழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து விடுகின்றது. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஊரணங்குடி, கடலுார், சித்துார்வாடி உள்ளிட்ட சில கிராமங்களில் கேழ்வரகு பயிரிட்டுள்ளனர். வறட்சியை தாங்கக்கூடிய கேழ்வரகு விவசாயம் செய்தால் வறட்சியான காலங்களில் கூட அதிக மகசூல் பெற்று லாபம் சம்பாதிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோ 9, கோ 13, கோ 14, ஜிபியு 28 உள்ளிட்ட ரகங்கள் கேழ்வரகில் உண்டு. இதில் கோ 9 ரகம் 100 முதல் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். கோ 13 ரகம் 95 லிருந்து 100 நாட்களும், கோ 14 ரகம் 105 லிருந்து  110 நாட்களும், ஜிபியு 28 ரகம் 110 லிருந்து 115 நாட்களிலும் அறுவடை செய்யலாம். விதைக்கும்போது 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் ஊறவைத்து விதைத்தால் வறட்சியை தாங்கி வளரும். ஒரே சீராகவும் காணப்படும். 1 எக்டேருக்கு நேரடி விதைப்பாக இருந்தால் 10 முதல் 15 கிலோ தேவைப்படும். நாற்றுநடுவதாக இருந்தால் 5 கிலோ போதுமானது. இவ்வகை பயிரில் 1 எக்டேருக்கு 3 டன் கிடைக்கும். ஜிபியு 28 எக்டேருக்கு 3 அரை டன் கிடைக்கும். இது நெற்பயிரை விட அதிகலாபம் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேழ்வரகில் பூஞ்சை நேர்த்தி மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும். 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாக்சியம் அல்லது 4 கிராம் மேங்கோசெப் கலந்து விதைத்தால் வேர் அழுகாமல் நோயை கட்டுப்படுத்தலாம். பயிர்களிடையே 10 முதல் 15 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். 35 நாட்களில் களை எடுத்து விடவேண்டும். மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு குறைவாகவே இருக்கும். உயிர் உரம் நேர்த்தி குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 1 எக்டேருக்கு அசோஸ் பைரில்லா மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 3 பாக்கெட்டை அரிசி கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்திற்குள் தெளிக்க வேண்டும்.

இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் வேளாண்மை அலுவலர் உலகு சுந்தரம் கூறுகையில், நெல் பயிரிடுவதனால் கிடைக்கும் லாபத்ைதை விட கேழ்வரகு பயிரிட்டால் அதிகலாபம் பெறலாம். 100 கிராம் கேழ்வரகில் 7 கிராம் புரோட்டின் சத்தும், 1.3 கிராம் கொழுப்புசத்தும், 72 கிராம் மாவுசத்தும், 344 மி.கி. கால்சியம் சத்தும், 3.9 மி.கி. இரும்பு சத்தும், 0.42 மி.கி. டயமின் விட்டமின்சத்தும், 0.19 மி.கி. ரிக்கோமிடலின் சத்தும் உள்ளது. அரிசி, கோதுமையை விட கால்சியம் சத்தும், இரும்பு சத்தும் இதில் அதிகம் உள்ளது. சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும், என்றனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *