மானாவாரி கேழ்வரகு சாகுபடி

மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் அதிக அளவில் (சுமார் 80 சதம்) மானாவாரியாக கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

 பருவம்:

 • மானாவாரிப் பயிராக ஆடி, புரட்டாசிப் பட்டங்களிலும், இறவைப் பயிராக சித்திரை, ஆடி, மார்கழி பட்டங்களிலும் பயிரிடலாம்.

ரகங்கள்:

 • ஆடிப் பட்டத்தில் கோ-13, கோ(ரா) 14, பையூர்(ரா) 1, பையூர்(ரா) 2 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.  மார்கழி, சித்திரைப் பட்டங்களில் கோ-13, கோ(ரா) 14, டிஆர்ஒய் 1 ரகங்கள் பயிரிடலாம்.
 • புரட்டாசிப் பட்டத்தில் கோ-13, கோ(ரா) 14, பையூர் 1, பையூர்(ரா) 2 ரகங்கள் பயிரிடலாம்.

 ஊடு பயிர்:

 • கேழ்வரகுடன் துவரை அல்லது மொச்சை, உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை 8:2 விகிதத்தில் ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் அதிக மகசூலுடன், வருமானமும் கிடைக்கிறது.

உழவியல் நிர்வாகம்:

 • சித்திரை-வைகாசி மாதங்களில் இறக்கை கலப்பையைக் கொண்டு 2 முறையும், விதைப்பதற்கு முன்பு ஒரு முறையும் உழவு செய்ய வேண்டும்.
 •  ஹெக்டேருக்கு 25 கிலோ விதையை கை விதைப்பு முறையில் பரவலாகத் தூவலாம். ஆனால், பயிரின் வளர்ச்சி சீராக இருக்காது.
 • விதைப்பானைக் கொண்டு வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. இடைவெளியிலும் செடிக்கு, செடி 10 செ.மீ. இருக்கும் வகையில் விதைக்க வேண்டும்.
 • இந்த முறையில் விதைப்பு செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 15 கிலோ விதை போதுமானது.  

விதை நேர்த்தி:

 • அúஸôஸ்பைரில்லம் 600 கிராம், பாஸ்போ பாக்டீரியா அல்லது அசோஸ்பாஸ் நுண்ணுயிர் 600 கிராம் உரங்களை ஒரு ஹெக்டேருக்கான விதையுடன் கலந்து பின்னர் விதைக்க வேண்டும்.
 • ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை ஒரு சதம் பொட்டாசியம் குளோரைடு ரசாயனத்தில் 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
 • இத்தகைய முறையைப் பின்பற்றினால் பயிர் வறட்சியைத் தாங்கி வளரும்.

 உர நிர்வாகம்:

 • மண் பரிசோதனை செய்து உரமிட வேண்டும்.இல்லையெனில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி, சாம்பல் சத்துக்குளை ஹெக்டேருக்கு 60:30:30 கிலோ விகிதத்தில் இட வேண்டும்.
 • அடி உரமாக மணி, சாம்பல் சத்துகளை முழுமையாக இட வேண்டும்.  தழைச் சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளவற்றை சரி பாதியாக 23, 30, 40-வது நாள்களில் இட வேண்டும்.  

களை நிர்வாகம்:

 • 20 அல்லது 25 நாளில் கையினால் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.
 • இல்லையெனில் 2,4-டி சோடியம் உப்பை ஹெக்டேருக்கு 0.75 கிலோ என்ற விகிதத்தில் தெளிப்பு செய்ய வேண்டும்.  

நோய்கள்:

 • குலைநோய் மிக முக்கியமானதாகும். கதிர் விரல், கதிரின் கழுத்தில் தோன்றும் போது விளைச்சல் அதிகம் பாதிக்கப்படும்.

 கட்டுப்பாடு:

 • எடிபன்பாஸ் (0.1 சதம்) அல்லது சாஃப் (0.2 சதம்) இவற்றில் ஏதேனும் ஒன்றை 50 சதம் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
 • பருவநிலை மாற்றுத்துக்கேற்ப படைப் புழுக்கள், சாறு உறிஞ்சிகள், தண்டு துளைப்பான்கள், கதிர் நாவாய் புழு ஆகியவை பயிரில் தென்படும்.
 • இவற்றைக் கட்டுப்படுத்த இமிடோகுளோபிரிட் (0.1சதம்) என்ற அளவில் தெளிக்க வேண்டும்.  

மகசூல்:

 • ஹெக்டேருக்கு சுமார் 2 ஆயிரம் கிலோ முதல் 2,500 கிலோ வரை தானியம், 5 ஆயிரம் கிலோ முதல் 8 ஆயிரம் கிலோ வரை தட்டையைப் பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *