மார்கழிப் பட்ட கேழ்வரகு பயிர்!

தமிழ்நாடு வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் தானிய வகைப் பயிர்களில் மார்கழிப் பட்டமாக கேழ்வரகு பயிரிட்டு லாபம் பெறலாம்.
ரகம், பருவம்:

தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம்.
மார்கழிப் பட்டம்: டிசம்பர் – ஜனவரி மாதங்களான மார்கழிப் பட்டத்தில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1 ரகங்களைப் பயிரிடலாம்.
சித்திரைப் பட்டம்: ஏப்ரல் – மே மாதங்களில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14 ரகங்களைப் பயிரிடலாம்.
மானாவாரியாக ஆடிப் பட்டத்தில் (ஜூன் – ஜூலை) பையூர் 1, கோ 13, கோ.ஆர்.ஏ14, பையூர் 2 ரகங்களைப் பயிரிடலாம்.
புரட்டாசிப் பட்டம்: செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பையூர் 1, கோ13, கோ.ஆர்.ஏ14 ரகங்களைப் பயிரிடலாம்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

நாற்றங்கால் தயாரித்தல் (நாற்றங்கால் பாசனம்):

ஒரு ஹெக்டேர் வயலில் நடவுக்குத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500 மீ) நாற்றங்கால் பரப்பு தேவை. 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழுஉரம் கலந்து நாற்றங்கால் பாத்திகளில் சீராகப் பரப்ப வேண்டும். இறக்கை கலப்பையால் 2 அல்லது 3 முறையோ, நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழ வேண்டும்.
மேட்டுப்பாத்தி தயாரித்தல்:

3 மீ-க்கு 1.5 மீட்டர் அளவுள்ள 6 பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ. இடைவெளி அவசியம். இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ. ஆழத்துக்கு தோண்டி வாய்க்கால் அமைக்கவும். தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமப்படுத்த வேண்டும்.
காளான் கொல்லி முன்விதை நேர்த்தி:

அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் ஒரு ஹெக்டேருக்கு, 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைத்தல்:

விரலால் படுக்கையின் மீது கோடிட வேண்டும். அதன் மீது விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளைத் தூவ வேண்டும். கையால் மண்ணைத் தூவி விதைகளை மூட வேண்டும். 500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் தூவிவிட்டு விதைகளை மூடி மேற்பரப்பை இளக்கமாக்க வேண்டும். ஆழமாக விதைத்தால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.
நீர் மேலாண்மை:

ஒவ்வொரு நாற்றங்காலுக்கும் ஓர் உள்வாயில் அமைக்க வேண்டும். உள்வாயில் மூலம் தண்ணீர் விட்டு வாய்க்காலைச் சுற்றி தண்ணீர் விடவும். மேட்டுப்பாத்திகள் ஈரமாகும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்திவிட வேண்டும். மண்ணின் வகையைப் பொருத்து நீர்ப்பாசன இடைவெளி மாறுபடும். செம்மண்ணுக்கு 3ஆவது நாள் நீர்ப் பாய்ச்சி கடின மேற்பரப்பு லகுவாக்கப்படுகிறது. இதனால் நாற்றுகள் எளிதாக முளைக்கும். முறையாக, சீராக நீர்ப் பாய்ச்சி நாற்றங்கால் பாத்தியில் பிளவு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாற்றுகளைப் பிடுங்கி நடுதல்: விதைத்த 17 அல்லது 20ஆவது நாளில் நாற்றுகளை, நடவுக்காக பிடுங்கலாம்.
நடவு வயலை தயார் செய்தல்:

மண் நன்றாக கட்டிகளின்றி உடையும் வரை அச்சுக் கலப்பையால் 2 முறையும், மரக் கலப்பையால் 3 முறையும் உழ வேண்டும்.
உரம் அல்லது தொழுவுரம் இடுதல்:

ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மக்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பையால் உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும்.

உரங்களை வயலில் நன்றாக பரப்பவில்லையென்றால் ஊட்டச்சத்துகள் வீணாகும்.
மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் மண் பரிசோதனைப் பரிந்துரைப்படி உரங்கள் அளிப்பதால் பயிர் விளைச்சலில் இலக்கை அடையலாம். முடிந்தவரை மண் பரிசோதனைப்படி தழை, மணி, சாம்பல் சத்துகளை மண்ணுக்கு அளிக்க வேண்டும்.

மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு இட வேண்டும். நடவுக்கு முன் தழைச்சத்தில் பாதியளவும் சாம்பல்சத்தில் பாதியளவும் மணிச்சத்து முழுவதையும் சேர்த்து அடியுரமாக இட வேண்டும். உரக் கலவையை கடைசி உழவுக்கு முன் மண்ணில் இட்டு நாட்டுக் கலப்பையால் உழுது மண்ணுடன் உரக் கலவையை ஒன்றிணைக்க வேண்டும்.
படுக்கை, வாய்க்கால்:

10 ச.மீ-க்கு 20 ச.மீ என்ற அளவில் படுக்கை அமைத்தல் வேண்டும். மேலும், தேவையான அளவுக்கு பாசன வாய்க்கால் அமைக்க வேண்டும்.
நுண்ணூட்டக் கலவை:

தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தல்படி 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையுடன் போதுமான மண் கலந்து அதை ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் அளிக்க வேண்டும். நுண்ணூட்டக்கலவையை பாத்திகளின் மீது சமமாக இட வேண்டும். கலவையை மண்ணில் இட்டு கலக்கக் கூடாது.
நாற்று நடுதல்:

படுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும். ஒரு குத்துக்கு 2 நாற்றுகளாக நட வேண்டும். நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். 18 முதல் 20 நாள் நாற்றுகளை நட வேண்டும்
30-க்கு 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். நேரடி விதைப்பாக இருந்தால் 22.5-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்பு தயாரிக்க வேண்டும். நாற்று நடும் முன் இந்தக் குழம்பில் 15 முதல் 30 நிமிடம் நனைக்க வேண்டும்.
களை நிர்வாகம்:

விதைத்த 3 நாள்களுக்கு பிறகு களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்கவும். விதைத்த 20 நாள்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும். மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருந்தால் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10, 20 நாள்களில் இருமுறை கையால் களையெடுக்கவும். வழிகாட்டுதல்படி நீர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
அறுவடை:

கேழ்வரகுப் பயிர் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை. எனவே, இருமுறையாக அறுவடை செய்ய வேண்டும். 50 சதவீத கதிர்கள் பழுப்பு நிறமடைந்தபிறகு அதை அறுவடை செய்யலாம்.
முதல் அறுவடை:

முற்றிப் பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும். தானியத்தைக் காயவைத்து கதிரடித்து தூற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
2ஆம் அறுவடை:

முதல் அறுவடைக்குப் பிறகு 7ஆவது நாளில் அனைத்து தானியக் கதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒருநாள் வைப்பதால் வெப்பநிலை அதிகரித்து தானியம் தரமாகும். உலர்ந்த தானியத்தைக் கதிரடித்து புடைத்து, சுத்தப்படுத்தி சாக்குப் பைகளில் சேமிக்க வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *