குறைந்த முதலீடு செய்து நல்ல லாபத்தை தரக்கூடிய பழவகைகளில் கொய்யாவும் ஒன்று. மழை குறைவான, உப்பு மிகுந்த மற்றும் வளமில்லாத மண், நீர் தேங்கிய நிலம், வறண்ட நிலம் எதிலும் வளரக்கூடியது. ஆண்டில் இரு முறை காய்க்கும்.
தரை மட்டத்திலிருந்து ஒருமீட்டர் வரை உயரம் வரை கிளைகள் விரியக்கூடாது. பின்னர் 3 அல்லது 4 கிளைகளை சரியான இடைவெளியில் அனுமதிக்கலாம். அடிப்பக்கத்தில் தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். இளந் தண்டுகளிலேயே பூப்பதால் செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச்சில் கவாத்து செய்ய வேண்டும்.
வயதான, உற்பத்தி திறன் இழந்த மரங்களை தரையிலிருந்து 30 செ.மீ உயரத்தில் மட்டமாக வெட்டி விட வேண்டும். அவற்றிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றும். இலைகள் சிறுத்தும் நரம்புகளுக்கிடையே மஞ்சள் நிறமாகவும் கணுக்களிடையே இடைவெளி குறைந்திருந்தால் துத்தநாத சத்து குறைபாடு உள்ளது. 560 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 350 கிராம் சுண்ணாம்பு இரண்டையும் 72 லிட்டர் நீரில் கரைத்து மரங்களின் மேல் 15 முதல் 30 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
இலைகள் வெளிறியும் தீய்ந்தும் இருந்தால் தலா 25 கிராம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீசு சல்பேட் மற்றும் 12.5 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் பெரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து புதிய தளிர்கள் தோன்றும் தெளிக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து மறுமுறை பூக்கும், காய் பிடிக்கும் தருணத்தில் தெளிக்கலாம்.
வளர்ச்சியின்றி பழங்கள் வெடித்து காணப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் போராக்ஸ் மருந்தை கரைத்து தெளிக்க வேண்டும்.
பழங்களில் அதிக அளவு விதைகள் இருந்தால் சந்தையில் குறைந்த விலையே பெறுகின்றன. விதைகளின் எண்ணிக்கையை குறைத்து தரத்தை மேம்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மி.கி., சாலிசிலிக் அமிலம் கலந்து மலராத பூ மொட்டுகளின் மீது தெளிக்கலாம். பூ மொட்டுக்களை இத்திரவத்தில் நனைத்தும் எடுக்கலாம்.
– மாலதி, உதவிபேராசிரியர்
விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர்,
வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்
9787713448
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Shall we use Epsom Salt water in the stems and leaves areas for more yield?