கொய்யாவில் அதிக லாபம் பெற டிப்ஸ்

கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறத் தேவையான ஆலோசனைகளை தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

குறைந்த நீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யாவுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் கொய்யா சாகுபடி விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடியாகும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும். கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்பதால், சாகுபடி பணியை குடும்பத்தினர் மட்டுமே மேற்கொள்ளலாம்.

கொய்யாவில் லக்னோ-49, பனாரஸ் ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை. லக்னோ-49 ரகம் பச்சைக் காயாக விற்கவும், பனாரஸ் பழமாக விற்கவும் தகுந்தவை.

ஒரு மரத்தில் 50 கிலோ:

சராசரியாக ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 50 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ. 15-க்கு குறையாமல் விலைபோகும். சில நேரம், அதிகபட்சமாக ரூ. 60 வரை விற்பனையாகும். சராசரியாக கிலோவுக்கு ரூ. 20 என்ற விகிதத்தில் கிடைக்கும். ஒரு மரத்துக்கு ரூ. 250 வரை செலவாகும்.

வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜூன்- ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றப் பருவம். செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி என்ற அளவில் இடைவெளி விட்டு நடவேண்டும். 10 அடிக்கு 10 அடி இடைவெளி, 12 அடிக்கு 12 அடி என்ற இடைவெளியிலும் நடலாம். ஒரு ஏக்கரில் 300 மரங்கள் நடலாம்.

நிலத்தை நன்கு உழவு செய்து, வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி எட்டு அடி இடைவெளியில் ஓர் கன அடி அளவுக்குக் குழி தோண்ட வேண்டும்.

இந்த இடைவெளியில் குழி தோண்டினால் ஏக்கருக்கு 545 குழி கிடைக்கும். ஒவ்வொரு குழியிலும் தலா 2 கிலோ தொழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு, செடியை நடவேண்டும். இதிலிருந்து 3 மாதம் வரை வேர்ப் பகுதியில் ஈரம் காயாத அளவுக்குப் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

பிறகு 15 நாளுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும்.

மரத்தில் காய்கள் இல்லாதபோது, 20 நாளுக்கு ஒருமுறைகூட பாசனம் செய்யலாம். கால்வாய்ப் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் சிறந்தது. மரத்தில் பிஞ்சு, காய்கள் இருக்கும்போது, 15 நாளுக்கு ஒருமுறை கட்டாயம் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனத்தின்போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து விட வேண்டும்.

செடி ஒன்றரை அடி உயரம் வந்ததும் நுனியை வெட்டிவிட வேண்டும். இதனால், செடி சில கிளைகளாகப் பிரியும். காய்கள் கைக்கெட்டும் உயரத்தில் இருக்கும்.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு 2 முறை கவாத்து செய்யவேண்டும். நடவு செய்து 5 மாதங்கள் கழித்து பூக்கத் தொடங்கும்போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு வரை பூக்களை உதிர்க்கவேண்டும்.

பூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால்தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும். 2 ஆண்டுக்கு மேல் பிஞ்சு பிடிக்க விடலாம்.

நோய் காக்கும் முன்:

கொய்யா மரத்தை மாவுப்பூச்சிதான் அதிகம் தாக்கும். 15 நாளுக்கு ஒருமுறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து மரங்கள் நனையும் அளவுக்குத் தெளித்தால், மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

தொடர்ந்து, பூச்சி தாக்குதல் இருந்தால் 1.5 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் ஜீவாமிர்தம், 500 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து மரம் முழுவதும் நனையும்படித் தெளிக்க வேண்டும்.

கொய்யாவில் நூற்புழுத் தாக்குதலும் அதிகமிருக்கும். ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் செண்டுமல்லி செடிகளை நட்டு வைத்தால் நூற்புழுவை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

இயற்கை முறை சாகுபடியில், பெரும்பாலும் நூற்புழு தாக்குவதில்லை.நூற்புழு தென்பட்டால், ஒவ்வொரு மரத்தின் தூருக்கு அருகிலும் சிறிய குழி எடுத்து கைப்பிடி அளவு நன்கு இடித்த வேப்பங்கொட்டையை இட்டு, மூடிவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நூற்புழு கட்டுப்படும். காய்கள் நல்ல பளபளப்பாக, அடர் பச்சை நிறத்திலிருந்து சற்று வெளுக்கத் தொடங்கியதும் அறுவடை செய்யலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *