கொய்யாவில் பூச்சி, நோய் தடுப்பு

கொய்யாவில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலர்கள் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர்.

ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் தரக்கூடிய கொய்யா பயிர், பழ ஈ, கொய்யா தண்டு துளைப்பான், மாவு பூச்சிகளாலும், நோய்களில் வாடல் நோய், ஆந்தரக்நோஸ், நுனியில் இருந்து காய்தல், பழ அழுகல் போன்ற நோய்களின் தாக்குதலுக்கும் இலக்காக வாய்ப்புள்ளது.

சிறந்த சாகுபடி முறைகளைக் கையாண்டு மேலாண்மை செய்வதால் மேற்கண்ட பூச்சி மறறும் நோய்களை கட்டுப்படுத்தி கொய்யாவில் சிறந்த வருமானம் பெற வழிவகுக்கும்.

பழ ஈ:

 • மழைக் காலங்களில் கொய்யாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 • கொய்யா பழங்கள் நிறம் மாறும் தருணத்தில் பழ ஈக்கள் பழங்களின் மேல்புறத்தில் முட்டையிடும்.
 • முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்ததும் பழங்களை துளைத்து புழுக்கள் உள்ளே சென்று மென்மையான சைதைப்பகுதியை சாப்பிடும்.
 • பழ ஈ தாக்குதலுக்கு வாய்ப்புள்ள இடங்களில் மழைக்காலத்தில் கொய்யா மகசூலை தவிர்க்கவும், பழுத்த அனைத்து பழங்களையும் அறுவடை செய்யவும்.
 • கீழே விழுந்த பழங்களை அப்புறப்படுத்தி 2 அடி ஆழத்தில் புதைக்கவும்.
 • அறுவைக்குப் பின்னர் கலப்பை மூலம் உழவு செய்வதால் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் 4-6 செ.மீ. ஆழத்தில் புதைக்கப்படுகிறது.
 • ஜூலை மாதம் முதல் பாதிக்கப்பட்ட தோப்புகளுக்கு எண்டோசல்பான் 35 இசி அல்லது மாலத்தியான் 50 இசி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் 500 லிட்டர் நீரில் கலந்து வார இடைவெளியில் அறுவை முடியும் வரை தெளிப்பு செய்யவும்.
 • மேலும் மருந்து தெளித்த 3 நாள்களுக்குப் பிறகு பழ அறுவடை மேற்கொள்ள வேண்டும்.

கொய்யா தண்டு துளைப்பான்:

 • நாற்றங்காலில் இளஞ்செடிகளையும், முதிர்ந்த மரங்களையும் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது.
 • பாதிக்கப்பட்ட துளைகளுக்கு கீழாக அதிக எண்ணிக்கையில் இளந்தளிர்களை உற்பத்தி செய்வதால் கொய்யா மரங்கள் அடர்வாக தெரியும். பாதிக்கப்பட்ட குருத்து காய்ந்து வாடிவிடும்.
 • பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மோனோசில் 36 இசி 280 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 20 இசி 400 மி.லி. மருந்து ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பு செய்வதால் தண்டுதுளைப்பான் தாக்குதல் குறைய வாய்ப்புள்ளது.

கொய்யா மாவு பூச்சி:

 • இளங்குருத்துகள், பழங்கள் மற்றும் இலை நரம்புகளை ஒட்டிய பகுதிகளில் இந்த பூச்சிகள் ஒட்டிக்கொண்டு சாற்றினை உறிஞ்சி கொய்யா இலைகளில் ஒழுங்கற்ற வளர்ச்சியையும், இலைகளின் இயல்பான வளர்ச்சியையும் பாதிக்கிறது.
 • தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் கொய்யா கிளைகள் காய்ந்துபோக வாய்ப்புள்ளது.
 • தாக்குதலின் ஆரம்ப நிலையில் பாதித்த குச்சிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
 • பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மோனோகுரோட்டோபாஸ் 36 இசி 2 மி.லி, ஒரு லிட்டர் நீர் அல்லது மருந்து ட்ரையசோபாஸ் 2 மில்லி, ஒரு லிட்டர் நீர் மற்றும் வேம்பு எண்ணை 5 மி.லி., ஒரு லிட்டர் நீர் மருந்து கலவையோ அல்லது பாஸலோன் 0.5 மில்லி மற்றும் வேம்பு எண்ணை 5 மி.லி ஆகிய மருந்து கலவைகளில் ஏதேனும் ஒன்றினை கலந்து மரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மரம் முழுவதும் நனையுமாறு தெளித்து இந்த பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

வாடல் நோய்:

 • இந்த நோய் பியுசேரியம், செபாலோஸ்போரியம், ரைசோக்டோனியா போன்ற பூஞ்சாணங்களால் ஏற்படுகிறது.
 • கொய்யாவின் வேர்கள் பாதித்த பல மாதங்களுக்குப் பின்னரே கொய்யா கிளைப்பகுதிகள் காய்ந்து வாடி நோயின் தாக்குதலை வெளிப்படுத்தும்.
 • தாக்குண்ட மரங்களில் இலைகள் உதிர்ந்தும், இலைகள் மஞ்சள் நிறத்திலும் தென்படும்.
 • வேரில் பட்டைக்கும் நடுமரத்திற்கும் இடைப்பட்ட கேம்பியம் பகுதியில் நிறம் மாறி இருப்பதிலிருந்து இந்த நோயின்தாக்குதலை அறியலாம்.
 • கொய்யா நடவிற்கு தண்ணீர் தேங்கும் நிலங்களை தவிர்த்து நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து நடவு செய்யவும், முழுவதும் பாதிக்கப்பட்ட மரங்களை வேருடன் பிடுங்கி அப்புறப்புறப்படுத்தி தீயிட்டு எரித்து விடவும்.
 • மழை நீரோ, பாசன நீரோ மரங்களுக்கு அருகில் தேங்குவதை தவிர்க்கவும்.

ஆந்தரக்நோஸ், நுனியிலிருந்து காய்தல், பழ அழுகல்:

 • இந்த நோய் கிளயோஸ்போரியம் சிடி, பைட்டோப்தோரா பாரசிடிகா, ரைசோபஸ் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் போன்ற பூஞ்சைகளால் தோன்றுகிறது.
 • மழைக்காலங்களில் சிறிய மரங்கள் மற்றும் குச்சிகளை தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது.
 • பாதித்த கிளைகள் நுனியிலிருந்து வாடி வதங்கி பின்னர் இறந்துவிடும்.
 • முற்றிய பழங்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகும்.
 • வட்ட வடிவ சற்றே குழுவிழுந்த மரநிற தோற்றத்திலான புள்ளிகள் ஆங்காங்கே பழங்கள் மீது தென்படும்.
 • புள்ளிகளின் மத்தியில் வெளிர்சிகப்பு நிறத்தில் இருக்கும் பாதித்த பழங்கள் இரண்டு அல்லது 3 நாள்களில் முழுவதுமாக அழுகிவிடும்.
 • பாதித்த குச்சிகளையும், பழங்களையும் அப்புறப்படுத்தவும்
 • பாதித்த குச்சிகள் மற்றும் மரக்கிளைகளை கவாத்து செய்த பின்னர் கேப்டான் 300 கிராம் மருந்தினை 100 லிட்டர் நீரில் கலந்து 10 முதல் 15 நாள்கள் இடைவெளியில் அறுவடை முடியும் வரை தெளிப்பு செய்யவும்.
 • மரங்களில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும், பாதித்த மரங்களை மண்ணில் புதைத்து நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.

விவசாயிகள் நடவு செய்த காலத்திலிருந்து கவனமாக செடிகளை கண்காணித்து வரவேண்டும்.அதில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அதுகுறித்து அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலர்களை அணுகி விவரம் பெற்று, உரிய தடுப்பு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கொய்யாவில் பூச்சி, நோய் தடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *