நெல் கரும்பு மாற்றாக கொய்யா பயிரிட்டு லாபம் பார்க்கும் விவசாயி

கும்பகோணம் பகுதியில் நெல்லும் வாழையும் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அவ்வப்போது சில முன்னோடி விவசாயிகள் விவசாயத்தில் புதுமையைப் புகுத்தி, இதுவும் லாபகரமான தொழில்தான் என நிரூபித்துவருகின்றனர்.

காவிரி ஆற்றின் கரையில் உள்ள வளையப்பேட்டை மாங்குடியைச் சேர்ந்த விவசாயி சேகர். இவர் அப்பகுதியில் குத்தகை முறையில் நீண்ட காலத்துக்கு நிலம் எடுத்துச் சாகுபடி செய்துவருகிறார். ஆரம்பத்தில் கரும்பு, வாழையைத் தொடர்ச்சியாகப் பயிரிட்டுவந்தார். ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தில் வீசும் சூறைக்காற்றால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழும்போது சேகரின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது.

இதனால் விவசாயத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டு, அதைக் கைவிட்டுச் சென்றுவிடலாமா என இருந்தபோதுதான் கொய்யா சாகுபடி குறித்துத் தோட்டக்கலைத் துறை மூலம் அறிந்தார்.

கிளைகள் அதிகம் வெடிக்க

நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்று பனாரஸ் வகை கொய்யாச் செடியை வாங்கி வந்து இரண்டு ஏக்கரில் நட்டார். நடவு செய்த 15 மாதங்களில் கொய்யா காய்ப்புக்கு வந்துவிட்டது. இதற்குப் பராமரிப்புச் செலவும் தண்ணீர்த் தேவையும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் வருடத்துக்கு ஒரு ஏக்கருக்கு 10 டன் கொய்யா காய்க்கிறது. இந்தக் கொய்யா சாகுபடியில் அதிகக் கிளைகள் வெடிக்க மரத்தின் கிளையை வளைத்து அதில் மண்ணைக் கட்டிவிட்டால் அதிகக் கிளைகள் வெடிப்பதோடு இல்லாமல், அதிகமாகக் காய்களும் காய்த்துக் குலுங்குகின்றன.

லாபகரமான தொழில்

இது குறித்து விவசாயி சேகர் பகிர்ந்துகொண்டது:

ஆரம்பத்தில் வாழையும் நெல்லும் பயிரிட்டோம். மழைக்காலத்தில் காற்று அதிகமாக வீசுவதால் வாழையில் பெரும் சேதம் ஏற்பட்டுவந்தது. அப்போதுதான் கொய்யா சாகுபடியைப் பற்றி கேள்விப்பட்டு, நாமக்கல்லுக்குச் சென்று கொய்யா செடியை வாங்கி வந்து நட்டேன்.

இதற்கு முறையாக உரமிட்டுத் தண்ணீர் பாய்ச்சியதில் 15 மாதங்களில் காய்ப்புக்கு வந்தது. தற்போது மூன்று ஆண்டுகளாகக் கொய்யா மரங்கள் நன்றாக வளர்ந்துவிட்டன. இதைக் கவாத்து முறையில் வெட்டிவிட்டுக் கிளைகளே மேலே வளராமல் அதில் பாலிதீன் பைகளில் மண்ணை நிரப்பி கிளைகளில் கட்டிவிட்டால் ஆங்காங்கே வளைந்துவிடும். இதனால் கிளைகள் அதிகம் வெடிக்கும். கிளைகள் வெடிக்கும்போது, அதில் பூ பூத்துக் காய்கள் கொத்துக்கொத்தாய்க் காய்க்கும்.

தற்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் காய்கள் பறிக்கிறேன். இது லாபகரமான தொழிலாக உள்ளது. பராமரிப்புச் செலவும் குறைவாக உள்ளது. கொய்யா மரத்துக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது. கொய்யா சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு நல்ல சத்தான பழம் என்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது என்கிறார்.

விவசாயி சேகரைத் தொடர்புகொள்ள: 09994898874 .

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *