திருப்பூர் மாவட்டம் பொங்கலூரிலிருந்து காட்டூர் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் திரும்பி பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தை கடந்தால் பெரிய கொய்யா தோப்பை காணலாம். இங்கே கொய்யாத் தோப்பு இருப்பது நிச்சயமாக அதிசயமில்லை. இந்தத் தோப்பில் உள்ள கொய்யா மரங்கள் ஒவ்வொன்றிலும் பெரிய, பெரிய பைகள் கட்டித் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
அந்த பைகளில் என்ன நிரப்பப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை, அதன் எடை தாங்காமல் கொய்யா மரக் கிளைகள் தரையை உரசியபடி நிற்கின்றன. மரத்தில் உள்ள இலைகள் கிளைகளாக மேலே செல்ல, அதன் தண்டும் கொஞ்சம் பெரிதாக இருந்தால், அதிலும் பைகள் தொங்கவிடப்பட்டு தரைவரை தாழ்ந்தே இருக்கிறது.
அப்படி என்னதான் பைகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது? எதற்காக இப்படிக் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள் என்று கேட்டால், சிரிக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். பையில் இருப்பது உரமும் இல்லை மருந்தும் இல்லை. இவை வெறும் மண் நிரப்பப்பட்ட பைகள்தான். இப்படி மண்பைகளை கட்டித் தொங்கவிட்டிருப்பதால் ஒன்றுக்கு மூன்று மடங்கு கொய்யா மகசூல் கிடைக்கிறது என அசரவும் வைக்கிறார்கள்.
கவாத்து ரகசியம்
தோட்ட உரிமையாளர் நாகராஜனிடம் பேசினோம். ‘ஆறு ஏக்கரில் இந்த கொய்யா விவசாயம் நடக்கிறது. நான் பழனி அருகேயுள்ள ஆயக்குடிக்குப் போயிருந்தபோது, அங்கே ஒரு சில விவசாயிகள் இப்படி மண் மூட்டைகளைக் கட்டிவிட்டு கொய்யா விவசாயம் செய்வதைப் பார்த்தேன். ஆயக்குடி கொய்யா தமிழகம் முழுக்க பிரபலமானது.
பொதுவாகக் கொய்யா மரம் நீண்டு வளரும். அப்படியே விட்டால் மரம் உயரமாக போய்விடும். காய்ப்பு பெரிசாகக் கிடைக்காது. நுனியை வெட்டிவிட்டால் மட்டும் பக்கவாட்டில் உள்ள இலைகள், கிளைகளாக வரும். இதற்காக செடியாக இருப்பதிலிருந்து கொஞ்சம் வளர்ந்த பின்பு, இப்படி மண்மூட்டைகளை கிளைகளில் கட்டி விட்டால், அது நிலத்தை தொட்டமாதிரியே செல்லும்.
அதில் உள்ள இலைகள் ஒவ்வொன்றிலும் கிளைகள் மேல் நோக்கி வளரும். அப்படி நிறைய கிளைகள் ஒரு செடியில் முளைத்து விடும். அந்த கிளைகள் ஏழெட்டு இலைகள் விட்ட பின்பு பூ விடும். காய் காய்க்கும். ஒரு வேளை ஏழெட்டு இலைகள் விட்ட பின்பும் பூ பூக்கவில்லை என்றால், அதன் நுனியை வெட்டி விட்டால் பிறகு கிளைக் கொம்பின் பக்கவாட்டில் வரும் இலைகளில் பூக்க ஆரம்பிக்கும். காய்ப்பும் கொடுக்கும்.
இப்படி பார்த்தால் ஒரு செடி மரமாகி நீளமாகத் தரைவரை தாழ்ந்து வளர்ந்துகொண்டே செல்ல, அதன் மேல் துளிர்விடும் இலைகள் எல்லாம் கிளைகளாகப் படர்ந்து நிறைய காய் பிடிக்கும். வருடத்துக்கு 6 முறை காய்கள் அறுவடை செய்யலாம். முன்பு கிடைத்த மகசூலைக் காட்டிலும் மூன்று மடங்கு காய்ப்பு கிடைக்கும். இப்பவும் இதை சிறப்பாகக் கவாத்து செய்ய ஆயக்குடியிலிருந்து விவசாயி ஒருவர் வந்து செல்கிறார்!’ எனத் தெரிவித்தவர், ஆயக்குடி விவசாயியின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
நாகராஜன்
ஆரம்பித்தது எப்படி?
ஆயக்குடி விவசாயியிடம் பேசியபோது, ‘எங்க தோட்டத்தில் கொய்யாமரம் 10 அடி, 12 அடி உயரம்னு போயிட்டே இருந்தது. அதற்கு மருந்தடிக்கவோ காய் பறிக்கவோ முடியலை. அதனால 6 வருஷத்துக்கு முன்னால கொய்யா செடியாக இருக்கும்போதே, அதுக்கு இப்படி மண்மூட்டை எடையைக் கட்டிவிட ஆரம்பிச்சோம். அதனால தரை தாழ மரம் வளர்ந்ததோடு, மருந்தடிக்கவும் சுலபமா இருந்தது. காயும் நிறைய கிடைச்சது.
இதைப் பார்த்து பக்கத்து தோட்டத்துக்காரங்களும் அதையே செய்ய ஆரம்பிச்சாங்க. இப்ப பார்த்தீங்கன்னா ஆயக்குடி சுற்றுவட்டாரத்துல இப்படித்தான் எல்லோரும் கொய்யா மரத்துல மண்மூட்டைய கட்டி விடறாங்க. இதுதான் ஆயக்குடி கொய்யா செழிப்பதன் ரகசியம்!’ என்றவர் தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். எப்படியிருந்தாலும், நமக்குத் தேவை கொய்யா எப்படி அதிகமாகக் காய்க்கும் என்பது தானே.
விவசாயி நாகராஜன் தொடர்புக்கு: 08754018811
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்