ஜப்பான் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடி நல்ல லாபம்!

நவீன தொழில்நுட்பத்தில் சம்பங்கி மலர் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக அரியலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வறட்சியான பகுதி, மழை பெய்தால் சோளம், நிலக்கடலை எனப் பயிரிட்டு வந்த அரியலூர் மாவட்ட விவசாயிகள் தற்போது சம்பங்கி சாகுபடிக்கு மாறியுள்ளனர். காரணம் இம்மாவட்டத்தில் 900 அடி ஆழத்துக்கு கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைப்பதில்லை.

இங்குள்ள சிமென்ட் ஆலைகளால் விவசாயம் அழிந்து, தற்போது ஆடு மாடு மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. இந்நிலையில் சந்தோஷ மணம் வீசும் சம்பங்கி, “பளபள’ வண்ணம் காட்டும் பட்டுப்பூ (கோழிக்கொண்டை) என மலர் சாகுபடியில் சிறப்பான வருமானத்தை ஈட்டு வருகின்றனர் அரியலூர் மாவட்ட பெருவாரியான விவசாயிகள்.

ஒரு காலத்தில் மல்லி, மிளகாய் சாகுபடியில் பெயர் போன அரியலூர் மாவட்டம், தற்போது சம்பங்கி மலர் சாகுபடியில் பெயர் பெற்று வருகிறது. சம்பங்கி மலர் அனைத்து விதமான விழாக்கள் மற்றும் விசேஷங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் இந்த  மலருக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதிக பணம் மற்றும் தினசரி வருமானம் ஈட்டித் தரும் மலர் பயிர்களில் முக்கிய பங்கு வகிப்பது சம்பங்கி மலர். விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தும் பயிர்களில் இதுவும் ஒன்று.

மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவர் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. இதில் பிரஜ்வால் ரகம் அதிக மகசூல் தரவல்லது. பூங்கொத்தில் மொட்டுகள் அதிகமாகவும், பூக்கள் நீளமாகவும் காணப்படும். பக்க கிளைப்புகள் அதிகமாக வருவதால் இதனை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து, அதிக மகசூலைப் பெறுகின்றனர்.

அதுவும் குறிப்பாக ஜப்பான் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடி செய்வதால், களைகள் அதிகமாக வருவதில்லை. நோய்கள் தாக்குவதில்லை. அதிக மகசூல் கிடைப்பதாக அரியலூர் அஸ்தினாபுரம் விவசாயி பழனிசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயி பழனிசாமி மேலும் கூறியது:

  • நவீன தொழில்நுட்பத்தில் விவசாயம் மேற்கொண்டதால்  அதிக மகசூல் கிடைக்கிறது. நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • நானும், டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துள்ள எனது மகன் சிரஞ்சீவியும் சேர்ந்து இந்த மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு 6 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டரை ஏக்கரில் சம்பங்கி சாகுபடி செய்துள்ளோம்.
  • மற்ற இரண்டரை ஏக்கரில் கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம்.  கரும்பு, மரவள்ளி பயிர்களில் அதிக லாபம் கிடைப்பதில்லை. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்துள்ள சம்பங்கி மலர்களால் அதிக லாபம் கிடைக்கிறது. முதன்முதலில் திண்டுக்கல்
  • மாவட்டத்தில் இருந்து விதை (கிழங்கு) வாங்கி வந்து பயிர் செய்தோம். தற்போது,  ஜயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தில் இருந்து விதை கிழங்கு வாங்கி பயிரிட்டுள்ளோம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 40,000-50,000 (350கிலோ) விதைக் கிழங்கு தேவைப்படும்.

ஜப்பான் தொழில்நுட்பம்:

  • சம்பங்கி விதையை (கிழங்கை) நிலத்தில் பதித்து, அதன் மேலே நிலப் போர்வை போர்த்தி விடுவதால், களைகள் மற்றும் பூச்சிகள், பாம்புகள் வருவதில்லை.
  • மேலும் சொட்டு நீர்ப் பாசன முறையைப் பின்பற்றி வருவதால், எப்போதும் கிழங்கு ஈரத்திலேயே இருக்கிறது. இதனால் செடி எப்போதும் பசுமையாகவே உள்ளது. எந்தவித நோய்களும் தாக்குவதில்லை.
  • மூன்றாவது மாதத்தில் இருந்தே அறுவடை: நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்தே தினமும் மலர்களைப் பறிக்கத் தொடங்கலாம்.
  • தினமும் அதிகாலை ஐந்து மணியிலிருந்து மலர்களைப் பறிக்கத் தொடங்கி எட்டு மணிக்குள் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  அதிகாலையில் சந்தைக்கு வந்தடையும் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் எனக் கூறினார்.
  • மூன்றாவது மாதத்  தொடக்கத்தில் ஒரு கிலோ, இரண்டு கிலோ எனப் படிப்படியாக உயர்ந்து 160 கிலோ (எழுபது  சென்ட்டில்) வரை மகசூல் கிடைக்கும்.
  • சந்தை நிலவரம் தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அப்படி இருக்கையில், சராசரியாக ஒரு கிலோ பூக்களுக்கு ரூ.100 வரை கிடைக்கும்.
  • ஒரு ஏக்கருக்கு இதுவரை ரூ.2 லட்சம் செலவாகியுள்ளது. அது ஒர் ஆண்டுக்குள்ளே செய்த செலவை எடுத்து விடலாம். அதன்பிறகு நாம் செலவு செய்ததைவிட இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது. இந்த பயிரை  நன்றாகப் பராமரித்தால் ஐந்தாண்டு வரை லாபம் ஈட்டலாம்.
  • முறையாக சாகுபடி செய்ததால் பல விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து தன்னிடம் விளைவிக்கும் முறைகளைக் கேட்டுச்செல்கின்றனர்.
  • அரியலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை மூலம் சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 80 சதவீத  மானியத்துடனும் தேவையான உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளையும் மானிய விலையில் வழங்கி வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
  • மேலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டதால் பஞ்சகாவ்யம், அக்னி அஸ்த்திரம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் என அனைத்தும் தானே தயாரித்து பயிருக்கு தெளித்து வருகிறோம் என்றார் அவர். அரியலூர்,ஜயங்கொண்டம்,செந்துறை, திருமானூர், பொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் சம்பங்கி சாகுபடி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *