ஊரெங்கும் தினை சாகுபடி: வியக்க வைக்கும் கிராமம் !

சிறுதானியங்களின் மகத்துவம் மீண்டும் உணரப்படும் காலம் இது. ஆரோக்கியமற்ற உணவுப் போக்கிலிருந்து மக்கள் மாறத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், சிறுதானியங்களைப் பயிரிடுவதில் முன்மாதிரியாகத் திகழ்கிறது, புதுச்சேரியிலுள்ள விநாயகம்பட்டு கிராமம். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட விநாயகம்பட்டு கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து தினை சாகுபடியில் சாதனை படைத்துவருகின்றனர்.

10 மடங்கு அதிகரிப்பு

கடந்த ஆண்டில், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 14 விவசாயிகள் 15 ஏக்கர் நிலத்தில் தினை சாகுபடி செய்தனர். அது, தற்போது 10 மடங்காக அதிகரித்துள்ளது. இப்போது புதுச்சேரி மாநிலத்தில் தினை விதைப்பில் முதன்மை கிராமமாகத் திகழ்ந்து வருகிறது விநாயகம்பட்டு. மொத்தமுள்ள 250 ஏக்கர் நிலத்தில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தினை பயிரிட்டு லாபம் ஈட்டிவருகின்றனர்.

குறைந்த செலவில் அதிக லாபம்

தினை சாகுபடி முறை குறித்து விவசாயி ஏ. சுப்ரமணியன் பகிர்ந்துகொண்டார்:

‘‘நெல், கரும்பு போன்ற பயிர்களைத்தான் முன்பு சாகுபடி செய்துவந்தோம். அதிகச் செலவு செய்தாலும், குறைந்த லாபம்தான் கிடைத்தது. இந்த நிலையில்தான், மாற்றுப் பயிர்களான சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் 80 சென்ட் நிலத்தில் (ஒரு ஏக்கருக்கும் குறைவு) தினை பயிரிட்டேன். தினை சாகுபடி பிரச்சினைகள் குறைவானது. இந்தப் பயிரைப் பொதுவாகப் பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. அதனால், பயிர் பாதுகாப்புக்கு மெனக்கெட வேண்டியதில்லை. மூன்று மாதப் பயிரான தினையில் விதை, உழவு, இயற்கை உரம், ஆள்கூலி, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை என அனைத்து வேலைகளுக்கும் சேர்த்து ரூ. 5 ஆயிரம் மட்டுமே செலவானது.

இதன்மூலம் 80 சென்ட்டுக்கு ஆயிரம் கிலோ தினை அறுவடை செய்தேன். ஒரு மூட்டை தினை ரூ. 2,700 முதல் ரூ. 3,000 வரை விற்பனையானது. 10 மூட்டைகளை ரூ. 28,000 வரை விற்றேன். இதனால், ரூ. 23 ஆயிரம் லாபம் கிடைத்தது. நெல், கரும்புப் பயிர்களுடன் ஒப்பிடும்போது, தினை சாகுபடிக்குச் செலவு குறைவு, லாபம் அதிகம். இப்போது, எனக்குச் சொந்தமான 3.5 ஏக்கர் முழுவதும் தினை பயிரிட்டிருக்கிறேன்.

தினை விதையையும் உற்பத்தி செய்து, கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு வழங்கிவருகிறேன். ஒரு கிலோ தினை விதை ரூ. 50-க்கு விற்பனை செய்கிறேன். இது தவிர சென்னை, கடலூர் பகுதிகளில் இருந்தும் தினை விதை வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஆண்டுக்கு இரண்டு போகம் தினையும், ஒரு போகம் காராமணியும் சாகுபடி செய்கிறேன்.” என்கிறார் உற்சாகம் பொங்க.

மதிப்புகூட்ட முயற்சி

விநாயகம்பட்டு கிராமத்தில் தினை விதைப்புக்கு ஊக்கமளித்துவரும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி சாந்தமூர்த்தி பகிர்ந்துகொண்டது:

‘‘எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிரி கிராமத் திட்டம் கடந்த 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்கீழ் புதுச்சேரி விநாயகம்பட்டு கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றத் திட்டமிட்டோம். `உயிரி கிராம மேம்பாட்டு சபையை’ 2013 அக்டோபர் மாதம் உருவாக்கினோம். அதன்மூலம் விவசாயிகளை ஒன்றிணைத்துத் தினை, காராமணி சாகுபடிக்கு ஊக்கமளித்தோம்.

திருவண்ணாமலை, வேலூர் போன்ற இடங்களுக்கு இந்த ஊர் விவசாயிகளை அழைத்துச் சென்று தினை விதைப்பு பயிற்சி அளித்தோம். கடந்த 2014-ம் ஆண்டில் 14 விவசாயிகள் 15 ஏக்கரில் தினை பயிரிட்டார்கள். அவர்களுக்குத் தேவையான தினை விதையை இலவசமாக வழங்கினோம். இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். தினை பயிரிட்டதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

இந்த ஆண்டில் கிராமத்தில் மொத்தமுள்ள 250 ஏக்கர் நிலத்தில் 150 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில், 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினை பயிரிட்டுள்ளனர். தினையை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கும் முயற்சி எடுத்துவருகிறோம். தினை மாவில் முறுக்கு, அதிரசம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தினையில் 12-க்கும் அதிகமான சத்துகள் உள்ளன. தினை சாதம் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.

விவசாயி சுப்ரமணியன் தொடர்புக்கு: 07845001191

சாந்தமூர்த்தி – சுப்ரமணியன்

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *