சிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்!

உமி நீக்கும் இயந்திரத்துடன் சர்மிளா

ந மது முதன்மை உணவான அரிசியைக் குறைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவான சிறுதானியங்களைச் சாப்பிடும் பழக்கம் இன்று அதிகரித்துவருகிறது. என்றாலும், சிறு தானியங்களின் உமியை நீக்குவதே பெரும் வேலை என்பதால், பலரும் அவற்றை வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். இந்தத் தயக்கத்தை உடைத்தெறியச் சொல்கிறார் கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த முனைவர் சர்மிளா கீர்த்திவாசன்.

தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மின்னணுப் பொறியியல் துறைப் பேராசிரியராக இவர் பணிபுரிந்துவருகிறார். சிறு தானியங்களிலிருந்து உமியை நீக்கும் கருவியை இவர் கண்டறிந்துள்ளார். மிகக் குறைந்த செலவில், வீட்டிலேயே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவியால், செலவில்லாமல் உமி நீக்கப்பட்ட சிறு தானியங்கள் கிடைக்கும் என்றவரிடம், இந்தப் புதிய இயந்திரம் இயங்கும் முறை பற்றிக் கேட்டோம்…

“வரகு, சாமை, குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறு தானியங்கள், உடலுக்கு ஆரோக்கியமானவை. நமது பாரம்பரிய உணவான இவற்றை வாங்கிச் சாப்பிடப் பலரும் ஆர்வம் காட்டினாலும், விலை சற்று கூடுதலாக இருப்பதால் பலரும் வாங்க யோசிக்கின்றனர்.

வெளிச் சந்தையில் 100 ரூபாய் முதல் 120 ரூபாய்வரை சிறுதானியங்கள் விற்பனையாகின்றன. ஆனால், உமி நீக்கப்படாத தானியம் கிலோ சுமார் 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது. உமியை நீக்கி, தானியத்தை மட்டுமே தனியே பிரித்து, சில்லறைக் கடைகளில் விற்கும்போது, அவற்றின் விலை 100 ரூபாய்க்கு மேல் போய்விடுகிறது.

மிக்ஸியை மாற்றியமைத்து…

நானும் இந்த விலைக்குக் கடையில் வாங்கியபோது, உறுத்தலாகவே இருந்தது. இதனால் வீட்டிலேயே உமியை நீக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டது. முன்பெல்லாம் வீட்டிலேயே உமியை நீக்குவார்கள். திருகை முறையிலான இயந்திரத்தை இதற்குப் பயன்படுத்தி வந்தார்கள்.

அதே அடிப்படையில் நாம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண மிக்ஸி ஜாரை சிறிது மாற்றி, தானியத்திலிருந்து உமியைப் பிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். ஜாரை மாற்றியமைக்க 500 ரூபாய்தான் செலவானது.

மேலும், உமி நீக்கிய தானியமாக வைத்திருந்தால் மூன்று மாதங்களில் கெட்டுப் போய்விடும். அதேநேரம், உமி நீக்காமல் இருந்தால் ஆண்டுக்கணக்கில் அப்படியே இருக்கும். எனவே, ஒட்டுமொத்தமாக தானியத்தை வாங்கி வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப வீட்டிலேயே உமியை நீக்கிக்கொள்ளலாம். சுமார் ஐந்து நிமிடங்களில் தானியத்தில் உள்ள உமியை நீக்கும் அளவுக்கு, இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன்.

ரூ. 2000 செலவு

தானியத்திலிருந்து உமியை அகற்ற மாற்றியமைக்கப்பட்ட மிக்ஸி ஜார் பயன்படும். அதேநேரம், இரண்டையும் தனித்தனியே பிரித்தெடுக்கவும், மிக எளிமையான ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன். சோதனை அடிப்படையில் இவற்றை நான் தயாரித்திருந்தாலும், மிக்ஸி தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த விலையில் இந்த இயந்திரத்தைத் தயாரித்து, எளிதில் புழக்கத்துக்குக் கொண்டுவர முடியும்.

இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் செலவானது. இதைப் பயன்படுத்தும்போது மின்சாரமும் அதிகம் தேவைப்படாது. இந்த இயந்திரத்துக்குக் காப்புரிமை கோரி சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளேன்” என்றார்

நன்றி: ஹிந்து .


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *