சிறுதானியப் பயிர் சாகுபடி டிப்ஸ்

வறண்ட, மானாவாரிப் பகுதி சாகுபடியில் சிறுதானியப் பயிர்கள் முன்னிலை வகிக்கின்றன.சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, பனி வரகு, குதிரைவாலி ஆகியவை சிறுதானியங்கள் எனப்படும்.

சிறுதானியப் பயிர்கள் சாகுபடி குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ.முருகன் கூறியது:

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

 • இந்தியாவில் கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற ஆறு சிறுதானியப் பயிர்கள் 2.90 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
 • தமிழ்நாட்டில் சிறு தானியங்களின் சாகுபடி பரப்பளவு 19.82 லட்சம் ஹெக்டேரில் இருந்து 7.77 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
 • அதே நேரத்தில் இதனுடைய உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 522 கிலோ என்ற நிலையிலிருந்து 1,176 கிலோவாக அதாவது இரு மடங்காக உயர்ந்துள்ளது.
 • இந்த உற்பத்தியின் உயர்வுக்கு உயர் விளைச்சல் ரகங்களையும், வீரிய ஒட்டு ரகங்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருவதே காரணமாகும்.

தினை, சாமை, வரகு, பனிவரகு சாகுபடி தொழில்நுட்பம்:

 • தினை, வரகு, சாமை மலைவாழ் மக்களால் பெரிதும் விரும்பி பயிரிடப்படும் சிறுதானியப் பயிராகும்.
 • இது மிகக் கடினமான வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது. மேலும் பலவகையான மண் வகைகளிலும், மண் வளம் குறைந்த நிலங்களிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.
 • இந்தப் பயிர்கள் தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக இந்தப் பயிர்களின் மகசூல் 650 கிலோ ஹெக்டேர் ஆகும். தேர்வு செய்யாத ரகங்களைப் பயிரிடுவதே இவ்வளவு குறைந்த மகசூலுக்கு முக்கியக் காரணமாகும்.
 • இதனைத் தவிர்க்க அதிக மகசூல் தரக் கூடிய ரகங்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 1500 – 2000 கிலோ என்கிற அளவுக்கு அதிக மகசூல் பெறலாம்.

தினை (கோ 7) ரகத்தின் சிறப்பியல்புகள்:

1. மிக குறுகிய வயது (85 – 90 நாள்கள்), 2. அதிக தூர்கள் (7 – 8), 3. அதிக கதிர் நீளம் (29 செ.மீ.), 4. அதிகப் புரதச் சத்து (13.26 சதவீதம்), 5. கால்சியம் சத்து (0.35 சதவீதம்), 6. திரட்சியான மஞ்சள் நிற தானியம், 7. அதிக மகசூல், 8. பூச்சி, நோய்களை தாங்கி வளரும் தன்மை, 9. வறட்சியைத் தாங்கி அதிக அளவில் விளைச்சல் தரும் கோ(தி) 7 என்ற இந்த தினை ரகம் தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றதாகும்.

வரகு ரகங்கள் – கோ 3, ஏபிகே 1, சாமை ரகங்கள் – கோ 2, கோ 3, பனிவரகு ரகங்கள் – கோ 3, கோ 4.

மேற்கண்ட பயிர்கள் ஆடி, புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியாக பயிரிட ஏற்றது.

நிலம் தயாரித்தல்:

 • செம்மண், இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
 • கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்ட மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
 • நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும்.

விதைகளைக் கடினப்படுத்துதல்:

 • வறட்சியைத் தாங்கி வளர, விதைகளை கடினப்படுத்தி பின்பு விதைக்க வேண்டும்.
 • ஒரு சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் (ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் உரம்) விதைகளை 6 மணிநேரம் ஊரவைத்து நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.

பூஞ்சாண விதை நேர்த்தி:

 • விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ், ப்ளோரசன்ஸ் கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் அல்லது டிரைகோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்றளவில் நன்கு கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள் விதை நேர்த்தி:

 • அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிரை விதையுடன் கலந்து இடுவதால் 25 சதவீதம் தழைச்சத்தை சேமிக்கலாம்.
 • ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையுடன் 600 கிராம் (3 பாக்கெட்கள்) அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிர் கலவையை குளிர்ந்த அல்லது அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும்.
 • இவ்வாறு கலந்த விதைகளை 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும்.

விதையும் விதைப்பும்:

 • கை விதைப்பு அல்லது விதைப்பான் அல்லது கொர்ரு கருவி கொண்டு வரிசை விதைப்பு செய்யலாம்.
 • இப்படி செய்வதால் அதிகப் பரப்பில் மண் ஈரம் காயும் முன்பே விதையை விதைத்து முடிக்கலாம்.

உரமிடல்:

 • ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பிய பிறகு நிலத்தை உழ வேண்டும்.
 • பின்னர் 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து ஆகியவற்றை விதைப்பின்போது அடியுரமாக இட வேண்டும்.
 • மேலுரமாக 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20 – 25 நாள்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி இட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக் கலவையை 12.5 கிலோ அளவில் மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராகத் தூவ வேண்டும்.
 • தூவப்பட்ட உரத்தை நிலத்துடன் கலக்கக் கூடாது.

களை நிர்வாகம்:

 • சிறுதானியப் பயிர்களில், விதைத்த 3-ஆம் நாள் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை ஹெக்டேருக்கு 750 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்.
 • நிலத்தில் தெளிக்கும்போது போதியளவு ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு விதைத்த 20 – 25 நாள்களில் ஒரு இடை உழவு அல்லது கைக் களை எடுக்க வேண்டும்.

பயிர் களைத்தல்:

 • விதைத்த 18 – 20-ஆம் நாளில் செடிகளை களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

 • இந்தப் பயிர்களில் பொதுவாக பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. அதனால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை:

 • நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து, அடித்து பின் விதைகளைப் பிரித்தல் வேண்டும்.
 • கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை இரண்டு முறை செய்யலாம்.
 • கதிர்களை களத்தில் நன்கு காயவைத்து தானியங்களை அடித்துப் பிரித்து தூய்மைப்படுத்தி சேமிக்கலாம்.
 • தானியங்களைப் பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம்.

தானிய மகசூல்:

 • மானாவாரியில் ஒரு ஹெக்டேருக்கு 1500 – 1800 கிலோ தானிய மகசூல் பெறலாம்.

தீவன மகசூல்:

 • மானாவாரியில் ஒரு ஹெக்டேருக்கு 4.5 – 5.30 டன் தட்டை மகசூல் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட உழவியல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் சிறுதானியப் பயிர்களின் தானிய மகசூலை அதிகரிக்கலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *