சிறுதானியம் பெற்றுத் தந்த தேசிய விருது!

பதப்படுத்தப்பட்டுக் கண்கவர் உறைகளிலும் டப்பாக்களிலும் அடைத்து விற்கப்படுகிற பொருட்களில் மலிந்திருக்கும் ரசாயனங்களைப் பற்றி பேசிப் பேசி மாய்ந்துபோகிறோம். தண்ணீர், அரிசி, காய்கறிகள் என்று அத்தியாவசியப் பொருட்களிலும், செயற்கைப் பொருட்களின் தாக்கம் இருப்பதை வேதனையோடு பகிர்ந்துகொள்கிறோம்.

ஆனால், கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிற நம் பாரம்பரிய உணவவுப் பொருட்கள் குறித்தோ, அவற்றில் நிறைந்திருக்கும் சத்துகள் குறித்தோ பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

நேரமில்லை என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லிக்கொண்டு நிமிடங்களில் தயாராகும் துரித – உடனடி உணவுகளின் பின்னால் ஓடி வாழ்வையும் ஆரோக்கியத்தையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம் பாரம்பரிய தானியங்களும் உணவுப் பொருட்களுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டி என்று சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், அதை ஊருக்கு வழங்கி ஊட்டத்தைப் பரப்பிவருகிறார் திருவையாற்றைச் சேர்ந்த ராஜேஸ்வரி. அந்த உறுதிதான் அவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.

பலவிதமான சிறுதானியங்கள், பட்டை தீட்டப்படாத அரிசி வகைகள், பயறு வகைகள், பொடி வகைகளால் நிரம்பியிருக்கிறது ராஜேஸ்வரியின் வீடு . ஒவ்வொன்றையும் பக்குவமாகப் பிரித்து, அவற்றுக்குரிய உறைகளில் நிரப்புகிறார் ராஜேஸ்வரி.

அனைத்துமே உணவுப் பொருள் என்பதால் தரத்தில் கவனத்துடன் இருக்கிறார். பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் ராஜேஸ்வரிக்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?

வழிகாட்டிய புத்தகங்கள்

திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கும் பழமார்னேரி கிராமம்தான் ராஜேஸ்வரியின் பூர்வீகம். அப்பா பெட்டிக்கடை நடத்த, அம்மா வீட்டுத்தலைவியாக இருந்தார். அக்கா, இரண்டு அண்ணன்களுக்கு இடையே படிப்பு என்பதே பெரும் கனவாகத்தான் இருந்தது ராஜேஸ்வரிக்கு.

“என்னைப் பத்தாவது வரைக்கும் படிக்க வச்சதே பெரிய விஷயம். அதுக்கு மேலே படிக்கணும்னா பக்கத்து ஊருக்குத்தான் போகணும். அதனால ஸ்கூலை விட்டு நிறுத்திட்டாங்க” என்கிறார் ராஜேஸ்வரி. அதன் பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், வீட்டு வேலைகளுடன் மட்டும், தன் எல்லையை அவர் சுருக்கிக்கொள்ளவில்லை.

அஞ்சல் முறையில் ஓவியம் பயில்வது, நாளிதழ்கள், புத்தகங்கள் வாசிப்பது என்று தனக்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டார். தஞ்சாவூரில் சோப்பு ஏஜெண்ட் கடை நடத்தும் ரவிக்குமாரைத் திருமணம் செய்ததும் திருவையாற்றுக்குக் குடியேறினார்.

அதன் பிறகு குடும்பம், குழந்தைகள், அவர்களுடைய படிப்பு என்று காலம் றெக்கைக் கட்டி பறந்தது. அப்போதும் புத்தகங்கள் வாசிப்பதை மட்டும் ராஜேஸ்வரி நிறுத்தவில்லை.

“என் கணவரும் மகள்களும் வெளியே கிளம்பியதும், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காது. எதையாவது படிச்சுக்கிட்டே இருப்பேன். அப்படிப் படிக்கும் போதுதான் ஒரு புத்தகத்துல, அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்கற ஒரு கிராமத்துல யாருக்கும் சர்க்கரை வியாதியே இல்லைன்னு வந்த செய்தியைப் படிச்சேன்.

காரணம் அந்தக் கிராமத்துல எல்லாருமே சிறுதானிய வகைகளை அதிகமா சாப்பிடுறதுதான். அதேபோலச் சர்க்கரை வியாதியால பாதிக்கப்பட்டவங்க சென்னையில அதிகமா இருக்கறதாகவும் அதுல படிச்சேன். அப்போதான் சிறுதானியங்கள் மேல எனக்கு ஆர்வம் அதிகமாச்சு” என்கிறார் ராஜேஸ்வரி.

அதற்குப் பிறகு தன் வீட்டுச் சமையலறையில் சிறுதானியம் மற்றும் பட்டை தீட்டப்படாத அரிசி வகைகளுக்கு அதிக இடமளித்தார். அதன் பலனை அவரே அனுபவித்து உணர்ந்தார். தனக்கும் தன் வீட்டு உறுப்பினர்களுக்கும் முன்பு இருந்ததைவிட ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் மேம்பட்டிருந்ததை உணர்ந்தார்.

சிறுதானியத் தேடல்

சிறுதானிய வகைகளில் கஞ்சி, களி போன்ற சில வகைகளில் மட்டுமே சமைக்க முடியும், அவற்றில் சுவை அதிகம் இருக்காது என்பது பலரது மூடநம்பிக்கை. விதவிதமான சிறுதானிய உணவு வகைகளாலும் பொடி வகைகளாலும் அந்த நினைப்பைத் தகர்த்தெறிந்தார் ராஜேஸ்வரி.

அதைப் பார்த்து அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கும் அந்தப் பொடி வகைகளைச் செய்து தரும்படி கேட்டனர். அந்தப் புள்ளியில் இருந்துதான் ராஜேஸ்வரியின் வெற்றிப் பயணம் தொடங்கியது.

எதையுமே முறைப்படி கற்றுக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும் என்பதற்காகத் தஞ்சாவூரில் இருக்கும் ‘இந்தியப் பயிர் பதனத் தொழில்நுட்பக் கழக’த்தில் (IICPT) உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கு நடக்கும் பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் அனைத்துமே ராஜேஸ்வரியின் தேடலுக்கு விருந்தாக அமைந்தன.

செயற்கைப் பொருட்களின் சேர்க்கை இல்லாமல் இயற்கை வழியில் உணவு தானியங்களையும் பொருட்களையும் பதப்படுத்தும் பக்குவத்தை அங்கே கற்றறிந்தார். அங்கு நடந்த விவசாயிகளுடனான சந்திப்பால் பலதரப்பட்ட விவசாயிகளும் ராஜேஸ்வரிக்கு அறிமுகமானார்கள். அதனால் தேர்ந்தெடுத்த தானிய வகைகளை நேரடியாக அவர்களிடம் இருந்து பெற முடிந்தது.

செயற்கைக்குத் தடை

“இரண்டு நாட்களில் கெட்டுப் போவதுதான் உணவுப் பொருட்களின் இயல்பு. ஆனால், இன்றைக்குக் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள்வரை கெட்டுப்போகாத உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன.

அவற்றில் அளவுக்கு அதிகமாக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதே காரணம். ஆனால், நம் முன்னோர் இயற்கை வழியில் பதப்படுத்தும் முறையைத் தெரிந்துவைத்திருந்தார்கள். அந்த முறையைத்தான் எங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்துகிறோம்” என்கிறார் ராஜேஸ்வரி.

சத்துமாவு வகைகள், விதவிதமான அரிசி வகைகள், பட்டை தீட்டப்படாத தானியங்கள், உடனடி பொடி வகைகள் என்று பலவற்றைத் தயாரித்தும், வாங்கியும் விற்பனை செய்கிறார். ஆரம்பத்தில் உள்ளூரில் மட்டுமே விற்பனை செய்தவர், சென்னை போன்ற பெருநகரத்திலும் தற்போது தடம்பதித்திருக்கிறார்.

அங்கீகாரம் தந்த விருது

“சமூகத்துக்குப் பயன்படும் புதிய கண்டுபிடிப்புக்குப் பரிசு அறிவித்து மத்திய அரசின் சார்பில் வெளிவந்த விளம்பரம், என் கவனத்தை ஈர்த்தது. நான் செய்யும் வேலையில் எனக்கு நம்பிக்கை இருந்ததால், நானும் விண்ணப்பித்தேன். திடீரென ஒரு நாள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு.

என் தயாரிப்புகளை அனுப்பிவைக்கச் சொன்னார்கள். அனுப்பி வைத்தேன். என்னைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னார்கள். மகளிர் தினத்தன்று டெல்லியில் நடந்த விழாவில் ‘ஸ்ருஷ்டி சம்மான்’ விருது பெற்ற அந்தக் கணம், இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை மனதில் ஏற்படுத்தியிருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராஜேஸ்வரி.

டெல்லியில் பரிசு வாங்கிய போது.. நன்றி: ஹிந்து
டெல்லியில் பரிசு வாங்கிய போது.. நன்றி: ஹிந்து

ராஜேஸ்வரியின் பத்து வருட உழைப்புக்கும் தேடலுக்கும் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த ‘ஸ்ருஷ்டி சம்மான்’ விருது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளிலும் சென்னையில் காதி விற்பனை நிலையங்களிலும் இவரது ‘சுகா டயட் நேச்சுரல்ஃபுட்ஸ்’ தயாரிப்புகள் கிடைக்கின்றன.

“நானும் என் கணவரும் ஒவ்வொரு கடையாகச் சென்று எங்கள் தயாரிப்புகளின் மாதிரிகளைக் கொடுத்து விற்பனைக்கு வைக்கச் சொன்னோம். எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தியவர்களே, இன்றைக்கு எங்களைத் தேடிவந்து வாங்குகிறார்கள்.

பெண்களின் முக்கியப் பிரச்சினையான ‘பி.சி.ஓ.டி.’ சிக்கலுக்கும், கொழுப்பு மற்றும் எடை குறைப்பு ஆகியவற்றுக்கும் எங்கள் தயாரிப்புகள் தீர்வாக இருக்கின்றன என்று தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நடத்திய மருத்துவ ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டிகிறது” ராஜேஸ்வரி விற்பனை செய்யும் பொருட்கள் தரும் ஊட்டம், அவர் வார்த்தைகளிலும் எதிரொலிக்கிறது.

ராஜேஸ்வரி தொடர்புக்கு: 09488574308

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *