சிறுதானிய விவசாயம்… எவ்வளவு லாபம்?

விழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களின் இயற்கை விவசாய அனுபவங்களைத் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்…

சிறுதானிய சாகுபடியை எத்தனை வருடங்களாக செய்து வருகிறீர்கள்?

தேனையும் தினை மாவையும் உண்டு நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்ததை இலக்கியங்கள் எடுத்துக் கூறுகிறது. தமிழகத்தில் பரவலாக நடைபெற்ற சிறுதானிய சாகுபடி தற்போது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. நான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும் சிறுதானியங்களை நான் சாகுபடி செய்யவில்லை, ஈஷாவின் தொடர்புக்கு பின்புதான் சிறுதானியங்கள் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.

பல்லடத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயப் பயிற்சியில் நாட்டுரக விதைகள், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். சிறுதானிய விதைகளை கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் வாங்கி சாகுபடியையும் தொடங்கி விட்டேன்.

என்னென்ன சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகிறீர்கள்?

என்னிடம் உள்ள 12 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தை சிறுதானிய சாகுபடிக்காக ஒதுக்கி விட்டேன். கேழ்வரகுக்கு விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளதால் அதை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறேன். மீதி உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை 25 சென்ட் அளவில் தனித்தனியாகப் பிரித்து பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை என பல்வேறு சிறு தானியங்களையும் சாகுபடி செய்து வருகிறேன். சில நேரங்களில் சிறுதானியத்தோடு துவரையையும் ஊடுபயிராக சாகுபடி செய்கிறேன்.

கோடி ரூவாய்க்கு பதிலா காணி நெலம் பெருசுன்னு என்ற ஊர்ல ஒரு சொலவட சொல்லுவாங்கோ! விழுப்புரத்துல ராதாகிருஷ்ணன் அண்ணா செய்யுற சிறுதானிய விவசாயம் நமக்கு அதைய நல்லா புரியவைக்குதுங்க! சூட்சுமத்த நல்லா புரிஞ்சிக்கிட்டா சாக்குப்போக்கு சொல்ல வேணாமுன்னு சொல்லுவாங்கோ… அதுமாறி விவசாய சூட்சுமத்த புரிஞ்சிகிட்ட ராதாகிருஷணன் அண்ணா என்ன சொல்றார்னு தொடர்ந்து கேட்டுப்போட்டு வருவொம் வாங்க!

சிறுதானியங்களை பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன்?

வறட்சியான பகுதிகளுக்கும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கும் சிறுதானியம் ஏற்றது. சிறுதானியத்தில் நாட்டு ரகங்களுடன், பல்கலைக்கழக ரகங்களும் இருக்கு. புதிய ரகங்கள் சற்று கூடுதல் மகசூலைத் தருமென்றாலும் நான் பாரம்பரிய ரகங்களைப் புறக்கணிப்பதில்லை. புதிதாக சிறுதானியம் பயிர் செய்பவர்கள் கேழ்வரகு சாகுபடி செய்வது சிறந்தது, கேழ்வரகில் நாட்டுரகம், திருச்சி 1, பையூர் 1, கோ 15 போன்ற பல ரகங்கள் இருக்கு, இதில் திருச்சி 1 என்பது குறுகிய காலப்பயிர். இந்த எல்லா ரகங்களிலும் விதைக்கான தேவை இருப்பதால் நான்கு ரகங்களையுமே சாகுபடி செய்து வருகிறேன்.

தினையில் செந்தினை என்ற நாட்டுரகத்தையே பெரும்பாலும் சாகுபடி செய்கிறார்கள், சிவப்பு நிறத்தில் இருப்பதால் இதை செந்தினை என்று சொல்கிறார்கள், இதைத் தவிர கோ 7, பாலன் தினை, வெள்ளைத் தினை என பல வகைகள் உள்ளது. கோ 7 என்பது அதிக கிளைப்பு வரும் கதிரும் நீளமாக இருக்கும்.

பனிவரகு என்பது அற்புதமான ஒரு சிறுதானியம், பனிக்காலத்தில் எந்த பாசனமும் இல்லாமலேயே பனிப்பொழிவினால் கிடைக்கும் நீரிலேயே வளர்ந்துவிடக் கூடியது. கோ 2, கோ 4 என்ற இரண்டு ரகங்கள் உள்ளன. இது 65 நாள் பயிராகும், பனிகாலமான கார்த்திகையில் விதைத்து தையில் அறுவடை செய்யலாம், அறுவடை முடிந்ததும் அடுத்த சாகுபடியாக பனிவரகையே விதைக்கலாம், இதனால் குறுகிய காலத்தில் இரண்டு முறை சாகுபடி செய்து விடமுடியும்.

கார்த்திகைக்கு பிறகு மழையுமில்ல, கர்ணனுக்கு பிறகு கொடையுமில்லன்னு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாங்கோ! விவசாயம் செய்யுறவங்க பருவகாலத்த பத்தி நல்லா புரிஞ்சு வச்சுக்கறது ரொம்ப முக்கியமுங்கண்ணா! அதைய ராதாகிருஷ்ணன் அண்ணா புரிஞ்சு வச்சிருக்கறதால அவரால சிறப்பா விவசாயம் செய்யமுடியுதுங்கோ!

சிறுதானிய சாகுபடி முறையைப் பற்றிக் கூறவும், நெல் சாகுபடியில் இருந்து சிறுதானிய சாகுபடி எவ்விதம் வேறுபடுகிறது?

நெல் சாகுபடிக்கு தண்ணீர் நிறைய தேவைப்படும், சிறுதானியங்களுக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. நிலத்தை மூன்று முறை உழவு செய்துவிட்டு அப்படியே விதைத்து விடலாம், மானாவாரி நிலத்திலும் சாகுபடி செய்ய முடியும். விதைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விதைக்க வேண்டும், மண்ணில் விதை முளைக்கும் அளவுக்கு ஈரப்பதம் இருந்தால் போதுமானது, விதை முளைத்து விட்டால் நிச்சயமாக பயிர் பிழைத்து வளர்ந்து விடும்.

பயிர் வளர்ச்சிப் பருவத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறைகளோ தண்ணீர் விட்டால் போதுமானது. களை எடுக்க வேண்டிய அவசியமில்லை, மண் தன்மையைப் பொறுத்து களை அதிகமாக இருந்தால் மட்டும் களை எடுத்துக்கொள்ளலாம். சிறுதானிய சாகுபடியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கதிர்முற்றி அறுவடை செய்யும்போது மழை இருக்கக்கூடாது, இதை கவனித்து விதைக்க வேண்டும், மழை இருந்தால் தேவையான முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.

சிறுதானியங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது! பறவை தாங்கிகளை வைத்து பறவைகளை வரவழைத்தால் அவைப் பூச்சிகளைத் தின்றுவிடும், பறவைகள் சிறிது தானியத்தை சாப்பிட்டாலும் பாதகமில்லை.

சாட்சிக்காரன் கால்ல விழுறதுக்கு பதிலா சண்டக்காரன் கால்ல விழுந்துடலாமுன்னு சொல்லுவாங்க இல்லீங்கோ… அதுமாறி இரசாயன பூச்சிக்கொல்லிய அடிச்சு மண்ண மலடாக்குறதுக்கு பதிலா பறவைகள வரவச்சு பூச்சிய கட்டுப்படுத்தலாமுன்னு எவ்வளவு அழகா சொல்லிப்போட்டாரு பாருங்கோ!

சிறுதானிய அறுவடையின்போது கவனிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் என்னென்ன?

அறுவடைக்காலம் மழைக்காலமாக இருக்கக்கூடாது என்றதற்கு காரணம், தானியங்கள் மழையில் வீணாகிவிட வாய்ப்புள்ளது என்பதால்தான், சிறுதானியத்தை நாமே அறுவடை செய்து களத்தில் அடித்து பிரிக்க வேண்டியுள்ளதால் மழை வந்தால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருப்பது அவசியம். அறுவடை முடிந்தவுடன் அடிக்கவும், உலர்த்தவும் களத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக மழைவர வாய்ப்பிருந்தால் தார்ப்பாய், பாலிதீன் ஷீட் போன்றவற்றையும் தயாராக வைத்திருக்க வேண்டும். களத்தையும் அறுவடை செய்த தானியங்களையும் மூடிவைக்க இவை மிகவும் அவசியம், இதனால் இழப்பைத் தவிர்க்க முடியும்.

அறுவடை செய்த தானியங்களை நான் பவர் டில்லர் மூலமாக அடித்துக் கொள்கிறேன், தற்போது தானியங்களை அடிப்பதற்கு இயந்திரம் வந்து விட்டது. இந்த இயந்திரத்தின் மூலம் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் என எந்த தானியத்தையும் அடிக்கலாம், எந்த தானியம் அடிக்கிறோமோ அதற்கேற்ப ஜல்லடை மாற்றி அடிக்க வேண்டும்.

சிறுதானிய விதை சேகரிப்பு பற்றி கூறுங்கள்?

எனது வயலில் விளையும் சிறுதானியங்களை பெரும்பாலும் விதைக்காகவே கொடுத்து வருகிறேன். சிறுதானியங்கள் விதைக்காக சாகுபடி செய்யும்போது டில்லர் ஓட்டாமல் தடியால் தட்டி தானியங்களை பிரித்தெடுக்க வேண்டும். விதைக்காக பிரித்து எடுத்தபின் மீதி உள்ள சக்கையை டில்லர் மூலம் ஓட்டி எல்லா தானியங்களையும் பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.

அட இந்த விஞ்ஞான வளர்ச்சி மனுசங்க வேலய எவ்வளவு சுளுவா ஆக்கிப்புடுச்சு பாத்தீங்ளா?! அல்லாத்துக்கும் மெசினு வந்துருச்சுங்கண்ணா! முன்னாடியெல்லாம் காத்துள்ள போதே தூற்றி தானியத்த பிரிச்செடுக்கணும்னு காத்துக்கெடக்கணுமுங்க. இப்போ கதிரடிக்குற மெசினுக்காக காத்திருந்தா போதுமுங்க. இவ்வளவு வசதி இருக்குறப்போ கூட விவசாயத்த கைவிட நினைக்குற விவசாயிங்களுக்கு அவங்க அறியாமைதான் காரணமுங்க. சரி பரவாயில்லைங்கோ… நாம வெகரமா எடுத்துச் சொல்லி அவிகளுக்கெல்லாம் புரியவைப்போமுங்க!

சிறுதானியங்களை அரைப்பதற்கு போதுமான வசதிகள் உள்ளதா?

திருகையில் சிறுதானியங்களை அரைத்துக் கொண்டிருந்த நாம், தற்போது இயந்திரத்தை தேடிப்போக வேண்டிய நிலையில் உள்ளோம். சிறுதானியங்கள் அரைப்பதற்கு எல்லா ஊர்களிலும் போதிய வசதிகள் இல்லை என்பது தற்காலத்தில் ஒரு பெரிய குறைபாடாக இருக்கிறது. சிறுதானியங்களை அரைக்கும்போது, கற்களைப் பிரிக்க ஒரு இயந்திரம், தரம்பிரிக்க ஒரு இயந்திரம், உமி நீக்குவதற்கு ஒரு இயந்திரம், நீக்கிய உமியை தனியாக பிரித்தெடுக்க ஒரு இயந்திரம் என பல இயந்திரங்கள் தேவைப்படுகிறது.

மேலும் ஒரே அறுவடையில் கிடைத்த தானியங்கள்கூட பல்வேறு அளவுகளில் உள்ளதால், சிறுதானியங்களை உமி நீக்குவது பெரிய சவாலாக உள்ளது. முதலில் சிறிய அளவிலான தானியங்கள் உமி நீக்கப்பட்டு அடுத்தடுத்து பெரிய அளவிலான தானியங்கள் உமி நீக்கப்படுகிறது. ஒரே முறையில் எல்லா தானியங்களையும் உமி நீக்க முயன்றால் சிறியதாக உள்ள தானியங்கள் மட்டும் உமி நீங்கியிருக்கும், பெரியதாக உள்ள தானியங்கள் மாவாகிவிடும், இதனால் தானியங்களின் அளவைப் பொறுத்து படிப்படியாக உமி நீக்க வேண்டியுள்ளது.

சிறுதானியம் அரைக்க இவ்வாறு பல இயந்திரங்கள் தேவைப்படுவதால் பெரும்பாலான ஊர்களில் சிறுதானியங்களை அரைக்க முடிவதில்லை. சிறுதானிய உமியைப் பிரித்தெடுக்க ஒரு இயந்திரத்தை உருவாக்கித் தருமாறு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய சங்கம் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம், அவ்விதம் ஒரு எளிமையான விலை குறைந்த இயந்திரம் கிடைக்குமானால் சிறுதானியங்களை பெரும்பாலான விவசாயிகள் பயிரிடத் தொடங்கிவிடுவார்கள்.

சிறுதானிய சாகுபடி லாபகரமாக உள்ளதா?

நிச்சயமாக லாபகரமாகவே உள்ளது, இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு விதைச்செலவு 1500, உழவுச்செலவு 6000, ஜீவாமிர்தம் விடுவதற்கு 3000, களையெடுப்பதற்கு 2500, அறுவடைக்கு 3000 என செலவு செய்கிறேன், தோராயமாக 15,000 முதல் 20,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்யும்போது 2000 கிலோ மகசூல் கிடைக்கும், நான் பெரும்பாலும் விதைக்காக கொடுப்பதால் ஒரு கிலோ சிறுதானியத்தை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன், இதனால் எனக்கு 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. விதைக்காக அல்லாமல் உணவுக்காக விற்றாலும்கூட கிலோவுக்கு 50 ரூபாய் நிச்சயம் கிடைக்கும்.

விதை விற்பனை போக மீதி உள்ள தானியங்களை சுவாசம் அமைப்புக்கு கொடுத்து வருகிறேன். 100 கிலோ மூட்டையை 5000 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். 100 கிலோ சிறுதானியத்தை அரைத்தால் அதில் 70 கிலோ அரிசி கிடைக்கும். நாமே அரைத்து சிப்பம் செய்து விற்றால் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கமுடியும். எனவே சிறுதானியத்தை விதைக்காக உற்பத்தி செய்தாலும், உணவு தானியத்துக்காக உற்பத்தி செய்தாலும் லாபம் நிச்சயமாக வரும் என்று கூறி நிறைவு செய்தார். சிறுதானியங்கள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்ட திரு. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஈஷா விவசாயக் குழுவினர் நன்றி கூறி விடைபெற்றனர்.

தொடர்புக்கு: திரு. ராதாகிருஷ்ணன்: 9840559532

தொகுப்பு: ஈஷா விவசாய இயக்கம்: 8300093777

நன்றி: ஈஷா இணையத்தளம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சிறுதானிய விவசாயம்… எவ்வளவு லாபம்?

  1. இ.இளஞ்செழியன் says:

    வெற்றிக்கதைகள் ,நன்றாகயிருந்தது ,மேலும் எனக்கு பயிற்சிகள் தேவைபடுவதால் அதன்விவரங்களை தெரிவிக்கவும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *