சிறு தானியங்கள் சாகுபடி உயர்வு

வேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கம்பு, தினை, வரகு உள்ளிட்ட, சிறு தானியங்கள் சாகுபடி, 25 மாவட்டங்களில் நடக்கிறது. விற்பனை அதிகளவில் இல்லாததால், சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

ஏற்றுமதி

தற்போது, சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், சிறு தானியங்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.சிறு தானியங்கள் நேரடியாகவும், மதிப்பு கூட்டப்பட்டும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே, மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், வேளாண் துறை ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்தாண்டு, 9.16 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சிறு தானியங்கள் சாகுபடி நடந்தது. இந்தாண்டு, ஏப்., – அக்., 14 வரை, 13.2 லட்சம் ஏக்கரில், சாகுபடி நடக்கிறது.

அதிகபட்சமாக, மக்காச்சோளம், 4.12 லட்சம் ஏக்கர்; கேழ்வரகு, 1.44 லட்சம்; கம்பு, 1.29 லட்சம் ஏக்கரில், பயிர் செய்யப்பட்டு உள்ளது. சிறு தானியங்கள் உற்பத்திக்காக, வேளாண் துறை வகுத்துள்ள புதிய திட்டங்கள் தான், சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விதை மற்றும் உழவு மானியம் வழங்கப்படுகிறது.இதனால், மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

அதிகரிப்பு

கடந்தாண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில், 62 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சிறு தானிய சாகுபடி பரப்பு, இந்தாண்டு, 1.84 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.நாமக்கல்லில், 86 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 1.31 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.விருதுநகர், விழுப்புரம், கோவை, துாத்துக்குடி, திருச்சி, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. நவ., இறுதி வரைசாகுபடி பருவம் உள்ளதால், பரப்பு மேலும்அதிகரிக்கும் வாய்ப்புஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *