சூரியகாந்தி சாகுபடி

 • சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.
 • சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.
 • நீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.
 • விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
 • நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.
 • ஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.
 • ஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.
 • தொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும்.
 • 10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.
 • ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.
 • கடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.

விதைத்தல்:

 • விதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம்.
 • விதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.
 • இல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.
 • 10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.
 • சூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.
 • விதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.
 • நிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
 • அறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.
 • விதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.
 • சூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.
 • பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.

அறுவடை

 • சூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும்.
 • பூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.
 • களத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும்.
 • நன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம். நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடையமுடியும்.

எஸ்.எஸ்.நாகராஜன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *