மகத்தான மகசூல் கொடுக்கும் கோ-6 ரக மக்காச்சோளம்!

  • 110 நாட்கள் வயது.
  • ஏக்கருக்கு 8 கிலோ விதை.
  • ஏக்கருக்கு சராசரியாக 5,450 கிலோ மகசூல்.
  • ஜூலை 15-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் விலை

யல், விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்… சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்… சந்தையின் தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்து கொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிறுதானியங்கள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். ரவிகேசவன், சந்தைக்கு ஏற்ற மக்காச்சோள ரகங்கள் குறித்த விஷயங்களைப்  பகிர்ந்துகொண்டார்.

இந்தியா முழுவதுக்கும் ஏற்ற ரகம்!

“தமிழ்நாட்டில் மக்காச்சோள உற்பத்தியில் தனியார் கம்பெனி விதைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கோ-6 என்ற மக்காச்சோள ரகத்தை வெளியிட்டுள்ளோம். இந்த ரகத்தை இந்தியா முழுவதுமே பயிரிடலாம். இந்தியாவின் தட்பவெப்பநிலையில் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய ரகமிது. குஜராத் மாநிலத்தில் உள்ள விதை உற்பத்தி நிறுவனம், இந்த ரக விதைகளை ஆண்டுக்கு ஆயிரம் டன் அளவுக்கு மேல் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்குகிறது. இதன் வயதும் 110 நாட்கள்தான். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 8 கிலோ விதை போதுமானது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் அதிகபட்சமாக 12 டன் மகசூல் எடுத்து நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ரகத்தின் சராசரி மகசூல் ஏக்கருக்கு 5 ஆயிரத்து 450 கிலோ.

ஒரு கிலோ 150 ரூபாய்!

கோழித்தீவன உற்பத்தி, மாட்டுத்தீவன உற்பத்தி, ஸ்டார்ச் உற்பத்தி… எனக் கிட்டத்தட்ட 150 பொருட்களுக்கு மக்காச்சோளம் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, ரகங்களைத் தேர்வு செய்யும் போது…

பெரிய மணிகள், அடர் மஞ்சள் நிறம், நீளமான கதிர்களைக் கொடுக்கக்கூடிய ரகங்களைத்தான் தேர்வு செய்து விதைக்க வேண்டும். மக்காச்சோளத்தை, மழைக்காலத்துக்கு முன்போ அல்லது மழைக்குப் பிறகோ கதிர் வருவது போல, விதைக்க வேண்டும். கோ-6 மக்காச்சோள விதை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் எங்கள் துறை; எங்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையம்; பொங்கலூரில் செயல்பட்டு வரும் மாநில அரசு விதைப் பண்ணை ஆகிய மூன்று இடங்களிலும் கிடைக்கும். ஒரு கிலோ விதை 150 ரூபாய்” என்றார், ரவிகேசவன்.

வாரம் 150 டன் விற்பனை!

உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறைக்கூடத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் விற்பனை குறித்த தகவல்களைச் சொன்னார். “உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்துல, ஒரு காலத்துல பருத்தி சாகுபடிதான் அதிகளவு நடந்தது.

18 வருஷத்துக்கு முன்னாடி ‘புரோட்டோனியா’ புழு தாக்குதலால, விவசாயிகளுக்கு பெரிய அளவுல நஷ்டம். அதனால, பெரும்பகுதி விவசாயிங்க, மக்காச்சோள சாகுபடிக்கு மாறினாங்க. அதுக்கு தகுந்த மாதிரி, உடுமலைப்பேட்டை, பல்லடம், பொள்ளாச்சி பகுதியில கோழிப் பண்ணைகள் உருவாக ஆரம்பிச்சது. அதுக்குப்பிறகு போன 10 வருஷமா மக்காச்சோளத்துக்கு இந்தப் பகுதியில தேவை அதிகரிச்சிடுச்சு. எங்களோட மையத்துல, ஏல முறையிலதான் விற்பனை செய்றோம். விற்பனை செய்த தினத்திலே வியாபாரிங்ககிட்ட இருந்து பணம் வாங்கி விவசாயிகளுக்குக் கொடுத்திடுவோம். சீசன் நேரங்கள்ல வாரம் 100 டன் அளவுல இருந்து 150 டன் வரை விற்பனையாகுது.

வியாபாரிங்க சொல்ற ஏலத்தொகை, விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகலைனா… இங்கே இருப்பு வெச்சுக்கிற வசதியும் இருக்கு. 7 ஆயிரத்து 150 டன் அளவுக்கு இருப்பு வெக்க முடியும். இருப்பு வெக்கிற பொருளோட மதிப்புல 70 சதவிகிதத் தொகையை, 5 சதவிகித வட்டியில கடனாவும் விவசாயிகள் வாங்கிக்கலாம். அதிகபட்சம் 6 மாதம் இருப்பு வைக்கலாம். டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நம் மாநிலத்தில் மக்காச்சோளம் விளைச்சல் அதிகம் இருக்கும். அப்போ, விலை குறைவாக இருக்கும். அந்த மக்காச்சோளத்தை சேமித்து வெச்சு, ஜூலை 15 தேதிக்குமேல், ஆகஸ்ட் மாதம் வரை விற்பனை செய்றப்போ… கூடுதல் விலை கிடைக்கும்” என்றார்.

ஈரப்பதம் முக்கியம்!

பல்லடம் பகுதியைச் சேர்ந்த மக்காச்சோள வியாபாரி ராஜேந்திரனிடம் பேசினோம். “நான் 17 வருஷமா மக்காச்சோளத்தை வாங்கி கோழிப் பண்ணை, மாட்டுத்தீவன நிறுவனங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். என்னோட அனுபவத்துல மக்காச்சோளத்தை அள்ளிப் பார்க்கும்போதே தரத்தை நிர்ணயம் செஞ்சிடுவேன். கோழிப்பண்ணை நிறுவனங்கள், 120 கிராம் மக்காச்சோளத்தை எடை போட்டு பார்ப்பாங்க. அதுல, 14 சதவிகிதத்துக்குக் குறைவான ஈரப்பதம் இருக்கணும். ஒரு சதவிகிதம் கூடுதலா இருந்தாலும், விலையைக் குறைச்சுடுவாங்க.

ஜனவரி மாதத்துல இருந்து மார்ச் மாதம் வரை உள்ளூர் வரத்து இருக்கும். அதுக்கப்பறம் வெளி மாநிலங்கள்ல இருந்து வரத் தொடங்கும். வெளி மாநிலங்கள்ல இருந்து வர்றப்போ விலை குறைவா இருக்கும். போன வருஷம்  ஜனவரி மாதம் கிலோ 12 ரூபாய்னு வாங்கினோம். இந்த வருஷம் 14 ருபா 50 காசுனு கொள்முதல் செய்தோம். இந்த வருஷம், பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்கால்ல தண்ணீர் தாமதமா திறந்ததால… மக்காச்சோள சாகுபடிப் பரப்பு குறைஞ்சிருக்கு” என்றார்.

வட்டியில்லாமல் பயிர்க்கடன்!

மக்காச்சோளம் சாகுபடி செய்ய, கூட்டுறவு சங்கங்களில் கடன் கிடைக்கிறது. அது குறித்துப் பேசிய ஜெ.கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் கதிர்வேல், “மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானாவாரிக்கு 12 ஆயிரம் ரூபாயும், இறவைக்கு 18 ஆயிரத்து 500 ரூபாயும் 7% வட்டியில் பயிர்க்கடன் கொடுக்கிறோம். 6 மாதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்திட்டா, வட்டியை மாநில அரசு செலுத்திடும். அப்படி இல்லாதபட்சத்தில், 7 சதவிகித வட்டியுடன் கூடுதலாக ஒரு சதவிகித அபராத வட்டியை சேர்த்து செலுத்தணும். 12.5% வட்டியில் பொருளீட்டுக் கடனும் உண்டு” என்றார்.

தொடர்புக்கு, சிறுதானியத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தொலைபேசி: 04222450507
வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையம், தொலைபேசி: 04546292504 / 04546292615

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மகத்தான மகசூல் கொடுக்கும் கோ-6 ரக மக்காச்சோளம்!

  1. சிவஷண்முகராஜன்.ஹ says:

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அரசு உதவி செய்யும் வகையில் உள்ளது தனியார் விலைக்கு இது மிக குறைவு தான் ஆகவே இதனை எப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்பது எல்லாம் சொல்ல வேண்டும் நடவுக்கு செய்யும் முறை என்ன?????என்று சொன்னால் மிகவும் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் அதிகாரிகள் அனைவருக்கும் அரசுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *