‘ராபி பருவத்தில் மக்ககாச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகள், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,’ என, தெற்கு வேளாண் துறை எச்சரித்துள்ளது.பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், ஆண்டுதோறும் அக்., நவ., மாதங்களில், 500 – 550 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
ராபி பருவத்தில் மக்காச்சோள சாகுபடி செய்ய உள்ள தெற்கு வட்டார விவசாயிகள், நடப்பு காரிப் பருவத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நர்கீஸ் கூறியதாவது:
- அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட படைப்புழுவின் தாக்கம், நம் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் காணப்படுகிறது. விதைகள், பருவநிலை மாற்றங்களால் இப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.
- படைப்புழுவின் முதிர்ச்சி பருவத்தில் இறக்கைகள் முளைத்து, ஒரு மணி நேரத்துக்கு, 100 – 150 கி.மீ., துாரம் பறக்கும்.
- இவ்வாறே படைப்புழுக்கள் பரவியுள்ளன. பயிரின் இளம் பருவத்தில் படைப்புழு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- இயற்கை வழிமுறைஆழமான கோடை உழவு செய்தால், மண்ணில் உள்ள படைப்புழு முட்டைகளை அழிக்கலாம்.ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும்.
- விதைக்கும் முன், ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் ‘பேவேரியா பேசியானா’ என்ற மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்வது அவசியம்.
- அல்லது, ‘தையமெத்தாகாம்’ மருந்தையும் விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம். ஊடுபயிர் அல்லது வரப்பு பயிராக, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, எள் பயிரிட்டால், புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
- விளக்குப் பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறி அமைத்து, முதிர்ந்த புழுக்களை அழிக்கலாம்.
- ரசாயன வழிமுறைபயிரிட்ட, 15 – 20ம் நாட்களில், 10 லிட்டர் தண்ணீரில், 20 மில்லி அசாடிரக்டின் ஒரு சதவீதம் அல்லது நுவாலுாரான், 10 சதவீதம் மருந்து, 15 மில்லி கலந்து தெளிக்கலாம்.
- வேறு வீரிய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், படைப்புழு கூடுதல் எதிர்ப்பு சக்தியை பெற்று, கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்