மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள்

குறைந்த காலத்தில் உடனடி வருவாய் அளிக்கக் கூடியதாக இருப்பதால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்காச் சோளத்தை விவசாயிகள் பயிரிட வேண்டும் என தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

  • உணவு, கால்நடைத் தீவனமாக மக்காச் சோளம் பயன்படுவதால், தனிப் பயிராகவும், வரப்பு, ஊடுபயிராக அதிகளவில் மானாவாரி, இறவையில் சாகுபடி செய்யப்படுகிறது.
  • குறைந்த நீரில் 90 முதல் 100 நாள்களில் உயர் விளைச்சல், கூடுதல் வருவாய் பெற புரட்டாசி பட்டத்துக்கு ஏற்ற கோ.1, கோ.எச் (எம்) 5, கோ.எச்.(எம்) 6 ரகங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
  •  ஏக்கருக்கு ரகமாக இருந்தால் 8 கிலோ, வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ விதை தேவை. விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கிலோ விதைக்கு கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விருடி 4 கிராம் என்ற அளவில் கலந்து ஏக்கருக்கு 2 பாக்கெட் அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
  •  விதைப்புக்குப் பிறகு ஏக்கருக்கு 4 பொட்டலம் அசோஸ்பைரில்லத்தை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிடுவதுடன், மண்ணாய்வுப் பரிந்துரைப்படி பயிரின் தேவையறிந்து உரமிட வேண்டும். இல்லையெனில், 54 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை ஏக்ககருக்கு இட வேண்டும்.
  • நடவு செய்த 25ஆவது நாளில் 27 கிலோ தழைச்சத்து, 45ஆவது நாளில் 13.5 கிலோ தழைச்சத்தை மேல் உரமாக இட வேண்டும்.
  •  விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் போதிய ஈரம் இருக்கும்போது பயறு வகைப் பயிர்கள் ஊடுபயிர் செய்யாத நிலையில், ஏக்கருக்கு 200 கிராம் அட்ரசின் களைக்கொல்லியை 360 லிட்டர் நீரில் கலந்து பின்னோக்கியோ அல்லது பக்கவாட்டில் நடந்தவாறோ தெளிக்க வேண்டும்.
  • விதைத்த முதல் வாரத்திலிருந்து நான்கு வாரங்கள் வரை பயிரை குருத்து ஈ தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 5 கருவாட்டுப் பொறிகளை வயலில் வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மீதைல் டெமெடான், டைமித்தோயேட், வேப்பங் கொட்டைச்சாறு கரைசல் அல்லது பூச்சிகொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  •  தண்டு துளைப்பான்களின் தாக்குதல் 20ஆம் நாளில் தொடங்கி விடுவதால், 30 முதல் 40 நாள்கள் குருத்து காய்வது தெரியும். முட்டையிலிருந்து வெளிவந்த புழுக்கள் செடியின் குருத்துப் பாகத்துக்கு ஊர்ந்து சென்று பயிரின் குருத்தை உண்பதால், தாக்கப்பட்ட பயிரின் குருத்து வாடிவிடும். இதனைக் கட்டுப்படுத்த குயினால்பாஸ் 5 சதக் குருணை 6 கிலோ அல்லது கார்பரில் 4 சதக் குருணை 8 கிலோ மருந்தை மணலுடன் கலந்து விதைத்ததிலிருந்து 20 நாளில் குருத்தில் இட வேண்டும்.
  •  மக்காச் சோளக் கதிர் மணி பிடிக்கும் தருணத்தில் கதிர் புழுக்கள் அவற்றை உண்டு வளர்வதால், கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்பரில் 10 சதத் தூள் 10 கிலோ அல்லது கார்பரில் நனையும் தூள் 400 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி அழிக்க வேண்டும்.

இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்றார் பாஸ்கர்.

 

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *